நிதி அமைச்சகம்

நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் பூடான் நிதி அமைச்சர் திரு லியோன்போ நாம்கே இணைந்து பிம்-யூபிஐ-யை பூடானில் அறிமுகப்படுத்தினர்

Posted On: 13 JUL 2021 4:04PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் பூடான் நிதி அமைச்சர் திரு லியோன்போ நாம்கே ஷெரிங்க் ஆகியோர் இணைந்து பிம்-யூபிஐ-யை பூடானில் இன்று பிற்பகல் காணொலி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகப்படுத்தினர்.

நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரட், பூடான் அரசு நிதி ஆணைய ஆளுநர் திரு தாஷோ பெஞ்ஜோர், நிதி சேவைகள் துறை செயலாளர் திரு தெபசிஷ் பாண்டா, பூடானுக்கான இந்திய தூதர் திருமிகு ருச்சிரா காம்போஜ், இந்தியாவுக்கான பூடான் தூதர் ஜெனரல் வி நாம்க்வேல் மற்றும் என்பிசிஐ நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு திலிப் ஆஸ்பே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் அடிப்படையில் பூடானில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தனது சாதனையை மதிப்புமிக்க அண்டை நாட்டுடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா பெருமைப்படுவதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பிம் யூபிஐ பெரிதும் பயன்பட்டதாகவும், 100 மில்லியனுக்கும் அதிகமான யூபிஐ குறியீடுகள் கடந்த 5 வருடங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார். ரூ 41 லட்சம் கோடி மதிப்புடைய 22 பில்லியன் பரிவர்த்தனைகளை 2020-21-ம் ஆண்டு பிம் யூபிஐ செயல்படுத்தியுள்ளது.

பிம்-யூபிஐ-யை சேவைகளை பூடானில் தொடங்கியதற்காக இந்திய அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்த பூடான் நிதி அமைச்சர் திரு லியோன்போ நாம்கே ஷெரிங்க், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருவதாக தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு பூடானுக்கு அரசு முறை பயணமாக மாண்புமிகு இந்திய பிரதமர் சென்றிருந்த போது இரு நாடுகளும் மேற்கொண்ட உறுதியை இன்றைய அறிமுகம் நிறைவு செய்துள்ளது. அந்த பயணத்தை தொடர்ந்து, இரு நாடுகளிலும் ரூபே அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை இந்தியா மற்றும் பூடான் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

பிம்-யூபிஐ இன்று பூடானில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இரு நாடுகளின் கட்டண உள்கட்டமைப்பு இரண்டற கலந்து, இந்தியாவில் இருந்து பூடானுக்கு செல்லும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பலனளிக்கும்.

நமது உடனடி அண்டை நாடுகளில் பிம் செயலி மற்றும் யுபிஐ தரநிலைகளை ஏற்றுக்கொண்டுள்ள முதல் நாடாக பூடான் திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735075

*****************



(Release ID: 1735105) Visitor Counter : 288