உள்துறை அமைச்சகம்

இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 72-வது பிரிவை சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் உரையாடல்

Posted On: 01 JUL 2021 7:00PM by PIB Chennai

இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 72-வது பிரிவை சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் இன்று உரையாடினார்.

இளம் காவல் அதிகாரிகளிடம் உரையாடிய திரு அமித் ஷா, எந்தவொரு நிறுவனத்திலும் அமைப்பு என்பது மிகவும் முக்கியம் என்றார். ஒரு அமைப்பில் இருப்பவர்கள் அதை வலுப்படுத்த பணியாற்றினால் தான் எந்தவொரு நிறுவனமும் வெற்றிகரமாக திகழ முடியும் என்று அவர் கூறினார். நிறுவனத்தின் அமைப்பை மேம்படுத்தினால், நிறுவனம் தானாக முன்னேறி சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார். நிறுவனத்தை அமைப்பு ரீதியானதாக மாற்றுவது வெற்றிக்கு மிகவும் முக்கியமானது என்று திரு ஷா கூறினார். இன்றைய தேவைகளுக்கு ஏற்ப ஒரு அமைப்பின் இயந்திரங்களுக்கு பயிற்சி அளித்தால் தான் அமைப்பை மாற்ற முடியும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியம் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

நடவடிக்கையின்மை அல்லது அதீத நடவடிக்கை ஆகிய குற்றச்சாட்டுகள் காவல் துறை மீதிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இவற்றை தவிர்த்து நடவடிக்கைகளை நோக்கி மட்டும் காவல் துறை முன்னேற வேண்டும் என்று கூறிய அவர், நடவடிக்கை என்றால் நியாயமான, இயற்கையான நடவடிக்கை என்றும், காவலர்கள் சட்டத்தை புரிந்து கொண்டு சரியானதை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் இரும்பு மனிதருமான திரு சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டை ஒருமைப்படுத்தும் பணியை செய்ததாகவும், நவீன இந்தியாவை அவரது பங்களிப்பு இல்லாமல் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்றும் திரு ஷா கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த போது அனைத்திந்திய சேவைகள் குறித்த விவாதங்கள் அதிகளவில் நடைபெற்றதாகவும், நல்ல அனைத்திந்திய சேவைகள் நம்மிடம் இல்லை என்றால் ஒன்றியம் முடிந்துவிடும் என்றும் இந்தியா ஒற்றுமையாக இருக்காதென்றும் திரு சர்தார் பட்டேல் அப்போது கூறியதாகவும் அவர் தெரிவித்தார். எனவே கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவது உங்கள் கடமை என்பதை நீங்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அறிவியல் பூர்வமான விசாரணைக்கான தேவை குறித்து வலியுறுத்திய அமைச்சர், அறிவியல் பூர்வமான மற்றும் ஆதாரங்கள் அடிப்படியிலான விசாரணை நடைபெற்றால், அதிக மனிதசக்திக்கான தேவை குறையும் என்றார். தற்போதுள்ள பணியாளர்களை கொண்டு எவ்வாறு சிறப்பாக பணியாற்றலாம் என்பதற்கான திட்டத்தை காவல் துறை அதிகாரிகள் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் உண்டாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். சைபர் குற்றங்களோடு, பொருளாதார மற்றும் போதைப்பொருள் குற்றங்களை களையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்திந்திய சேவை அலுவலர்கள், குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள், விளம்பரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். விளம்பரத்தின் மீதான ஆர்வம் பணியை பாதிக்கும். தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களிடம் இருந்து விலகி இருப்பது கடினம் என்றாலும் கூட, காவல் அதிகாரிகள் அவற்றில் இருந்து விலகியிருந்து தங்களது கடமைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731993

----



(Release ID: 1732070) Visitor Counter : 243