எரிசக்தி அமைச்சகம்

இந்தியாவில் முதல்முறையாக லே பகுதியில் பசுமை ஹைட்ரஜன் எரிப்பொருள் நிலையத்தை அமைக்க என்டிபிசி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது


இந்த திட்டம் அங்கு கரியமில வாயு வெளியேற்றாத போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும்

பிரத்தியேக 1.25 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமும் லே பகுதியில் ஏற்படுத்தப்படவுள்ளது

Posted On: 29 JUL 2021 3:23PM by PIB Chennai

என்டிபிசி எனப்படும் தேசிய அனல்மின் கழகத்தின் துணை நிறுவனமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட் (NTPC REL) , நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிப்பொருள் நிலையத்தை லடாக்கின் லே பகுதியில் அமைக்க உள்நாட்டு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதற்காக ஏல நடவடிக்கைகள் வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஏற்கனவே என்டிபிசியின் வித்யுத் வியாபார் நிகாம் நிறுவனம் (NVVN) சார்பாக லடாக்கில் கரியமில வாயு வெளியேற்றாத மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இதனை என்டிபிசி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (NTPC REL) மற்றும் வித்யுத் வியாபார் நிகாம் நிறுவனம் இணைந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தவுள்ளன. ஹைட்ரஜன் எரிப்பொருள் நிலையம் முழுக்க முழுக்க பசுமையான முறையில் அமைய என்டிபிசி ரெல் சார்பாக 1.25 மெகாவாட் திறன் கொண்ட பிரத்தியேக சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது. சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் ஒரு மாத காலத்துக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உயரமான பகுதிகளில் பசுமையான ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை உருவாக்க என்டிபிசி ரெல் சார்பாக லடாக் யூனியன் பிரதேசத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக  முடிக்கப்பட்டால் லே பகுதியைச் சுற்றி கரியமில வாயு வெளியேற்றாத போக்குவரத்து முறை செயல்படுத்தப்படும், மிகவும் விருப்பத்துக்கு உரிய இத்துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும்.

இத்திட்டம் அப்பகுதியில் சுத்தமான மற்றும் பசுமையான சூழலை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய நடவடிக்கையாகும். இது வெற்றிகரமாக முடிக்கப்படும் பட்சத்தில் லடாக்கில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்படுவதோடு, அங்கு சுற்றுலாவுக்கு மிகப் பெரிய ஊக்கமாகவும் அமையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740299

*****************

 



(Release ID: 1740408) Visitor Counter : 246