சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கேரளா உள்பட 6 மாநிலங்களில் கொவிட் பாதிப்பு அதிகரிப்பு : மத்தியக் குழு விரைந்தது

Posted On: 02 JUL 2021 11:32AM by PIB Chennai

கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை, முழு அரசு மற்றும் சமுதாய அணுகுமுறையுடன் மத்திய அரசு வழிநடத்தி வருகிறது. கொவிட் மேலாண்மை நடவடிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளை வலுப்படுத்த, நிபுணர் குழுக்களை மத்திய அரசு அவ்வப்போது அனுப்பி வருகிறது.  இந்த குழுவினர் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஆலோசனை வழங்குவர்.

அதன்படி பன்நோக்கு ஒழுங்கு குழுக்களை, கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்று அனுப்பியுள்ளது. அவசரகால மருத்துவ நிவாரணப் பிரிவு துணை தலைமை இயக்குனர் டாக்டர் எல் ஸ்வஸ்திசரன் தலைமையிலான குழுவினர் மணிப்பூருக்கும், அகில இந்திய பொது சுகாதார மையத்தின் பேராசிரியர் டாக்டர் சஞ்ஜே சாதுகன் தலைமையிலான குழுவினர் அருணாச்சலப் பிரதேசத்துக்கும், டாக்டர் ஆர்.என். சின்ஹா தலைமையிலான குழுவினர் திரிபுராவுக்கும்பொது சுகாதார நிபுணர் டாக்டர் ருச்சி ஜெயின் தலைமையிலான குழுவினர் கேரளாவுக்கும், பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஏ. டான் தலைமையிலான குழுவினர் ஒடிசாவுக்கும்ராய்ப்பூர் எய்ம்ஸ் உதவி பேராசிரியர் டாக்டர் திபாகர் சாகு தலைமையிலான குழுவினர் சத்தீஸ்கருக்கும் செல்கின்றனர். கொவிட் கட்டுப்பாடு, மேலாண்மை மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த குழுவினர் உதவுவர்.

இந்த இரண்டு உறுப்பினர் குழுவில், மருத்துவர் ஒருவரும், பொது சுகாதார நிபுணர் ஒருவரும் இடம் பெறுவர். இந்த குழுவினர் உடனடியாக அந்தந்த மாநிலங்களுக்கு சென்று, கொவிட் மேலாண்மை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பர்.

கொவிட் பரிசோதனை, தொடர்புகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்புநடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, மருத்துவ ஆக்ஸிஜன் வசதி மற்றும் இதர வசதிகளை  கண்காணிப்பர். கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகளையும் இவர்கள் கண்காணிப்பர். இந்த குழுவினர் அந்தந்த மாநிலங்களில் நிலைமையை கண்காணித்து, தீர்வு நடவடிக்கைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவர்.  இந்த அறிக்கையின் நகல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் வழங்கப்படும்.

*****************



(Release ID: 1732252) Visitor Counter : 275