வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் மெட்ரோ ரயில்/பிராந்திய துரித போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது: அமைச்சர்

Posted On: 04 AUG 2021 2:38PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு கௌஷல் கிஷோர், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நகர்ப்புற போக்குவரத்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவதால், மெட்ரோ ரயில் உள்ளிட்ட நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடக்கம், உருவாக்கம் மற்றும் நிதிக்கு மாநிலங்களே பொறுப்பு. இருந்த போதிலும், மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

தற்சமயம், தில்லியின் தேசிய தலைநகர் பகுதி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பிகார் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில்/பிராந்திய துரித போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021 ஜூலை 23 அன்றைய நிலவரப்படி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நிறுவியுள்ளன.

பல்வேறு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில், 2021 ஜூலை 23 அன்றைய நிலவரப்படி, 67,669 ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் 52,284 ரியல் எஸ்டேட் முகவர்கள் ரெராவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நுகர்வோரின் குறைகளை தீர்ப்பதில் ரெரா சிறப்பாக செயல்படுகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2021 ஜூலை 23 அன்றைய நிலவரப்படி, 70,601 புகார்களுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்களால் தீர்வு காணப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள 1,731 அங்கீகாரம் பெறாத காலனிகளில் வசிக்கும் மக்களின் சொத்து உரிமைகளுக்கு அங்கீகாரம் தருவதற்காக 2019 அக்டோபரில் பிரதமரின் உதய் திட்டம் அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 7,576 பத்திரங்கள் மற்றும் அங்கீகார சீட்டுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742257

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742259

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742258



(Release ID: 1742415) Visitor Counter : 179