இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நாட்டில் விளையாட்டுத்துறையை வளர்க்க பல திட்டங்கள்: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் தகவல்

Posted On: 02 AUG 2021 3:23PM by PIB Chennai

நாட்டில் விளையாட்டுத்துறையை வளர்க்க பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகமத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் திரு அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மேம்பாட்டுக்காக, ஆண்டுக்கு ஒரு வீரருக்கு ரூ.6.28 லட்சம் வழங்கப்படுகிறது.

* நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்களை அமைக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் 360 கேலோ இந்தியா மையங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

* நாடு முழுவதும் இதுவரை, 236 விளையாட்டு அகாடமிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

ஊரகப்பகுதிகள், பழங்குடியின பகுதிகள், பிற்படுத்தப்பட்ட பகுதிகள் உட்பட நாட்டில் கீழ்கண்ட  திட்டங்களை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது: -

1. கேலோ இந்தியா திட்டம், 2. தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு உதவி 3. சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் 4. தேசிய விளையாட்டு விருதுகள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்; 5. பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய விளையாட்டு நல நிதி; 6) தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி; மற்றும் (7) இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு பயிற்சி மையங்களை இயக்குவது.

இந்த திட்டங்கள் மூலம் பயனடைபவர்களில் பெரும்பாலானோர், ஊரக, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள். வீராங்கனைகளுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் தங்குமிடம் வசதிகளுடன் வழக்கமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தேசிய விளையாட்டு கல்வி வாரியத்தின்  (NSEB) நோக்கம்:

* விளையாட்டுகளில் அதிகளவிலான பங்களிப்பை ஊக்குவித்தல்.

* இளமையிலேயே விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பது.

* விளையாட்டுக்களால், கல்வியில் இழப்பு ஏற்பட வழிவகுக்காது என்ற உறுதியை விளையாட்டு துறையினருக்கும் பெற்றோர்களுக்கும் அளிப்பது. வேலைவாய்ப்புகளை அளிப்பது.

* முறையான வழியில் விளையாட்டு தொடர்பான மாற்று வேலை வாய்ப்புக்களை ஊக்குவித்தல்.

* விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மனநல மருந்துவர்கள், உடற்கூறு பயிற்சியாளர்களை ஈடுபடுத்துதல்.

•  விளையாட்டில் ஆர்வத்தையும், பங்களிப்பை ஊக்குவிக்கும் சிறந்த வழிகளை உருவாக்குவதன்  மூலம் விளையாட்டை மேம்படுத்துதல்.

அடிமட்டத்திலிருந்து, உயர் கல்வி வரை விளையாட்டை வளர்த்து, அதில் சிறந்து விளங்கும் வாய்ப்புகளை அளிப்பதுதான் தேசிய விளையாட்டு கல்விவாரியத்தின் நோக்கம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741491

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741490

*****************(Release ID: 1741600) Visitor Counter : 295