மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஆராய்ச்சிகளை முன்னேற்ற இந்தியா உறுதியுடன் உள்ளது: ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய கல்வி இணையமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார் உரை

Posted On: 06 AUG 2021 5:14PM by PIB Chennai

ஆராய்ச்சிகளை முன்னேற்றவும், இளைஞர்களின் திறனை அதிகரிக்கவும், இந்தியா  உறுதியுடன் உள்ளது  என ஜி20 அமைச்சர்களின் கூட்டத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்கார் பேசினார்.

கல்வி ஆராய்ச்சிகள் குறித்து, ஆலோசிக்க  ஜி20 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை  இத்தாலி நேரடியாகவும், காணொலி காட்சி மூலமும் இன்று  நடத்தியது.

இதில் ஜி20 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்று, டிஜிட்டல் முறையில் ஆய்வு நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவதை அதிகரித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்கார் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.  மத்திய கல்வித்துறை இணையமைச்சர்கள் திருமதி அன்னபூர்ணா தேவி, டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், உயர்கல்வித்துறை செயலாளர் திரு அமித் காரே மற்றும் கல்வித்துறை மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு சுபாஷ் சர்கார் பேசியதாவது:

ஆராய்ச்சிகளை முன்னேற்றவும், இளைஞர்களின் திறனை அதிகரிக்கவும், ஜி20 நாடுகளுடன் இணைந்து செயல்படுவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. பொதுவான பிரச்சினைகளுக்கு, ஆதாரம் அடிப்படையிலான தீர்வுகளை காண்பதில் ஜி20 நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை இந்தியா கடந்தாண்டு தொடங்கியது. இது தேசிய ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

பள்ளிப் பாடத்திட்டத்தின் 6வது கிரேடு முதல் செயற்கை நுண்ணறிவை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய பொறியியல் படிப்புகளை பிராந்திய மொழிகளில் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் இதர நாடுகள் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சியை கூட்டாக வளர்க்கும் திட்டங்களுக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது. 

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு சுபாஷ் சர்கார் பேசினார்.

அதன்பின் உயர் கல்வியில் ஆராய்ச்சியை அதிகரிப்பதற்கான பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743240

*****************



(Release ID: 1743404) Visitor Counter : 146