பிரதமர் அலுவலகம்
அயோத்தியாவின் வளர்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு
ஆன்மீக மையம், சர்வதேச சுற்றுலா முனையம் மற்றும் நிலையான சீர்மிகு நகரமாக அயோத்தியா மேம்படுத்தப்படவிருக்கிறது
நமது மிகச்சிறந்த கலாச்சாரங்களையும், சிறப்பான வளர்ச்சி மாற்றங்களையும் அயோத்தியா வெளிப்படுத்த வேண்டும்: பிரதமர்
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எதிர்கால உள் கட்டமைப்புடன் அயோத்தியாவின் மனித நடைமுறை வழக்கம் பொருந்த வேண்டும்: பிரதமர்
வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு அயோத்தியாவை முன்னெடுத்துச் செல்லும் உத்வேகம் தற்போது தொடங்க வேண்டும்: பிரதமர்
அயோத்தியாவின் வளர்ச்சிப் பணிகள் ஆரோக்கியமான மக்கள் பங்களிப்புடன், குறிப்பாக இளைஞர்களால் வழி நடத்தப்பட வேண்டும்: பிரதமர்
Posted On:
26 JUN 2021 2:02PM by PIB Chennai
அயோத்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். அயோத்தியாவின் வளர்ச்சி பற்றிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த விளக்க அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் முன்வைத்தனர்.
ஆன்மீக மையம், சர்வதேச சுற்றுலா முனையம் மற்றும் நிலையான சீர்மிகு நகரமாக அயோத்தியாவை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அயோத்தியாவுடனான இணைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றி பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. விமான நிலையம், ரயில், பேருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள், ஆசிரமங்கள், மடங்கள், உணவகங்கள், பல்வேறு மாநிலங்களின் நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் முதலியவை அடங்கிய வரவிருக்கும் பசுமைவழி நகரியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான மையம், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமும் உருவாக்கப்படும்.
சரயு நதி மற்றும் அதன் காட்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சரயு நதியில் கப்பல் போக்குவரத்தும் அன்றாடம் மேற்கொள்ளப்படும்.
மிதி வண்டி ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு போதிய இடைவெளியை உறுதி செய்யும் வகையில் நிலைத்தன்மையுடன் அந்த நகரம் மேம்படுத்தப்படும். சீர்மிகு நகர உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி நவீன முறையில் போக்குவரத்து மேலாண்மைப் பணிகள் நடைபெறும்.
ஒவ்வொரு இந்தியரின் கலாச்சார உணர்வு நிலையில் பதியும் நகரமாக அயோத்தியாவை பிரதமர் வர்ணித்தார். நமது மிகச்சிறந்த கலாச்சாரங்களையும், சிறப்பான வளர்ச்சி மாற்றங்களையும் அயோத்தியா வெளிப்படுத்த வேண்டும்.
புனிதமான மற்றும் கம்பீரமான நகரமாக அயோத்தியா விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எதிர்கால உள்கட்டமைப்புடன் அயோத்தியாவின் மனித நடைமுறை வழக்கம் பொருந்த வேண்டும்.
தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அயோத்தியாவை நேரில் காண இளம் தலைமுறையினர் விரும்ப வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
எதிர்வரும் காலத்தில் அயோத்தியாவில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அதேவேளையில் வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு அயோத்தியாவை முன்னெடுத்துச் செல்லும் உத்வேகம் தற்போது தொடங்க வேண்டும். புதுமையான வழிகளில் அயோத்தியாவின் அடையாளம் மற்றும் அதன் கலாச்சார செழுமையைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
மக்களை ஒன்றிணைக்கும் திறனை பகவான் ராமர் பெற்றிருந்தவாறு, அயோத்தியாவின் வளர்ச்சிப் பணிகள், ஆரோக்கியமான மக்கள் பங்களிப்புடன், குறிப்பாக இளைஞர்களால் வழி நடத்தப்பட வேண்டும். இந்த நகரின் வளர்ச்சிப் பணியில் நமது திறமைவாய்ந்த இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் திரு கேசவ் பிரசாத் மவுரியா, துணை முதல்வர் திரு தினேஷ் ஷர்மா மற்றும் மாநில அரசின் இதர அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
-----
(Release ID: 1730524)
Visitor Counter : 505
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam