பிரதமர் அலுவலகம்

மனதின் குரல், 78ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்:27.06.2021

Posted On: 27 JUN 2021 11:43AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே வணக்கம்.  எப்போதுமே மனதின் குரலில் உங்களுடைய கேள்விகள் அடைமழை போல வந்த வண்ணம் இருக்கும்.  ஆனால் இந்த முறை, சற்று விலகி, நான் உங்களிடத்தில் வினா எழுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.  சரி, என்னுடைய வினாக்களை சற்று கவனமாகக் கேளுங்கள்.

……ஒலிம்பிக் போட்டிகளில், தனிநபருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் யார் தெரியுமா?

……ஒலிம்பிக் போட்டிகளில், எந்த விளையாட்டுக்களில் பாரதம் இதுவரை அதிகமான பதக்கங்கள் வென்றிருக்கிறது?

……ஒலிம்பிக் போட்டிகளில் எந்த வீரர் அதிகபட்ச பதக்கங்களை வென்றிருக்கிறார்?

நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள்.  இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது.  நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.  முன்பு பாரதம் எப்படி செயல்பட்டது?  இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன? – இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சு என்று வரும் போது, மில்கா சிங் என்ற தடகள ஜாம்பவானை யாரால் மறந்து விட முடியும் சொல்லுங்கள்!!  சில நாட்கள் முன்பாக, கொரோனா பெருந்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது.  அவர் மருத்துவமனையில் இருந்த போது, அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.  பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.  நீங்கள் 1964ஆம் ஆண்டு, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கெடுத்துக் கொண்டீர்கள், ஆகையால் இந்த முறை, நமது விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக்ஸில் பங்கெடுக்கச் செல்லும் போது, நீங்கள் நமது வீரர்களின் மனோபலத்தை அதிகப்படுத்த வேண்டும், உங்கள் செய்தியால் அவர்களுக்கு உத்வேகமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.  அவர் விளையாட்டுக்களிடத்தில் எத்தனை அர்ப்பணிப்பு உள்ளவர், எத்தனை உணர்வுமயமானவர் என்றால், நோய்பாதிப்பு இருந்ததையும் தாண்டி, உடனடியாகத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.  ஆனால் துர்பாக்கியவசமாக, விதியின் முடிவு வேறு விதமாக இருந்தது.  2014ஆம் ஆண்டு அவர் சூரத் வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.  நாங்கள் இரவு மாரத்தான் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்தோம்.  அப்போது அவரோடு நான் கலந்து பேசிய பொழுது, விளையாட்டுக்கள் பற்றிப் பேசினோம், அது எனக்கு மிகுந்த கருத்தூக்கமாக அமைந்தது.  மில்கா சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே விளையாட்டுக்களிடத்தில் அர்ப்பணிப்பு உடையது, பாரதத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதை நாமறிவோம்.

நண்பர்களே, திறமை, அர்ப்பணிப்பு, மனவுறுதி மற்றும் போட்டி நேர்மைப் பண்பு எல்லாம் ஒருசேர இணையும் போது, ஒரு சாம்பியன் உருவாகிறார்.  நம்முடைய தேசத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகள், கிராமங்களிலிருந்து உருவாகிறார்கள்.  டோக்கியோ செல்லவிருக்கும் நமது ஒலிம்பிக் அணியிலும் கூட, பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நமக்கு பெரும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாய் இருக்கிறது.  நம்முடைய பிரவீண் ஜாதவ் அவர்களைப் பற்றி நீங்கள் கேட்டால், எத்தனை கடினமான இடர்ப்பாடுகளை எல்லாம் தாண்டி பிரவீண் அவர்கள் இந்த நிலையை எட்டியிருக்கிறார் என்பதை நீங்களே உணர்வீர்கள்.  பிரவீண் ஜாதவ் அவர்கள், மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர்.  அவர் வில்வித்தையில் அற்புதமான வீரர்.  இவருடைய பெற்றோர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நிர்வாகம் செய்கிறார்கள்;  இப்போது இவர்களின் மகன், தனது முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுக்க டோக்கியோ செல்லவிருக்கிறார்.  இது அவருடைய பெற்றோருக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே கூட பெரும் கௌரவத்தை ஏற்படுத்தும் விஷயம்.  இதே போல, இன்னொரு விளையாட்டு வீரர் தான் நமது நேஹா கோயல் அவர்கள்.  டோக்கியோ செல்லவிருக்கும் பெண்கள் ஹாக்கி அணியின் ஒரு உறுப்பினர் தான் இந்த நேஹா.  இவருடைய தாயும், சகோதரிகளும், சைக்கிள் தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.  நேஹாவைப் போன்றே, தீபிகா குமாரி அவர்களுடைய வாழ்க்கைப் பயணமும் மேடு பள்ளங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.  தீபிகாவின் தந்தை, ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார், தாய் செவிலியாக வேலை பார்க்கிறார், இப்போது டோக்கியோ ஒலிம்பிக்ஸில், பாரதத்தின் பிரதிநிதியாக தீபிகா, தனியொரு பெண் வில்வித்தை வீராங்கனையாக பங்கெடுக்க இருக்கிறார்.  ஒரு சமயத்தில் உலகிலேயே வில்வித்தைப் போட்டியில் முதலாவதாகத் திகழ்ந்த தீபிகாவுக்கு நம்மனைவரின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நண்பர்களே, வாழ்க்கையில் நாம் எந்த இடத்தை எட்டினாலும், எத்தனை உயரத்தைத் தொட்டாலும், நிலத்துடனான நமது தொடர்பு, எப்போதும் நமது வேர்களோடு நம்மைப் பிணைத்து வைக்கும்.  போராட்டக்காலங்கள் கழிந்த பிறகு கிடைக்கும் வெற்றியின் ஆனந்தம் அலாதியானது.  டோக்கியோ செல்லும் நமது வீரர்களும் வீராங்கனைகளும், தங்கள் சிறுவயதில் கருவிகள்-வசதிகள்-வாய்ப்புகள் குறைபாட்டை எதிர்கொண்டார்கள் என்றாலும், அவர்கள் உறுதியோடு இருந்தார்கள், தொடர்ந்து முயன்றார்கள்.  உத்திரப்பிரதேசத்தின் முஸஃபர்நகரைச் சேர்ந்த பிரிங்கா கோஸ்வாமி அவர்களின் வாழ்க்கை நமக்கு மிகுந்த படிப்பினையை அளிக்கிறது.  பிரியங்கா அவர்களுடைய தந்தையார் ஒரு பேருந்து நடத்துநராகப் பணிபுரிகிறார்.  சிறுவயதில் பிரியங்காவிற்கு, பதக்கம் வெல்லும் வீரர்களுக்குக் கிடைக்கும் பை மிகவும் பிடித்துப் போயிற்று.   இதனால் கவரப்பட்டு, இவர் முதன்முறையாக Race Walking, அதாவது வேகமாக நடத்தல் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார்.  இன்று, இவர் இந்தப் போட்டியில் மிகப் பெரிய சாம்பியனாக விளங்குகிறார்.

Javelin Throw என்ற ஈட்டியெறிதல் போட்டியில் பங்கெடுக்கவிருக்கும் ஷிவ்பால் சிங் அவர்கள், பனாரஸில் வசிப்பவர்.  ஷிவ்பால் சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே இந்தப் போட்டியோடு தொடர்புடையது.  இவரது தந்தையார், சிற்றப்பா, சகோதரர் என அனைவரும் ஈட்டி எறிதலில் வல்லவர்கள்.  குடும்பத்தின் இந்தப் பாரம்பரியம் தான் இவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கைகொடுக்க இருக்கிறது.  டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கெடுக்கவிருக்கும் சிராக் ஷெட்டியும் இவரது கூட்டாளியுமான சாத்விக் சாய்ராஜ் ஆகியோரின் தன்னம்பிக்கையும் உத்வேகம் அளிக்கவல்லது.  தற்போது சிராகின் தாய்வழிப் பாட்டனார், கொரோனா காரணமாக இறந்து விட்டார்.  சாத்விக்கும் கூட கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  ஆனால் இந்த இடர்களை எல்லாம் தாண்டி, இந்த இருவரும், Men’s Double Shuttle Competition, அதாவது ஆடவர் இரட்டையர்களுக்கான சிறகுப்பந்தாட்டப் போட்டியில், தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  மேலும் ஒரு விளையாட்டு வீரரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.  இவர் தான் ஹரியாணாவின் பிவானீயைச் சேர்ந்த மனீஷ் கௌஷிக் அவர்கள்.  மனீஷ் அவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  சிறுவயது முதற்கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதிலிருந்தே, மனீஷுக்கு குத்துச் சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டுப் போனது.  இன்று இந்த ஆர்வம் இவரை டோக்கியோ கொண்டு போக இருக்கின்றது.  மேலும் ஒரு விளையாட்டு வீரரின் பெயர், சீ. ஏ. பவானீ தேவீ அவர்கள்.  பெயரும் பவானீ, வாட்சிலம்ப வல்லுநர்.  சென்னையில் வசிக்கும் பவானீ, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய fencer, வாட்சிலம்புக்காரர்.  பவானீயின் பயிற்சி தொடர வேண்டும் என்பதற்காக இவரது அன்னை தனது நகைகளைக்கூட அடகு வைத்தார் என்பதை நான் ஒருமுறை எங்கோ படிக்க நேர்ந்தது.

நண்பர்களே, இப்படி கணக்கேயில்லாத பெயர்கள் ஆனால், மனதின் குரலில் என்னால் ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட முடிந்திருக்கிறது.  டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் போராடி வந்திருக்கிறார்கள், பல்லாண்டுக்கால கடின உழைப்பு உழைத்திருக்கின்றார்கள்.  இவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை, தேசத்திற்காகச் செல்கிறார்கள்.  இந்த விளையாட்டு வீரர்கள் பாரதத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும், மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும், ஆகையால் என் இனிய நாட்டுமக்களே, நான் உங்களுக்கும் ஒரு ஆலோசனை அளிக்க விரும்புகிறேன்.  தெரிந்தோ தெரியாமலோ கூட நாம் நமது இந்த வீரர்கள் மீது எந்த விதமான அழுத்தத்தையும் கொடுத்து விடக் கூடாது; மாறாக திறந்த மனத்தோடு இவர்களுக்கு நமது ஊக்கத்தை அளிக்க வேண்டும், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் உற்சாகத்தையும் அதிகரிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் நீங்கள் #Cheer4India வோடு நமது இந்த விளையாட்டு வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை அளிக்கலாம்.  நீங்கள் மேலும் புதுமையான ஒன்றைச் செய்ய விரும்பினால், அப்படியும் அவசியம் செய்யுங்கள்.  உங்கள் மனதில் ஒரு எண்ணம் உதித்தால், அதை தேசம் முழுவதும் இணைந்து நமது விளையாட்டு வீரர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைக் கண்டிப்பாக எனக்கு எழுதி அனுப்புங்கள்.  நாமனைவரும் இணைந்து டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்போம் – Cheer4India!!!Cheer4India!!!Cheer4India!!!

     எனதருமை நாட்டுமக்களே, கொரோனாவுக்கு எதிராக நமது நாட்டுமக்களின் போராட்டம் தொடர்கிறது என்றாலும், இந்தப் போரில் நாமனைவரும் இணைந்து பல அசாதாரணமான இலக்குகளை அடைந்திருக்கிறோம்.  சில நாட்கள் முன்பாக நமது நாட்டில், இதுவரை நடக்காத ஒரு பணி நடந்தேறியிருக்கிறது.  ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம் நடந்தது, அதே நாளன்று நாட்டில் 86 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது, அதுவும் ஒரே நாளில்.  இத்தனை பெரிய எண்ணிக்கையில் பாரத அரசு தரப்பில், இலவச தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரே நாளன்று.  இதனைப் பற்றிய விவாதங்கள் நடைபெறுவதும் இயல்பானது தானே!!

     நண்பர்களே, ஓராண்டு முன்பாக அனைவர் முன்பாகவும் இருந்த கேள்வி – தடுப்பூசி எப்போது வரும்? என்பதே.  இன்று ஒரே நாளில் நாம் இலட்சக்கணக்கான, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை, இலவசமாக அளித்து வருகிறோம் எனும் போது, இது தானே புதிய பாரதத்தின் பலம்!!

     நண்பர்களே, தடுப்பூசி தரும் பாதுகாப்பு, தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும், நாம் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும்.  பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, பல அமைப்புகள், சமூக நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் முன்வந்திருக்கிறார்கள், அனைவரும் இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.  சரி, நாமும் இன்று, ஒரு கிராமம் செல்வோம், அந்த கிராமத்து மக்களிடத்திலேயே நாம் உரையாற்றுவோம்.  தடுப்பூசி தொடர்பாக மத்தியப்பிரதேசத்தின் பைதூல் மாவட்டத்தின் டுலாரியா கிராமம் போவோம் வாருங்கள்.

பிரதமர் :  ஹெலோ

ராஜேஷ்:  வணக்கம்

பிரதமர்: வணக்கம் ஐயா.

ராஜேஷ்: என் பேரு ராஜேஷ் ஹிராவே, பீம்புர் ப்ளாக்கைச் சேர்ந்த டுலாரியா கிராம பஞ்சாயத்தில வசிக்கறேன்.

பிரதமர்: ராஜேஷ் அவர்களே, இப்ப உங்க கிராமத்தில, கொரோனா பெருந்தொற்றோட பாதிப்பு என்னெங்கறதை தெரிஞ்சுக்கத் தான் நான் இப்ப உங்களுக்கு ஃபோன் செஞ்சிருக்கேன்.

ராஜேஷ்: சார், இங்க கொரோனாவோட பாதிப்புன்னு சொல்லக்கூடிய வகையில எல்லாம் இல்லை.

பிரதமர்: யாருமே பாதிக்கப்படலையா என்ன?

ராஜேஷ்: ஆமாங்க.

பிரதமர்: கிராமத்தில ஜனத்தொகை எத்தனை?   கிராமத்தில எத்தனை பேர் வசிக்கறாங்க?

ராஜேஷ்: கிராமத்தில 462 ஆண்களும், 332 பெண்களும் வசிக்கறாங்க சார்.

பிரதமர்: நல்லது! ராஜேஷ் அவர்களே, நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?

ராஜேஷ்: இல்லை சார், இன்னும் போட்டுக்கலை சார்.

பிரதமர்: அட! ஏன் இன்னும் போட்டுக்கலை?

ராஜேஷ்: சார், அது வந்து, இங்க சிலர் சொன்னாங்க, வாட்ஸப் மூலமா ஒரு பிரமையை ஏற்படுத்தி, இதனால மக்கள் பாதிக்கப்பட்டுட்டாங்க, அதனால தான் போட்டுக்கலை சார்.

பிரதமர்: அப்படீன்னா உங்க மனதிலயும் பயம் இருக்கா?

ராஜேஷ்: ஆமாம் சார், கிராமம் முழுவதிலயும் இப்படி ஒரு பரப்புரையை பரப்பிட்டாங்க சார்.

பிரதமர்: அடடடா, என்ன வேலை செஞ்சிருக்கீங்க நீங்க?  பாருங்க ராஜேஷ் அவர்களே….

ராஜேஷ்: சொல்லுங்க சார்.

பிரதமர்: உங்க கிட்டயும் சரி, கிராமங்கள்ல வசிக்கற என்னோட எல்லா சகோதர சகோதரிகள் கிட்டயும் நான் சொல்லிக்க விரும்பறது என்னென்னா, தயவு செஞ்சு உங்க மனசுலேர்ந்து பயத்தை வெளியேத்துங்க.

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்: நம்ம நாடு முழுக்கவும் 31 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க.

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்: நானும் கூட தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கிட்டாச்சுங்கறது உங்களுக்கே தெரியும் இல்லையா?

ராஜேஷ்: தெரியும் சார்.

பிரதமர்: எங்கம்மாவுக்கு கிட்டத்தட்ட 100 வயசாகுது, அவங்களும் கூட ரெண்டு தவணைகளை போட்டுக்கிட்டாங்க.  சில சமயங்கள்ல இதனால காய்ச்சல் ஏற்படலாம், ஆனா இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம் தான், இது சில மணி நேரம் வரைக்கும் தான் இருக்கும்.  ஆனா பாருங்க, தடுப்பூசி எடுத்துக்கலைன்னா அது பெரிய ஆபத்தில கொண்டு போய் விடலாம்.

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்: இதனால நீங்க உங்களை மட்டும் ஆபத்துக்கு உள்ளாக்கலை, உங்க குடும்பத்தையும் கூட அபாயத்துக்கு ஆட்படுத்தறீங்க.

ராஜேஷ்: சரிங்க.

பிரதமர்: அதனால ராஜேஷ் அவர்களே, எத்தனை சீக்கிரத்தில முடியுமோ, அத்தனை சீக்கிரமா தடுப்பூசி போட்டுக்குங்க, கிராமத்திலயும் எல்லார் கிட்டயும் சொல்லுங்க, மத்திய அரசு இலவசமா எல்லாருக்கும் தடுப்பூசி கொடுக்குது, 18 வயசுக்கு மேற்பட்டவங்க எல்லாருக்கும் தடுப்பூசி இலவசம், கண்டிப்பா போட்டுக்கணும்னு சொல்லுங்க.

ராஜேஷ்: சரிங்க சார்.

பிரதமர்: நீங்களும் கிராமவாசிங்க கிட்ட சொல்லுங்க, கிராமத்தில இப்படிப்பட்ட ஒரு பயம் இருக்க எந்த ஒரு காரணமுமே இல்லை.

ராஜேஷ்:  இதுக்கெல்லாம் என்ன காரணம்னா சார், சிலர் பொய்யான பரப்புரைகளை பரப்பி விட்டுட்டாங்க சார், இதனால மக்கள் எல்லாம் ரொம்ப பயந்து போயிட்டாங்க.  இப்ப உதாரணமா பார்த்தீங்கன்னா, நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டீங்கன்னா காய்ச்சல் வரும், காய்ச்சலால நோய் அதிகம் பரவிடும், இதனால மனிதனுக்கு மரணம் கூட ஏற்படலாம் அப்படீங்கற அளவுக்கு வதந்திகளை பரப்பினாங்க.

பிரதமர்:  பார்த்தீங்களா….. இன்னைக்கு ரேடியோவும், டிவியும் இத்தனை செய்திகளை அளிக்கறாங்க, ஆகையனால மக்களுக்கு புரிய வைக்கறது ரொம்ப சுலபமாயிருக்கு.  அது மட்டுமில்லாம, ஒரு விஷயம் சொல்லவா…… பாரதத்தில பல கிராமங்கள்ல எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க, அதாவது இந்த கிராமத்தில இருக்கற 100 சதவீத மக்கள்.  இப்ப நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு சொல்றேன்….

ராஜேஷ்: சரி சார்.

பிரதமர்:  காஷ்மீரத்தில பாந்திபுரா மாவட்டம் இருக்கு, இந்த பாந்திபுராவுல இருக்கற வ்யவன் கிராமத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து 100 சதவீதம் தடுப்பூசிங்கற இலக்கைத் தீர்மானம் செஞ்சு போட்டும் முடிச்சுட்டாங்க.  இன்னைக்கு காஷ்மீரத்தில இந்த கிராமத்தில 18 வயசுக்கு மேல இருக்கற எல்லாரும் தடுப்பூசி போட்டு முடிச்சாச்சு.  இதே மாதிரி நாகாலந்திலயும் மூணு கிராமங்கள்ல எல்லா கிராமவாசிகளும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்கங்கற செய்தியும் எனக்கு கிடைச்சிருக்கு.

ராஜேஷ்: ஓஹோ

பிரதமர்: ராஜேஷ் அவர்களே, நீங்களும் உங்க கிராமம், உங்க அக்கம்பக்கத்து கிராமங்கள்லயும் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கணும், நீங்களே சொல்ற மாதிரி பலர் மனசுலயும் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கு, இது வெறும் பிரமை மட்டும் தான். 

ராஜேஷ்:  சரிங்க சார்.

பிரதமர்: அப்ப இந்த பிரமைக்கு சரியான பதிலடி என்னென்னா, நீங்க முதல்ல தடுப்பூசி போட்டுக்கிட்டு, பிறகு எல்லாருக்கும் புரிய வைக்கணும்.  நீங்க செய்வீங்கல்லே?

ராஜேஷ்:  செய்வேன் சார்.

பிரதமர்: கண்டிப்பா செய்வீங்களா?

ராஜேஷ்: கண்டிப்பா செய்வேன் சார். உங்க கிட்ட பேசினதுக்குப் பிறகு, நானும் கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கணும், மத்தவங்களையும் போட உத்வேகப்படுத்தணுங்கற உணர்வு ஏற்பட்டிருக்கு சார்.

பிரதமர்: நல்லது, கிராமத்தில வேற யாரும் அங்க இருக்காங்களா, இருந்தா அவங்க கிட்டயும் நான் பேசறேனே!

ராஜேஷ்: இருக்காங்க சார்.

பிரதமர்: யார் பேசப் போறாங்க?

கிஷோரீலால்: ஹெலோ சார்…. வணக்கம்.

பிரதமர்: வணக்கங்க, யாரு பேசறீங்க?

கிஷோரீலால்: சார், என் பேரு கிஷோரீலால் தூர்வே.

பிரதமர்: ஆங் கிஷோரீலால் அவர்களே, இப்ப ராஜேஷ் அவங்க கிட்டத் தான் நான் பேசிட்டு இருந்தேன்.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: தடுப்பூசி போட்டுக்கறது பத்தி மக்கள் பல்வேறு விதமா பேசிக்கிட்டு இருக்காங்கன்னு அவரு ரொம்ப வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தாரு.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: நீங்களும் இந்த மாதிரியா கேள்விப்பட்டீங்க?

கிஷோரீலால்: ஆமாங்க…. இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், அது வந்து .

பிரதமர்: என்ன கேவிப்பட்டீங்க?

கிஷோரீலால்: அது வந்து சார், இங்க பக்கத்து மாநிலம்னா அது மகாராஷ்டிரம், அங்க சில உறவுக்காரங்க, சில வதந்திகளை பரப்பினாங்க.  அதாவது தடுப்பூசி போட்டுக்கறதால எல்லாரும் இறக்கறாங்க, சிலருக்கு காய்ச்சல் வருதுன்னு எல்லாம் பரப்பினாங்க, இதனால தான் மக்கள் மனசுல பெரிய பிரமை, ஒரு பீதி இடம் பிடிச்சிருக்கு சார், அவங்க தடுப்பூசி எடுக்க மாடேங்கறாங்க.

பிரதமர்: அதில்லை… என்ன சொல்றாங்க?  இப்ப கொரோனா போயிருச்சு, இப்படியா பேசிக்கறாங்க?

கிஷோரீலால்: ஆமாங்க.

பிரதமர்: கொரோனாவால ஒண்ணும் செய்ய முடியாதுன்னா பேசிக்கறாங்க?

கிஷோரீலால்: இல்லை, கொரோனா போயிருச்சுன்னு எல்லாம் பேசிக்கறதில்லை சார், கொரோனா எல்லாம் இருக்கு, ஆனா தடுப்பூசியை யாரு போட்டுக்கறாங்களோ, அவங்களுக்கு நோய் ஏற்படுது, அவங்க இறக்கறாங்க.  இது தான் நிலைமைங்கறாங்க சார்.

பிரதமர்: சரி, அதாவது தடுப்பூசி போட்டுக்கிறதால இறக்கறாங்கன்னு பேசிக்கறாங்க, இல்லையா?

கிஷோரீலால்: எங்க பகுதி ஒரு பழங்குடியினப் பகுதி சார்.  சாதாரணமாவே இங்க மக்கள் அதிகமா அஞ்சுவாங்க…… இப்ப இப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தின காரணத்தால, யாரும் தடுப்பூசி போட்டுக்கறதில்லை சார்.

பிரதமர்: இதோ பாருங்க கிஷோரீலால் அவர்களே,

கிஷோரீலால்: சொல்லுங்க சார்.

பிரதமர்: இப்படி வதந்திகளைப் பரப்புறவங்க வதந்திகளை பரப்பிக்கிட்டுத் தான் இருப்பாங்க. ஆனா நாம உயிர்களைக் காப்பாத்தியாகணும், நம்ம கிராம மக்களைக் காப்பாத்தியாகணும், நம்ம நாட்டுமக்களைக் காப்பாத்தியாகணும். இப்ப கொரோனா போயிருச்சுன்னு யாராவது சொன்னாங்கன்னா, அந்த பிரமையில இருக்காதீங்க.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: இந்த நோய் எப்படிப்பட்டதுன்னா, இது பலவிதமா வடிவெடுக்கக்கூடியது.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: இது தன் வடிவத்தை மாத்திக்குது….. புதுசு புதுசா நிறம்  வடிவங்களை எடுத்து நம்மை பீடிக்கக்கூடியது.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: இதிலேர்ந்து தப்பிக்க நம்ம கிட்ட ரெண்டே ரெண்டு வழிகள் தான் இருக்கு.  ஒண்ணு, கொரோனாவுக்குன்னு என்ன நெறிமுறை வரையறுத்திருக்காங்களோ, அதாவது முகக்கவசம் போட்டுக் கொள்வது, சோப்பால அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, இது ஒருவகை.  ரெண்டாவது வழி என்னென்னா, முன்ன சொன்ன நெறிமுறையோட கூடவே தடுப்பூசி போட்டுக்கறது.  இதுவும் ஒரு நல்ல பாதுகாப்பு கவசம், இதன் மேல கவனம் செலுத்துங்க.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: சரி கிஷோரீலால் அவர்களே, ஒரு விஷயம் சொல்லுங்க.

கிஷோரீலால்: கேளுங்க சார்.

பிரதமர்: மக்கள் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கும் போது, நீங்க அவங்களுக்கு எப்படி புரிய வைப்பீங்க? நீங்க புரிய வைப்பீங்களா, இல்லை நீங்களும் கூட வதந்திகளுக்கு இரையாயிடுவீங்களா?

கிஷோரீலால்: என்னத்தை புரிய வைக்க சார், அவங்க அதிக எண்ணிக்கையில இருக்காங்க சார், எங்களுக்கும் பயம் ஏற்படும் தானே சார்?

பிரதமர்: இதோ பாருங்க கிஷோரீலால் அவர்களே, நான் இன்னைக்கு உங்ககூட பேசியிருக்கேன், நீங்க என்னோட நண்பர்.

கிஷோரீலால்: சரி சார்.

பிரதமர்: நீங்களும் பயப்படக்கூடாது, மத்தவங்களையும் பயத்திலேர்ந்து மீட்டெடுக்கணும்.  மீட்டெடுப்பீங்களா?

கிஷோரீலால்: செய்வேன் சார்.  மீட்டெடுப்பேன் சார்.  மக்களை பயத்திலேர்ந்து மீட்பேன் சார்.  நான் முதல்ல தடுப்பூசி போட்டுக்கறேன்.

பிரதமர்: முக்கியமா, வதந்திகளை முற்றிலுமா புறக்கணியுங்க.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: நம்ம விஞ்ஞானிகள் எத்தனை கடுமையா உழைச்சு இந்த தடுப்பூசியைத் தயாரிச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லை!

கிஷோரீலால்: தெரியும் சார்.

பிரதமர்: ஆண்டு முழுக்க, இரவுபகல் பார்க்காம, பெரிய பெரிய விஞ்ஞானிகள்லாம் பணியாற்றியிருக்காங்க, நாம விஞ்ஞானம் மேல நம்பிக்கை வைக்கணும், விஞ்ஞானிகள் மேல நம்பிக்கை வைக்கணும்.   மேலும் பொய்களைப் பரப்பவரவங்களுக்கும் என்ன புரிய வைக்கணும்னா, ஐயா, நீங்க சொல்றா மாதிரியெல்லாம் நடக்காது, இத்தனை கோடிப் பேர்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்காங்க, ஒண்ணுமே ஆகலைங்கற போது, நீங்க எப்படி பாதிப்பு இருக்குங்கறீங்கன்னு கேளுங்க.

கிஷோரீலால்: சரிங்க.

பிரதமர்: இந்த வதந்திகள்டேர்ந்து எல்லாம் தப்பி விலகி நாமளும் இருக்கணும், கிராமத்தையும் காப்பாத்தணும்.

கிஷோரீலால்: சரிங்கய்யா.

பிரதமர்:  அப்புறம் ராஜேஷ் அவர்களே, கிஷோரீலால் அவர்களே, உங்களை மாதிரியான நண்பர்கள்கிட்ட நான் என்ன சொல்லிக்க விரும்பறேன்னா, நீங்க உங்க கிராமத்தில மட்டுமில்லாம, மேலும் பல கிராமங்கள்லயும் இந்த மாதிரியான வதந்திகளைத் தடுக்கற வேலையை செய்யுங்க, என் கிட்ட இது பத்தி நீங்க பேசினீங்கன்னு மேலும் நிறைய மக்கள் கிட்டயும் சொல்லுங்க.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: கண்டிப்பா சொல்லுங்க, என் பேரைச் சொல்லுங்க.

கிஷோரீலால்: சொல்றோம் சார், நாங்களும் தடுப்பூசி போட்டுக்கறோம், மத்தவங்களுக்கும் புரிய வைக்கறோம்.

பிரதமர்: கிராமம் முழுவதற்கும் என் தரப்பிலேர்ந்து நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்க, சரியா?

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: எல்லார் கிட்டயும் சொல்லுங்க, எப்ப அவங்களோட முறை வருதோ, அப்ப கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கணும்னு.

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்:  கிராமத்தில இருக்கற நம்ம பெண்மனிகள், நம்ம தாய்மார்கள்-சகோதரிகள், இவங்களை எல்லாம் இந்தப் பணியில அதிகபட்சம் இணைச்சுக்குங்க, ஆக்கப்பூர்வமான வகையில அவங்களையும் உங்க பயணத்தில சேர்த்துக்குங்க.

கிஷோரீலால்: சரிங்கய்யா.

பிரதமர்: பல வேளைகள்ல தாய்மார்கள்-சகோதரிகள் சொல்லும் போது, மக்கள் சீக்கிரத்துல ஏத்துக்குவாங்க.

கிஷோரீலால்: ஆமாங்கய்யா.

பிரதமர்: உங்க கிராமத்தில தடுப்பூசி முழுமையா போட்டாச்சுன்னா, நீங்க எனக்குத் தகவல் தருவீங்களா?

கிஷோரீலால்: ஆஹா, சொல்றேன் சார்.

பிரதமர்: கண்டிப்பா சொல்வீங்களா?

கிஷோரீலால்: கண்டிப்பா சார்.

பிரதமர்: நான் உங்க கடிதம் வருதான்னு காத்திட்டு இருப்பேன், சரியா?

கிஷோரீலால்: சரிங்க சார்.

பிரதமர்: சரி ராஜேஷ் அவர்களே, கிஷோரீலால் அவர்களே, ரொம்ப ரொம்ப நன்றி.  உங்க கூட பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.

கிஷோரீலால்: நன்றி சார். நீங்க எங்க கூட பேசினதுக்கு ரொம்ப நன்றி.  உங்களுக்கும் பலப்பல நன்றிகள் ஐயா.

 

     நண்பர்களே, என்றைக்காவது ஒரு நாள், உலகத்திற்கே ஆய்வுக்குரிய ஒரு விஷயமாக இது ஆகும், அதாவது பாரதநாட்டின் கிராமவாசிகள், நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் எல்லாம் இந்த கொரோனா காலகட்டத்தில், எந்த வகையில் தங்களின் வல்லமையையும், புரிதலையும் வெளிப்படுத்தினார்கள் என்று.  கிராமவாசிகள் தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்கினார்கள், வட்டாரத் தேவைகளை அனுசரித்து C protocol ஐ ஏற்படுத்தினார்கள்.  கிராமவாசிகள் யாரையும் பட்டினியோடு இரவு உறங்கச் செல்ல அனுமதிக்கவில்லை, விவசாய வேலைகளையும் நிறுத்தி வைக்கவில்லை.  அருகில் இருக்கும் நகரங்களுக்கு பால்-காய்கறிகள் என அனைத்தும் ஒவ்வொரு நாள் காலையும் சென்று கொண்டிப்பதையும் கிராமங்கள் உறுதிப்படுத்தின.  அதாவது அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டதோடு, மற்றவர்களையும் கவனித்துக் கொண்டார்கள்.  இதே போன்று தான் நாம் தடுப்பூசி இயக்கம் விஷயத்திலும் செயல்பட்டு வர வேண்டும்.  நாமும் விழிப்போடு இருக்க வேண்டும்,  மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.  கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு கிராமத்தின் இலக்காக இருக்க வேண்டும்.  நினைவில் கொள்ளுங்கள், நான் உங்களிடத்தில் சிறப்பாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.  உங்களிடத்திலே நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள் – ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறார்கள் ஆனால், இந்த முடிவான வெற்றியின் மந்திரம் என்ன?  முடிவான வெற்றியின் மந்திரம் என்னவென்றால் அது தான் – நிரந்தரச் செயல்பாடு.  ஆகையால் நாம் சற்றும் கூட சுணக்கமாக இருந்துவிடக் கூடாது, எந்தவொரு பிரமைக்கும் மனதிலே இடம் கொடுத்தலாகாது.  நாம் இடையறாத முயற்சிகள் மேற்கொண்டு, கொரோனா மீது வெற்றி பெற்றாக வேண்டும்.

     எனதருமை நாட்டுமக்களே, நமது நாட்டிலே இப்போது பருவமழைக்காலம் வந்து விட்டது.  மேகங்கள் நமக்காக மட்டுமே பொழிவது இல்லை, மழைமேகங்கள் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தான் பொழிகின்றன.  மழைநீரானது நிலத்தடியில் சென்று சேமிக்கப்படும் போது, நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர் நிலைகளையும் மேம்படுத்துகிறது.  ஆகையால் தான் நீர் பாதுகாப்பு என்பதை நான் தேசப்பணியாகவே கருதுகிறேன்.  நம்மில் பலர் இந்தப் புண்ணியச் செயலைத் தங்களுடைய கடமையாகவே கருதிச் செயல்படுவதை நீங்கள் கண்டிருக்கலாம்.  இப்படிப்பட்ட ஒருவர் தான் உத்தராகண்டின் பௌடி கட்வாலைச் சேர்ந்த சச்சிதானந்த் பாரதீ அவர்கள்.  பாரதீ அவர்கள் ஒரு ஆசிரியராகப் பணிபுரிகிறார்; இவர் தனது செயல்களின் வாயிலாகவும் பிறருக்கு மிக அருமையான கல்வியளித்திருக்கிறார்.  இன்று இவருடைய கடினமான உழைப்பின் காரணமாக, பௌடீ கட்வாலின் உஃபரைங்கால் பகுதியில் பெரிய தண்ணீர் சங்கடத்திற்கு ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.  எந்தப் பகுதியில் நீர்த்தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வந்தார்களோ, அங்கே இன்று ஆண்டு முழுவதிலும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.

     நண்பர்களே, மலைகளில் நீர் சேமிப்பிற்கான ஒரு பாரம்பரியமான வழிமுறை இருக்கிறது, இதை சால்கால் என்றும் அழைக்கிறார்கள்.  அதாவது நீரைச் சேமிக்க ஒரு மிகப்பெரிய பள்ளத்தைத் தோண்டுவது.  இந்தப் பாரம்பரிய வழிமுறையோடு பாரதி அவர்கள் சில புதிய வழிமுறைகளையும் இணைத்தார்.  இவர் தொடர்ந்து சிறிய-பெரிய குளங்களை உருவாக்கினார்.  இதனால் உஃபரைங்காலின் மலைப்பகுதியில் பசுமை கொஞ்சியதோடு, மக்களின் குடிநீர் சங்கடமும் முடிவுக்கு வந்தது.  பாரதீ அவர்கள் இப்படி 30,000த்திற்கும் அதிகமான நீர்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற தகவல் உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம்.  முப்பது ஆயிரம்.  இவரது இந்த பகீரதப் பணி, இன்றும் தொடர்கிறது, பலருக்கு இவர் உத்வேக ஊற்றுக்கண்ணாக விளங்கி வருகிறார்.

     நண்பர்களே,  இதைப் போலவே யூபீ மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தின் அந்தாவ் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்கள்.  இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு மிக சுவாரசியமானதொரு பெயரையும் சூட்டினார்கள்.  खेत का पानी खेत में, गाँव का पानी गाँव मेंஅதாவது, வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்திற்கு என்பதே அது.  இந்த இயக்கத்தின்படி, கிராமத்தின் பல ஏக்கர் நிலங்களில் உயரமான வரப்புகளை ஏற்படுத்தினார்கள்.  இதன் காரணமாக மழைநீரானது வயலில் சேரத் தொடங்கியது.  இப்போது அனைவரும் வயல்வெளிகளில் இருந்த வரப்புகளில் மரம் நடும் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள்.  அதாவது இப்போது விவசாயிகளுக்கு நீர், மரம் மற்றும் பணம் என மூன்றும் கிடைக்கும்.  தங்களின் நற்செயல்கள் காரணமாக, இவர்களின் கிராமத்தின் புகழ் தொலைவில் இருக்கும் கிராமங்கள் வரை பரவி வருகிறது. 

     நண்பர்களே, இவை அனைத்திலிருந்தும் உத்வேகமடைந்து, நாம் நமது அக்கம்பக்கத்தில் எந்த வகையிலாவது நீரை சேமிக்க முடிந்தால், அப்படி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.  பருவமழையின் இந்த மகத்துவமான சமயத்தை நாம் தொலைத்து விடக்கூடாது.

     எனதருமை நாட்டுமக்களே, நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?

நாஸ்தி மூலம் அனௌஷதம்.

அதாவது, உலகில் மருத்துவ குணம் இல்லாத தாவரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்பதே இதன் பொருள்.  நமக்கு அருகிலேயே இப்படி எத்தனையோ மரம்-செடி-கொடிகள் இருக்கின்றன, இவற்றில் அற்புதமான குணங்கள் நிரம்பியிருக்கின்றன என்றாலும் பலவேளைகளில் நமக்கு இவை பற்றி எதுவும் தெரிந்திருப்பதில்லை.  நைனிதாலைச் சேர்ந்த நண்பர் ஒருவரான பரிதோஷ் என்பவர், இந்த விஷயம் குறித்து ஒரு கடிதம் வரைந்திருக்கிறார்.  இவர் சீந்தில் கொடி மற்றும் பிற தாவரங்களின் பல ஆச்சரியமான அற்புதங்கள் நிறைந்த மருத்துவ குணங்கள் பற்றி, கொரோனா வந்த பிறகு தான் தெரிய வந்தது என்று எழுதியிருக்கிறார்.  அக்கம்பக்கத்தில் இருக்கும் தாவரங்கள் பற்றித் தெரிந்து கொள்வதோடு, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் என்று மனதின் குரலின் அனைத்து நேயர்களிடமும் நான் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.  உண்மையில், இவையனைத்தும் நமது பல நூற்றாண்டுக்கால பழமையான மரபுகள், இவற்றை நாம் தான் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.  இந்தத் திசையில் மத்தியப்பிரதேசத்தின் சத்னாவில் இருக்கும் ஒரு நண்பரான  ராம்லோடன் குஷ்வாஹா அவர்கள் மிகவும் மெச்சத்தக்க பணி ஒன்றைச் செய்திருக்கிறார்.  ராம்லோடன் அவர்கள் தனது வயலிலேயே நாட்டு மூலிகை அருங்காட்சியம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.  இந்த அருங்காட்சியகத்தில் இவர் பல நூற்றுக்கணக்கான மருத்துவத் தாவரங்களையும், விதைகளையும் சேகரித்து வைத்திருக்கிறார்.  இவற்றை இவர் தொலைவான பகுதிகளிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்.  இதனைத் தவிர, இவர் ஒவ்வொரு ஆண்டும் பலவகையான இந்தியக் காய்கறிகளையும் பயிர் செய்கிறார்.  ராம்லோடன் அவர்களின் இந்தத் தோட்டம், இந்த நாட்டு மூலிகைகளின் அருங்காட்சியகத்தைக் காண மக்கள் வருகிறார்கள், இவை மூலம் அதிகம் கற்கவும் செய்கிறார்கள்.  உண்மையிலேயே, இது மிக அருமையான ஒரு செயல்பாடு.  இதைப் போலவே தேசத்தின் பல்வேறு பகுதிகளில் செய்ய வேண்டும்.  உங்களில் யாராலாவது இது போன்ற முயற்சியில் ஈடுபட முடியுமென்றால், கண்டிப்பாகச் செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  இதன் மூலம் உங்களுக்கு வருவாய் ஈட்ட புதியதொரு வாய்ப்பும் ஏற்படும்.  மேலும் ஒரு ஆதாயம் என்னவென்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த தாவரங்கள் வாயிலாக, உங்கள் பகுதிக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும். 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்னும் சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று நாம் தேசிய மருத்துவர்கள் தினத்தைக் கடைப்பிடிக்க இருக்கிறோம்.  தேசத்தின் மகத்துவம் வாய்ந்த மருத்துவரும், அரசியல் மேதகையுமான, டாக்டர். பீ.சீ. ராய் அவர்களின் பிறந்த நாளுக்கு இந்த நாள் சமர்ப்பிக்கப்பட்டது.  கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் கடன் பட்டிருக்கிறோம்.  நம்முடைய மருத்துவர்கள், தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது, நமக்கெல்லாம் சேவை புரிந்து வருகிறார்கள்.  ஆகையால் இந்த முறை தேசிய மருத்துவர்கள் தினமும் மேலும் சிறப்படைகிறது. 

     நண்பர்களே, மருத்துவ உலகின் மிகவும் கௌரவமிக்க நபர்களுள் ஒருவரான ஹிப்போக்ரேட்ஸ் கூறியிருக்கிறார் -

 “Wherever the art of Medicine is loved, there is also a love of Humanity.”

அதாவது எங்கே எல்லாம் மருத்துவம் என்ற கலை நேசிக்கப்படுகிறதோ, அங்கே எல்லாம் மனித சமூகத்தின் மீது அன்பு நிறைகிறது.  இந்த அன்பின் சக்தி வாயிலாகவே மருத்துவர்களால் நமக்கு சேவையாற்ற முடிகிறது ஆகையால், நாம் அதே அளவு அன்போடு அவர்களுக்கு நமது நன்றிகளை அளித்து, அவர்களின் மனோபலத்தைப் பெருக்க வேண்டியது நமது கடமையாகிறது.  மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு, தாமே முன்வந்து செயல்கள் புரிபவர்கள் நமது தேசத்திலே பலர் இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு முயல்வு ஸ்ரீநகரில் நடந்திருப்பது  என் கவனத்துக்கு வந்தது.  இங்கே டல் ஏரியில், ஒரு படகு அவசர வாகனச் சேவை தொடங்கப்பட்டது.  இந்தச் சேவையை ஸ்ரீநகரின் தாரிக் அஹ்மத் பட்லூ அவர்கள் ஆரம்பித்தார்கள், இவர் ஒரு படகு வீட்டுக்குச் சொந்தக்காரர்.  இவர் தாமே கோவிட் 19 பெருந்தொற்றோடு போராடி வெற்றி பெற்றவர், இது தான் அவசர வாகனச் சேவையைத் தொடங்க இவருக்கு உத்வேகத்தை அளித்தது.  இவருடைய இந்த அவசர வாகனத்தால், மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் இயக்கமும் நடைபெற்று வருகிறது, தொடர்ந்து அவசர வாகனத்தில் இவர் அறிவிப்புகளையும் செய்து வருகிறார்.  மக்கள் முகக்கவசத்தை அணிதல் முதல் இன்னும் பிற அவசியமான எச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே முயற்சி.

     நண்பர்களே, மருத்துவர்கள் தினத்தோடு கூடவே, ஜூலை 1ஆம் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினமும் கடைப்பிடிக்கப்படும்.  சில ஆண்டுகள் முன்பாக,  நமது இந்திய கணக்காய்வு நிறுவனங்கள் உலகம் தழுவியவையாக இருக்க வேண்டும் என்று நாட்டின் பட்டயக் கணக்காளர்களிடத்தில் நான் கோரியிருந்தேன்.  இன்று இதுகுறித்து நான் அவர்களுக்கு நினைவூட்ட விழைகிறேன்.  பொருளாதாரத்தில் ஒளிவுமறைவற்ற நிலையை உருவாக்க, பட்டயக் கணக்காளர்களால் மிகச் சிறப்பான, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்க முடியும்.  நான் பட்டயக் கணக்காளர், அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

     என் இனிய நாட்டுமக்களே, கொரோனாவுக்கு எதிராக பாரதத்தின் போராட்டத்தில் ஒரு பெரிய சிறப்பம்சம் உண்டு.  இந்தப் போரிலே, தேசத்தின் ஒவ்வொரு நபரும், தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.  நானும் மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஆனால் சிலரைப் பற்றி நான் அதிக அளவில் குறிப்பிடுவதில்லை என்று அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.  வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், சிறிய வணிகர்கள் அல்லது கடை வைத்திருப்பவர்கள், கடைகளில் வேலை பார்க்கும் சிப்பந்திகள், தள்ளுவண்டி செலுத்தும் சகோதர சகோதரிகள், பாதுகாப்புக் காவலாளிகள், தபால்காரர்கள் மற்றும் அஞ்சலகப் பணியாளர்கள் எனப் பலர் கொண்ட இந்தப் பட்டியல் மிக நீண்டது, இவர்களில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள்.  இதே போல நிர்வாக அலகுகளிலும் எத்தனையோ பேர்கள் அவரவருக்குரிய வகைகளில் சிறப்பாகப் பணிபுரிந்திருக்கிறார்கள். 

     நண்பர்களே, இந்திய அரசாங்கத்தில் செயலராக இருந்த குரு பிரஸாத் மஹாபாத்ரா அவர்களின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்.  இன்றைய மனதின் குரலில் நான் அவரைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.  குருபிரஸாத் அவர்களுக்கு கொரோனா பீடிப்பு ஏற்பட்டு விட்டது, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனது கடமையை ஆற்றி வந்தார்.  தேசத்தில் பிராணவாயு உற்பத்தி அதிகரிக்க வேண்டும், தொலைவான பகுதிகள் வரை பிராணவாயு சென்று சேர வேண்டும் என்பதற்காக இவர் இரவுபகலாகப் பணியாற்றினார்.  ஒருபுறத்தில் நீதிமன்றங்களுக்குப் படையெடுப்பு, ஊடகங்கள் அளிக்கும் நெருக்கடி என பல முனைகளில் இவர் போராடி வந்தார், மறுபுறத்திலோ இவர் கொரோனாவால் தாக்குண்ட நிலையிலும் பணியாற்றுவதை நிறுத்தவில்லை.   உடல்நலத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட, இவர் பிடிவாதமாக பிராணவாயு தொடர்பான காணொளி மாநாடுகளில் பங்கெடுத்து வந்தார்.  நாட்டுமக்கள் குறித்த இத்தனை கவலை இவர் மனதில் வியாபித்திருந்தது.   மருத்துவமனைப் படுக்கையில் படுத்தவாறே, தன்னைப் பற்றிய கவலை ஏதும் இன்றி, நாட்டுமக்களுக்கு பிராணவாயு கிடைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.  இந்த கர்மயோகியையும் தேசம் இழந்து விட்டது என்பது நம்மனைவருக்கும் துக்கமளிக்கும் செய்தி.  கொரோனாவானது இவரையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது.  இப்படிப்பட்ட எண்ணிலடங்கா மனிதர்களைப் பற்றி நம்மால் பேசக் கூட முடியவில்லை.  நாம் கோவிட் நெறிமுறையை முழுமையான வகையில் பின்பற்றுவதும், தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் தான் இப்படிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாம் அளிக்கக்கூடிய தூய்மையான நினைவாஞ்சலியாக இருக்க முடியும்.

     என் கனிவான நாட்டுமக்களே, என்னை விட உங்கள் அனைவரின் பங்களிப்பும் அதிகமாக இருப்பது தான் மனதின் குரலின் மிகப்பெரிய சிறப்பம்சமே.   தற்போது தான் MyGov தளத்தில் நான் ஒரு பதிவைப் பார்த்தேன்.  இதை சென்னையைச் சேர்ந்த திரு. ஆர். குருபிரஸாத் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.  அவர் எழுதியிருப்பது உங்களுக்கும்  மிகவும் பிடிக்கும்.  தான் மனதின் குரலைத் தவறாது கேட்டு வருவதாக எழுதியிருக்கிறார்.  குருபிரஸாத் அவர்களின் பதிவிலிருந்து இப்போது நான் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 

நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம், என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.  நீங்கள் தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவம் குறித்தும், தமிழ்ப் பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்.  மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளைப் பற்றி பல முறை கூறியிருக்கிறீர்கள்.  திருக்குறள் மீது உங்களுக்கு இருக்கும் பிரியமும், திருவள்ளுவர் பால் உங்களிடம் இருக்கும் மரியாதையும் விவரிக்க அப்பாற்பட்டவை.  ஆகையால் மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ, இவை அனைத்தையும் ஒன்று திரட்டி நான் மின் புத்தகம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறேன்.  நீங்கள் இந்த மின் புத்தகம் குறித்துப் பேசி, இதை NamoAppஇல் வெளியிட முடியுமா?  நன்றி.

     குருபிரஸாத் அவர்களின் கடிதத்தை நான் உங்களிடத்தில் வாசித்து விட்டேன்.  குருபிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்தப் பதிவைப் படிக்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.  இப்போது நீங்கள் உங்களின் மின் புத்தகத்தில் மேலும் ஒரு பக்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

நான் தமிழ்க்கலாச்சாரத்தின் பெரிய அபிமானி.  நான் உலகத்திலேயே பழமையான தமிழ் மொழியின் பெரிய அபிமானி. 

தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறைவு காணாது. 

     நண்பர்களே, ஒவ்வொரு இந்தியரும், உலகின் மிகப் பழமையான மொழி நம் தேசத்தினுடையது, இதனை நாம் போற்றிக் கொண்டாட வேண்டும், பெருமிதம் கொள்ள வேண்டும்.   தமிழ் மொழி குறித்து எனக்கும் மிகவும் பெருமிதம் பொங்குகிறது.  குரு பிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்த முயற்சி எனக்குப் புதிய கண்ணோட்டத்தை அளிக்க வல்லது.  ஏனென்றால், மிகவும் எளிய இயல்பான வகையிலே தான் நான் மனதின் குரலில் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.  இதில் இப்படிப்பட்ட ஒரு கூறும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.  நீங்கள் பழைய விஷயங்கள் அனைத்தையும் திரட்டியிருப்பதை நான் ஒருமுறை அல்ல, இரு முறைகள் படித்துப் பார்த்தேன்.  குருபிரஸாத் அவர்களே, இந்தப் புத்தகத்தை நான் கண்டிப்பாக Namo செயலியில் தரவேற்றம் செய்வேன்.  உங்களின் வருங்கால முயற்சிகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்கள்.

     எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் கொரோனாவின் கடினங்களையும், முன்னெச்சரிக்கைகளையும் பற்றிப் பேசினோம், நாடு மற்றும் நாட்டுமக்களின் பல சாதனைகள் குறித்தும் அளவளாவினோம்.   இப்போது மேலும் ஒரு சந்தர்ப்பம் நம்முன்னே காணக் கிடைக்கிறது.  ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரவிருக்கிறது.  நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் என்ற அம்ருத மஹோத்சவம் என்ற அமுத விழா, நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது.  நாம் தேசத்திற்காக வாழப் பழக வேண்டும்.  விடுதலைப் போர் – தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் சரிதம்.  நாடு விடுதலை பெற்ற பிறகான இந்த வேளையை நாம் தேசத்திற்காக வாழ்வோரின் கதையாக மாற்ற வேண்டும்.  India First, இந்தியாவுக்கே முதலிடம் என்பதே நமது மந்திரமாக இருக்க வேண்டும்.  நமது ஒவ்வொரு தீர்மானம், ஒவ்வொரு முடிவின் ஆதாரமும், India First, இந்தியாவுக்கே முதலிடம் என்பதாக அமைய வேண்டும். 

     நண்பர்களே, அமுத விழாவில் தேசத்தின் பல சமூக இலக்குகளும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றன.  எடுத்துக்காட்டாக, நாம் நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவில் கொள்ளும் வகையில், அவர்களின்  வரலாற்றுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும்.  விடுதலைப் போராட்டத்தின் வரலாறு குறித்துக் கட்டுரைகள், ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று இளைஞர்களிடத்தில் நான் மனதின் குரல் வாயிலாகக் கேட்டிருந்தேன்.   இளைய சமூகத்தின் திறமைகள் வெளிப்பட வேண்டும், இளையோரின் எண்ணங்கள், அவர்களின் சிந்தனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், இளைஞர்களின் எழுதுகோல்களுக்குப் புதிய சக்தி கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.  இந்தப் பணியில் ஈடுபட, மிகவும் குறைந்த காலத்தில் 2,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.  நண்பர்களே, சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த போராட்டம் குறித்த பேச்சுக்கள் பொதுவாக நடந்து வந்திருக்கின்றன;  ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பிறந்த என் இளைய நண்பர்கள், 19ஆம்-20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த சுதந்திரப் போராட்டம் குறித்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியை மேற்கொண்டிருப்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  இவர்கள் அனைவரும் MyGov தளத்தில் இதனைப் பற்றிய முழு விபரங்களையும் அளித்திருக்கின்றார்கள்.  இவர்கள், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம், பாங்க்லா, தெலுகு, மராட்டி, மலையாளம், குஜராத்தி என தேசத்தின் பல்வேறு மொழிகளில், விடுதலைப் போராட்டம் பற்றி எழுதி வருகிறார்கள்.  சிலர் விடுதலை வேள்வியோடு இணைந்த விஷயங்களை எழுதுகிறார்கள், சிலர் தங்களுக்கு அருகிலே இருக்கும் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற இடங்களைப் பற்றித் தகவல்கள் அளிக்கிறார்கள், சிலர் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார்கள்.  இது ஒரு நல்ல தொடக்கம்.  அமுத விழாவோடு நீங்கள் எந்த வகையில் இணைந்து கொள்ள முடிந்தாலும், அவசியம் இணைந்து கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன்.  நாடு விடுதலை அடைந்த 75 ஆண்டுகள் என்ற தருணத்தின் சாட்சிகளாக நாம் இருப்பது நமது பெரும்பேறாகும்.  ஆகையால் அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திக்கும் வேளையில், அமுத விழாவின் மேலும் பல தயாரிப்புகள் பற்றியும் பேசுவோம்.  நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வாருங்கள், உங்களுடைய புதிய முயற்சிகள் வாயிலாக, தேசத்திற்கு புதிய வேகத்தை அளித்து வாருங்கள், என்ற இந்த நல்விருப்பங்களோடு, மீண்டும் சந்திப்போம், பலப்பல நன்றிகள். 

---- 



(Release ID: 1730697) Visitor Counter : 484