நிதி அமைச்சகம்

2020-21 ஆம் நிதியாண்டில் போலி உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்தி ரூ. 35,000 கோடி மோசடி செய்ததாக 8000 வழக்குகள் பதிவு

Posted On: 13 JUL 2021 5:12PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பயனளிக்கக்கூடிய உள்ளீட்டு வரிக் கடனைத் தவறாகப் பயன்படுத்துவதே சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பரவலான மோசடியாகும். தொடக்க காலம் முதலே இதுபோன்ற வழக்குகளை மத்திய மறைமுக வரி வாரியம் கண்டறிந்து வருகிறது. 2020-21 ஆம் நிதி ஆண்டில் போலி உள்ளீட்டு வரிகடனின் மூலம் ரூ. 35000 கோடி அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக சுமார் 8000 வழக்குகளை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலங்களும், சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகமும் பதிவு செய்துள்ளன. கணக்கு தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட 14 தொழில் வல்லுநர்கள் உட்பட 426 பேர் கைது செய்யப்பட்டனர். போலியான உள்ளீட்டு வரிக் கடன், அதிகளவில் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு போலியான சரக்கு மற்றும் சேவை வரி விலைப்பட்டியலுக்கு எதிரான தேசிய அளவிலான சிறப்புத் திட்டம் 2020, நவம்பர் 9 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றும் தொடர்கிறது.

எனினும் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக கொவிட் பெருந்தொற்றின் பரவல் தீவிரமாக இருந்ததனால் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருதி, இந்தத் திட்டம் சற்று தொய்வடைந்த போதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டதால், தேசிய அளவில் இந்தத் திட்டம் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மோசடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை நடப்பு மாதத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்ட 1200 நிறுவனங்களை உள்ளடக்கிய 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 பேர் மத்திய மறைமுக வரி வாரியத்தின் கீழ் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலங்கள், சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கு நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் இதர அரசு துறைகளிடமிருந்து சேகரித்தத் தகவல்களை மத்திய மறைமுக வரி வாரியம் பயன்படுத்தி வருகிறது.  நாடு தழுவிய திட்டத்தினால் சட்டரீதியான நடவடிக்கைகளுடன் வருவாயும் அதிகரித்துள்ளது. ஏராளமான பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் மீதும் இதுபோன்ற மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735095

*****************



(Release ID: 1735136) Visitor Counter : 268