பிரதமர் அலுவலகம்
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களிடம் பிரதமர் உரையாடினார்
பெருந்தொற்றின்போது அவர்களது சேவைகள் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தினார்
சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது: பிரதமர்
நமது மருத்துவர்கள், இந்த புதிய மற்றும் விரைவாக உருமாறும் தன்மையுடைய தொற்றைத் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தால் எதிர்கொண்டு வருகிறார்கள்: பிரதமர்
மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு உறுதி பூண்டுள்ளது: பிரதமர்
யோகாவின் பலன்கள் பற்றி ஆதாரப்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வலியுறுத்தல்
ஆவணமாக்கலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், விரிவான ஆவணங்களைத் தயாரிப்பதற்கு பெருந்தொற்று சிறப்பான தொடக்கப் புள்ளியாக அமையலாம் என்று பேச்சு
Posted On:
01 JUL 2021 3:37PM by PIB Chennai
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவ சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்டர் பிசி ராயின் நினைவாகக் கொண்டாடப்படும் இந்த தினம், நமது மருத்துவப் பணியாளர்களின் உயரிய கொள்கைகளைக் குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பெருந்தொற்றின் கடுமையான சவால்களின் போது சிறந்த சேவையை அளித்து வரும் மருத்துவர்களுக்கு 130 கோடி இந்தியர்களின் சார்பாக அவர் நன்றி தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று அவர் உரையாற்றினார்.
மருத்துவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், பெருந்தொற்றின்போது அவர்களது வீரமிக்க நடவடிக்கைகளை நினைவு கூர்ந்ததுடன், மனித சமூகத்திற்கு சேவையாற்றுகையில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். கொரோனா தொற்று முன்வைத்த அனைத்து சவால்களுக்கும் நமது விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தீர்வுகளைக் கண்டறிந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நமது மருத்துவர்கள், இந்த புதிய மற்றும் விரைவாக உருமாறும் தன்மையுடைய தொற்றைத் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தால் எதிர்கொண்டு வருகிறார்கள். நீண்ட காலமாக கவனிக்கப்படாத மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் அழுத்தத்திற்கு இடையேயும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் ஏற்பட்ட பாதிப்பும் உயிரிழப்பு வீதமும் கையாளக் கூடிய வகையிலேயே இன்னமும் உள்ளது. உயிரிழப்புகள் எப்போதுமே வலியைத் தரும், ஆனால் ஏராளமான உயிர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல்வேறு உயிர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு, கடுமையாகப் பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள ஊழியர்களே காரணம் என்று பிரதமர் கூறினார்.
மருத்துவத் துறையை வலுப்படுத்துவதில் அரசின் கவனம் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். தொற்றின் முதல் அலையின் போது சுகாதாரத் துறைக்காக சுமார் ரூ. 15,000 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சேவைகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 50,000 கோடி, கடன் உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு மொத்தம் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டதற்கு மாறாக 15 மருத்துவமனைகளுக்கான பணிகள் துவங்கியுள்ளன. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடம் ஒன்றரை மடங்கும், முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் 80% ம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
மருத்துவர்களின் பாதுகாப்பிற்கான அரசின் உறுதித்தன்மையை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் அமலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனுடன் கொவிட் போராளிகளுக்காக ஒரு இலவச காப்பீட்டுத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும், சரியான நடத்தை விதிமுறையை கடைப்பிடிக்கவும், மருத்துவர்கள் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மருத்துவப் பிரதிநிதிகளை அவர் பாராட்டினார். சுதந்திரத்திற்குப் பிறகான இறுதி நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டிய யோகாவை ஊக்குவிக்கும் இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார்.
கொவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் யோகாவின் பலன்கள் பற்றி ஆதாரபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள நேரம் ஒதுக்கிய மருத்துவர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். யோகாவின் பலன்கள் குறித்த ஆதாரப்பூர்வமான ஆய்வுகளை இந்திய மருத்துவ சங்கம் இயக்க கதியில் மேற்கொள்ள முடியுமா என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். யோகா பற்றிய ஆய்வுகள் சர்வதேச சஞ்சிகைகளில் வெளியிடப்படலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
மருத்துவர்களின் அனுபவங்களை ஆவணமாக்குவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். அனுபவங்களுடன் நோயாளிகளின் அறிகுறிகள், சிகிச்சை முறைகளும் விரிவாக ஆவணம் செய்யப்பட வேண்டும். பல்வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சைகளின் விளைவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் துறைகள் இதனை ஆராய்ச்சியாகவும் மேற்கொள்ளலாம். நமது மருத்துவர்கள் சேவையாற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அவர்களை உலகளவில் முன்னிலைப்படுத்தியிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். இது போன்ற அறிவியல் ஆய்வுகளின் பலன்களை உலகநாடுகள் பெறுவதற்கு இதுவே தக்க தருணம். கொவிட் பெருந்தொற்று, இதற்கு ஓர் சிறந்த துவக்கப் புள்ளியாக அமையக்கூடும். தடுப்பூசிகள் எவ்வாறு நமக்கு உதவுகின்றன, முன்கூட்டியே சிகிச்சை அளிப்பது எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா என்று அவர் வினவுவதாகக் கூறினார். கடந்த நூற்றாண்டின் பெருந்தொற்று பற்றிய எந்த ஆவணமும் கைவசம் இல்லை, ஆனால் தற்போது நம்மிடையே தொழில்நுட்பம் இருக்கிறது, கொவிட் தொற்றை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை ஆவணப் படுத்தினால் மனித சமூகத்திற்கு அது பேருதவியாக இருக்கும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
----
(Release ID: 1731980)
Visitor Counter : 304
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada