சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 இறப்புகளை சரியாகப் பதிவு செய்ய, உலகம் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஐசிடி-10 விதிமுறைகள் அடிப்படையிலான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழிகாட்டுதல்களை இந்தியா பின்பற்றுகிறது

Posted On: 27 JUL 2021 3:03PM by PIB Chennai

இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு கொவிட் அலைகளில் 2.7 முதல் 3.3 மில்லியன் கொவிட் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, மெட்ரிவிக்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மதிப்பீடு செய்யப்படாத ஆய்வறிக்கை அடிப்படையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மூன்று வெவ்வேறு விதமான தரவுகளை மேற்கோள்காட்டி, ஒரு ஆண்டில் குறைந்தது 27 சதவீத உயிரழப்புகள் அதிகமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அந்த அறிக்கை, இந்த கொவிட் இறப்பு வீதம், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட அளவைவிட 7 முதல் 8 மடங்கு அதிகம் இருக்கலாம் எனவும் இந்த கூடுதல் இறப்புகள் எல்லாம் கொவிட் உயிரிழப்புகளாக இருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இது போன்ற தவறான தகவல்கள் முற்றிலும் மோசமானவை.

கொவிட் தரவு மேலாண்மை அணுகுமுறையில் மத்திய அரசு வெளிப்படையாக உள்ளது எனவும் கொவிட் உயிரிழப்புகளை பதிவு செய்ய வலுவான முறை ஏற்கனவே உள்ளது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. கொவிட் உயிரிழப்பு தொடர்பாக அண்மைத் தகவல்களை தெரிவிக்கும் பொறுப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் அளிக்கும் தகவல்களைத் தவிர, நாட்டில் உள்ள சிவில் பதிவு முறை (சிஎஸ்ஆர்) அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்கிறது. இது தொடர் பணி என்பதால், இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, இதன்  முடிவுகள் அடுத்தாண்டு வெளியிடப்படும்.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் படி கொவிட் உயிரிழப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் ஏற்படும் உயரிழப்புகளை மாநிலங்கள் தணிக்கை செய்து, விடுபட்ட உயிரிழப்புகளை தெரிவிக்க வேண்டும் என மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இறப்புகள் பதிவில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கொவிட்-19 தொடர்பான இறப்புகளை, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஐசிடி-10 விதிமுறைப்படி சரியாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது.

கொவிட் 2-ம் அலை உச்சத்தில் இருந்தபோது, கொவிட் சிகிச்சை மேலாண்மையில் கவனம் செலுத்தப்பட்டதால், கொவிட் உயிரிழப்புகளை சரியாகப் பதிவு செய்வது தாமதமாகியிருக்கலாம்பின்னர் இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் சரிசெய்யப்பட்டதுஇறப்பு பதிவு முறை இந்தியாவில் வலுவாக உள்ளதால், இறப்புகள் பதிவு தவறுவதற்கு வாய்ப்பில்லை.

கொவிட் தொற்று போன்ற நீண்ட சுகாதார நெருக்கடி காலத்தில், இறப்பு வீதம் பதிவில் சில வேறுபாடுகள் இருப்பது சகஜம். இது போன்ற சம்பவங்களுக்குப்பின், ஆதாரபூர்வ வட்டாரங்களில் இருந்து உயிரிழப்பு குறித்த தரவுகள் கிடைக்கும்போது, பொதுவாக ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய ஆய்வுகளுக்கான வழிமுறைகள் நன்கு நிறுவப்பட்டுள்ளன, தரவு ஆதாரங்கள் இறப்புகளைக் கணக்கிடுவதற்கான சரியான அனுமானங்களாக வரையறுக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக்  காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739439

-----



(Release ID: 1739546) Visitor Counter : 274