ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு: மாநிலங்களவையில் தகவல்

Posted On: 06 AUG 2021 12:28PM by PIB Chennai

நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்நலத்துறை அமைச்சர்  திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2ம் தேதி வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. 2025, மார்ச் மாதத்துக்குள் 10,500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும். அரசு மருத்துவமனை வளாகங்களில், கடந்த 2ம் தேதி வரை  1,012 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.  மக்கள் மருந்தக கடை உரிமையாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: 

கொவிட் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ், இந்திய கொவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு  அமல்படுத்தி வருகிறது. இதன்படி வரும் மாதங்களில், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க  பாரத் பயோக்டெக் நிறுவனம் மற்றும் 3 அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உள்ள கொவிட் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம், தடுப்பூசி கொள்முதலுக்கான ஆர்டருக்கு 100 சதவீத தொகையை முன் பணமாக வழங்கியுள்ளது.

உரங்களுக்கு கூடுதல் மானியம் ரூ.14,775 கோடி அறிவிப்பு:

பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்  உரங்கள் மற்றும் அவற்றுக்கான மூலப் பொருட்களின் சர்வதேச விலை சமீபத்தில் அதிகரித்தது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் கஷ்டங்களை தவிர்க்க, டை அம்மோனியம் பாஸ்பேட்(டிஏபி) பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்  உரங்களுக்கு  மத்திய அரசு கூடுதலாக ரூ.14,775 கோடி மானியத்தை அறிவித்தது. அதோடு யூரியாவின் அதிகபட்ச விலை 45 கிலோ மூட்டைக்கு வரி நீங்கலாக ரூ.242 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

உற்பத்தியை அதிகரிக்கும் நானோ யூரியா:

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) தயாரித்த நானோ நைட்ரஜன் யூரியாக்களின் பரிசோதனை, 7 மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின்  ஆராய்ச்சி மையங்களில் நெல், கோதுமை, கடுகு, சோளம், தக்காளி, முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டது. இதில் உற்பத்தி அதிகமாக இருந்ததும் நைட்ரஜன் சேமிப்பு 50 சதவீதம் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743092

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743090

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743088

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743087

*****************



(Release ID: 1743337) Visitor Counter : 254