பிரதமர் அலுவலகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் ஜூலை 13-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 11 JUL 2021 3:42PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுவார்.

போட்டிகளுக்கு முன்னதாக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் இந்தக் கலந்துரையாடல் அமையும். டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினரின் வசதிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர் அண்மையில் ஆய்வு செய்தார். நாட்டு மக்கள் அனைவரும் முழு மனதுடன் அவர்களுக்கு ஆதரவளிக்க முன்வருமாறு வலியுறுத்தியதுடன், மனதின் குரல் நிகழ்ச்சியில் வீரர்களின் எழுச்சியூட்டும் பயணங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணை அமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

இந்திய குழுவினர் பற்றி:

இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்வார்கள். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும். 

பங்கேற்பு அடிப்படையில் பல்வேறு குறிப்பிடத்தக்க முதல்முறை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.‌ வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவின் வாள்வீச்சு வீராங்கனை (திருமிகு பவானி தேவி) ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.  ஒலிம்பிக் தொடரில் பாய்மரப் படகு போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை திருமிகு நேத்ரா குமணன் பெற்றுள்ளார். திரு சாஜன் பிரகாஷ் மற்றும் திரு ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் நீச்சல் தரநிலையின் ஏ பிரிவில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீரர்கள் ஆவர்.

*****************

 


(Release ID: 1734603) Visitor Counter : 232