விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின்(நபார்டு) 40வது நிறுவன தினம்: இணைய கருத்தரங்கில் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் உரை
Posted On:
12 JUL 2021 6:47PM by PIB Chennai
நபார்டு வங்கியின் 40வது நிறுவன தினத்தை முன்னிட்டு, இணைய கருத்தரங்கில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் முன்னேற்றம்தான் மத்திய அரசின் முக்கிய குறிக்கோள். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.35 லட்சம் கோடி, 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்கான செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அரசு முகமைகள் மூலமான கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
மாநில சந்தை சங்கங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கியதன் மூலம், சாதனை கொள்முதலில் நபார்டு வங்கியும் முக்கிய பங்காற்றியது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன் வழங்குவது மிகவும் முக்கியம். கொரோனா தொற்று நேரத்திலும் கூட பிரதமரின்-கிசான் திட்ட பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக மேற்கொண்டது. நடப்பு நிதியாண்டின் நிதிநிலையறிக்கையில், விவசாயத்துறைக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சந்தையையும் மத்திய அரசு சீர்திருத்தியுள்ளது. தற்போது, ஆயிரம் ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை(இ-நாம்) மண்டிகள் உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும், ஆயிரம் மண்டிகள் இந்த இணையதளத்தில் இணைக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்த ‘ஆபரேசன் கிரீன்ஸ்’ மற்றும் கிசான் ரயில் திட்டங்களும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
இவ்வாறு மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் கூறுகையில், ‘‘இந்திய வேளாண்துறை மற்றும் புத்தாக்கத்தின் வளர்ச்சிக்கு, தனியார் முதலீடுகள் தேவை’’ என்றார்.
நபார்டு தலைவர் டாக்டர் ஜி.ஆர்.சின்தாலா பேசுகையில், ‘‘பசுமை கட்டமைப்புக்கு தகுந்த முதலீடு தேவை. இது 2024-25ம் ஆண்டுக்குள் ரூ.18.37 லட்சம் கோடியாக இருக்கும். இதில் 7.35 லட்சம் கோடி, வேளாண் கட்டமைப்புக்காக வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734842
---
(Release ID: 1734888)
Visitor Counter : 345