சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19: பொய்களும் உண்மைகளும்

Posted On: 22 JUL 2021 7:41PM by PIB Chennai

கொவிட் இரண்டாம் தொற்று நெருக்கடியின் போது 13,000 பயன்படுத்தப்படாத சுவாசக் கருவிகளை மத்திய அரசு வைத்திருந்ததுஎன சமீபத்தில் வெளியான ஊடக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 13,000 சுவாசக் கருவிகளை மாநிலங்களுக்கு வழங்காமல் மத்திய அரசு வைத்திருந்ததாக அந்த செய்தி கூறியது.

அந்த செய்தி அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று தெளிவுப்படுத்தப் படுகிறது. தேவைப்பட்ட மாநிலங்களுக்கு வழங்காமல் எந்த சுவாசக் கருவியையும் மத்திய அரசு தன் வசம் வைத்திருக்கவில்லை. அனைத்து சுவாசக் கருவிகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முறையாக அனுப்பப்படுகின்றன. எனவே, அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் உண்மைகளின் அடிப்படையிலானவை அல்ல என்று தெளிவாகிறது.

பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே சுவாசக் கருவிகளை வாங்குவதற்கான ஆர்டரை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் வழங்கியிருந்தது. 2020 மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 வரை 58,850 சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை அரசு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் நமது நாட்டிலேயே தயாரிக்கப்படும் சுவாசக் கருவிகளாகும்.

அதிகாரமளிக்கப்பட்ட குழு-3-ன் பரிந்துரைகளின் அடிப்படையில், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த ஆர்டர்கள் வழங்கப்பட்டன.

சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர்  தலைமையிலான நிபுணர்கள் குழு சுவாசக் கருவிகளை முறையாக பரிசோதனை செய்த பின்னர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அவை நாடு முழுவதும் அனுபப்பட்டன.

2020 நவம்பர் வரை மாநிலங்கள் கேட்ட 35,398 சுவாசக் கருவிகளும் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு விட்டன. நவம்பரில் இருந்து 2021 மார்ச் வரை, சுவாசக் கருவிகளுக்கான தேவை 996 ஆக மட்டுமே இருந்ததால், கூடுதலாக அவை மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

மேற்கண்ட சுவாசக்கருவிகளில் அதிக எண்ணிக்கையிலானவை மாநிலங்களால் பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால், அவற்றை முறையாக பயன்படுத்துமாறு 2021 ஏப்ரல் 11 அன்று மத்திய சுகாதார செயலாளர் சில மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதைத் தொடர்ந்து நினைவூட்டல்களும் பல முறை அமைச்சகத்தால் அனுப்பப்பட்டன.

எனவே, 13,000 பயன்படுத்தப்படாத சுவாசக் கருவிகளை மத்திய அரசு வைத்திருந்தது எனும் செய்தி உண்மைக்கு புறம்பானது ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737876

----(Release ID: 1737901) Visitor Counter : 99