பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

திரு ஹர்தீப் சிங் புரி திரு ரமேஷ்வர் தெளி ஆகியோர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராகவும், இணை அமைச்சராகவும் பொறுப்பேற்பு

Posted On: 08 JUL 2021 1:27PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக திரு ஹர்தீப் சிங் புரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இணை அமைச்சராக திரு ரமேஷ்வர் தெளி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு அமைச்சராக இருந்த திரு தர்மேந்திர பிரதானும் இந்த நிகழ்வின்போது உடனிருந்தார்.

அப்போது பேசிய திரு புரி, “என் மீது நம்பிக்கை கொண்டு இந்த மிக முக்கிய அமைச்சகத்தின் அமைச்சராக பிரதமர் திரு நரேந்திர மோடி எனக்கு பொறுப்பு தந்துள்ளதற்கு மிகவும் பெருமை அடைகிறேன். திரு தர்மேந்திர பிரதானை போல் பணியாற்றுவது மிகவும் கடினம்.

இந்த அமைச்சகத்தின் செயல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அமைச்சகத்தில் உள்ள எரிசக்தி சார்ந்த விஷயங்கள் அபரிமிதமான சாத்தியக்கூறுகளையும் ஏராளமான சவால்களையும் உள்ளடக்கியுள்ளன. மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிசக்தி மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவது போன்றவை பிரம்மாண்ட வாய்ப்புகளை வழங்கும்.

5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேறும் வேளையில் எரிசக்தியின் கையிருப்பு மற்றும் பயன்பாடு மிகப்பெரும் முக்கியத்துவத்தைப் பெறும்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு இணங்க, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் நான் கவனம் செலுத்துவேன்.

இயற்கை எரிவாயுவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாகவும் நான் பணியாற்றுவேன்பிரதமர் அறிவித்தவாறு 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் முதன்மை எரிசக்திக் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்துவேன்.

கடந்த ஏழு ஆண்டுகளில் எனக்கு முன்பு இந்தப் பணியில் இருந்த திரு தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின் கீழ் இந்தத் துறையில் ஏராளமான சீர்திருத்தங்களும் முன் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை முன்னெடுத்துச் செல்வதுடன், பிரதமர், நம் நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யவும் நான் பாடுபடுவேன்”, என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733623

 

-----



(Release ID: 1733761) Visitor Counter : 162