பிரதமர் அலுவலகம்

தேசிய கல்விக்கொள்கை 2020, முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கல்வியாளர்களிடம் பிரதமர் உரை


இந்நிகழ்வை குறிக்கும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் தொடங்கி வைத்தார்

தேசிய வளர்ச்சிக்கான ‘மகாயாக்யா’-வில் தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய காரணியாகும்: பிரதமர்

நாடு நமது இளைஞர்களுடனும் மற்றும் அவர்களின் எண்ணங்களுடனும் முழுவதுமாக உள்ளது என புதிய கல்விக் கொள்கை உறுதியளிக்கிறது : பிரதமர்

புதிய கல்விக் கொள்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் மனஅழுத்தம் அற்ற தன்மை போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன: பிரதமர்

8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், 5 இந்திய மொழிகளில் கல்வி வழங்குவதை தொடங்குகின்றன: பிரதமர்

தாய்மொழி வழியிலான கல்வி ஏழை, ஊரக மற்றும் பழங்குடியின பின்னணி கொண்ட மாணவர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்: பிரதமர்

Posted On: 29 JUL 2021 6:26PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஒராண்டு நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கைகளை உருவாக்கியவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.  கல்வித்துறையில் பல நடவடிக்கைகளையும் அவர் தொடங்கி வைத்தார். 

புதிய கல்விக் கொள்கை ஓராண்டு நிறைவு செய்ததற்காக நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்கொவிட்-19 தொற்று ஏற்பட்ட சிக்கலான நேரத்திலும், புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கொள்கை வகுப்பாளர்களின் கடின உழைப்பை அவர் பாராட்டினார்.  விடுதலையின் அம்ரித் மகோத்சவ ஆண்டின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியமான தருணத்தில், புதிய கல்விக் கொள்கை முக்கிய பங்காற்றும் என கூறினார். நமது எதிர்கால முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி, இன்றைய இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி மற்றும் வழிகாட்டுதல் அளவை சார்ந்தது என பிரதமர் கூறினார்.

 ‘‘தேசிய வளர்ச்சியின் மகாயாக்யாவில்புதிய கல்விக் கொள்கை முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்’’ என பிரதமர் கூறினார்.

கொரோனா தொற்று கொண்டு வந்த மாற்றத்தையும், மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை, எப்படி இயல்பாக மாறியது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.  திக்‌ஷா இணையதளம்  2,300 கோடிக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது திக்‌ஷா மற்றும் ஸ்வயம் இணையதளத்தின் பயன்பாட்டுக்கு சான்றாக உள்ளன.

சிறு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கொண்ட முன்னேற்றங்களை பிரதமர் குறிப்பிட்டார்.  இதுபோன்ற நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டதை அவர் எடுத்துக் கூறினார். ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தொடக்க நிறுவனங்கள் போன்ற துறைகளில் இளைஞர்களின் முயற்சிகள் மற்றும்  தொழில்துறை 4.0வில் அவர்களின் தலைமை ஆகியவற்றை அவர் பாராட்டினார்.  இளைய தலைமுறையினர், தங்கள் கனவுகளுக்கு ஏற்ற சூழலை பெற்றால், அவர்களின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என பிரதமர் கூறினார். இன்றைய இளைஞர்கள், தங்கள் வாழ்க்கை முறை மற்றும் அவர்களது உலகத்தைதங்கள் சொந்த விருப்பப்படி தீர்மானிக்க விரும்புகின்றனர் என அவர் கூறினார். அவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து வெளிப்பாடு மற்றும் சுதந்திரம் தேவை. இந்த நாடு, நமது இளைஞர்களுடனும் அவர்களது எண்ணங்களுடனும் முழுவதுமாக உள்ளது என்பதை புதிய கல்விக் கொள்கை உறுதியளிக்கிறது.

இன்று தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டம், மாணவர்களை எதிர்காலத்துக்கு ஏற்றவகையில் மாற்றும் மற்றும் செயற்கை நுண்ணறிவால் வழிநடத்தப்படும் பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும். அதேபோல, தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு ( National Digital Education Architecture, (NDEAR)  மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு (NETF) ஆகியவை நாடு முழுவதும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு வழங்குவதில் முக்கியமானதாக இருக்கும் என பிரதமர் கூறினார். 

புதிய கல்விக் கொள்கையில் வெளிப்படைத்தன்மை, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். கொள்கை அளவில் வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும், மாணவர்களுக்கான வாய்ப்புகளிலும் வெளிப்படைத்தன்மை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.  ஒரு பட்டப்படிப்பில் பலமுறை சேர்ந்து விலகும் முறை(Academic Bank of Credit ),   ஒரே வகுப்பு மற்றும் ஒரே பாடப்பிரிவில்  இருக்கவேண்டிய  கட்டுப்பாடுகளில் இருந்து மாணவர்களை விடுவிக்கும்.  அதேபோல், நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி முறைகள் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவரும். இது பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில், மாணவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். 'கற்றல் நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு' ('Structured Assessment for Analyzing Learning levels', SAFAL) தேர்வு பயத்தை போக்கும்.  இந்த புதிய திட்டங்கள், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் திறன் உடையது என பிரதமர் வலியுறுத்தி கூறினார்.

மகாத்மா காந்தியை குறிப்பிட்ட பிரதமர், உள்ளூர் மொழிகள் வாயிலாக கல்வி கற்பதன்  முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காளம் என்ற 5 இந்திய மொழிகளில் கல்வி வழங்க தொடங்கியுள்ளன என பிரதமர் தெரிவித்தார்.  இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளை 11 மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக் கல்விக்கு அளிக்கப்படும் இந்த வலியுறுத்தல், ஏழை, ஊரக மற்றும் பழங்குடியின பின்னணி கொண்ட மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.  ஆரம்ப கல்வியில் கூட தாய்மொழி வழி கல்வியை ஊக்குவிக்கும் வித்யோ பிரவேஷ்திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இது முக்கிய பங்காற்றும்.

இந்திய சைகை மொழிக்கு, முதல் முறையாக பாட மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதை ஒரு மொழியாக மாணவர்கள் படிக்க முடியும். 3 லட்சத்துக்கு  மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு சைகை மொழி தேவைப்படுகிறது. இது, இந்திய சைகை மொழிக்கு மிகப் பெரிய உந்துதலை அளிக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் என பிரதமர் கூறினார்.

ஆசிரியர்களின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், உருவாக்க நிலை முதல், அமல்படுத்தும் நிலை வரை, புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்கள் தீவிர பங்காற்றினர்  என தெரிவித்தார். இன்று தொடங்கிய நிஷ்தா 2.0, ஆசிரியர்களின் தேவைக்கேற்ற பயிற்சியை அளிக்கும் மற்றும் அவர்களால் தங்கள் ஆலோசனைகளை கல்வித்துறைக்கு தெரிவிக்க முடியும் என பிரதமர் கூறினார்.

உயர்கல்வியில் எப்போது வேண்டுமானாலும், சேர்ந்து விலகும் ‘Academic Bank of Credit’ என்ற முறை, பிராந்திய மொழிகளில் முதலாம் ஆண்டு பொறியியல் பாடத் திட்டங்கள் மற்றும் உயர்கல்வியை சர்வதேசமயமாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.  தொடங்கப்படவுள்ள திட்டங்களில், கிரேடு 1 மாணவர்களுக்கு 3 மாத விளையாட்டு அடிப்படையிலான பள்ளிபாடத் திட்டம்; இந்திய சைகை மொழியை பாடமாக கற்றல்; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) உருவாக்கிய ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி திட்டம் நிஷ்தா 2.0;  சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு, கற்றல் நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு ( SAFAL); செயற்கை நுண்ணறிவுக்கான பிரத்தியேக இணையதளம் ஆகியவை உள்ளன.

இந்நிகழ்ச்சியில் தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு (NDEAR) மற்றும் தேசிய தொழில்நுட்ப அமைப்பு (NETF) ஆகியவையும்  தொடங்கப்பட்டது.

*****************



(Release ID: 1740467) Visitor Counter : 456