உள்துறை அமைச்சகம்

குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் கலந்து கொண்டார்

Posted On: 16 JUL 2021 7:44PM by PIB Chennai

குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.

சீரமைக்கப்பட்ட காந்திநகர் கேப்பிடல் ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர், காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார்.

காணொலி மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் மக்களுக்கும், குறிப்பாக காந்திநகர் மக்களவை தொகுதியை சேர்ந்த மக்களுக்கும் இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறினார்.

35 வருடங்களுக்கு பிறகு காந்திநகர் ரயில் நிலையத்தின் முழு புனரமைப்பு பிரதமரின் கரங்களின் மூலம் நடைபெறுவதாக கூறிய திரு அமித் ஷா, திரு நரேந்திர மோடி பிரதமரான பின்னர் குஜராத்தில் பல்வேறு திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி உள்ளதாக கூறினார்.

சமீபத்தில், உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை உலக கவனத்தை பெற்றதற்கு பின்னர், எட்டு முக்கிய நகரங்களை இணைக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டது. காந்திநகரை பகவான் விஸ்வநாதரின் நகரமான வாரணாசியுடன் இணைக்கும் பணி இன்று நிறைவடைந்துள்ளது.

அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் அறிவியலில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடங்களாக அமையும் என்று திரு அமித் ஷா கூறினார். 11 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அழகான மற்றும் சுவாரசியமான முறையில் எந்திரவியல் குறித்து சிறு குழந்தைகளுக்கு விளக்கும் வகையில் ரோபோடிக்ஸ் காட்சியகம் அமைந்துள்ளது.

உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் தமது தொகுதியான காந்திநகரில் செயல்படுத்தப்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். குஜராத் மற்றும் காந்திநகர் தொகுதி மக்களின் சார்பாக பிரதமருக்கு தமது இதயப்பூர்வ நன்றியை தெரிவிப்பதாக திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736265

*****************



(Release ID: 1736287) Visitor Counter : 215