தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பணியமர்த்தலில் பாலின பாகுபாடுகளைக் குறைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரம்: மத்திய அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார்

Posted On: 23 JUN 2021 5:05PM by PIB Chennai

பணியமர்த்தலில் பாலின பாகுபாடுகளைக் குறைப்பதற்காக இந்தியா பல தரப்பு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். சமமான பணிகளை மேற்கொள்வதில் கல்வி, பயிற்சி, தொழில்முனைவு மேம்பாடு, மற்றும் சம அளவிலான ஊதியத்தை அரசு உறுதி செய்து வருகிறது. ஜி20 பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பிரகடனம் மற்றும் வேலைவாய்ப்பு பணிக்குழு முன்னுரிமைகள் குறித்து இன்று உரையாற்றிய அமைச்சர், புதிய ஊதிய விதிகள் 2019, ஊதியங்கள், பணியமர்த்தல் மற்றும் பணியமர்த்துவதற்கான நிபந்தனைகளில் பாலின வேறுபாட்டைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.

பணியிடங்களில் அனைத்து விதமான பணிகளை பெண்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி புரியும் நேரத்தில் அவர்களது பாதுகாப்பை பணியில் அமர்த்துபவர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் இரவு நேரங்களிலும் பணிபுரியலாம். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பின் கால அளவு 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டிருப்பதாக திரு கங்வார் கூறினார். பெண் தொழில்முனைவோர், சிறிய அளவிலான நிறுவனங்களைத் தொடங்குவதற்கு பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் நிதி உதவி அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் துணை ஈடு இல்லாமல் ரூ. 9 ஆயிரம் பில்லியன் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 70% பேர் பெண்கள்.

புதிய சமூகப் பாதுகாப்பு விதிகளின் படி சுயதொழில் புரிவோர் மற்றும் இதர பணியாளர்களும் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின்படி 60 வயதிற்கு மேற்பட்ட அமைப்புசாரா துறை பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு பிரகடனத்திற்கு ஆதரவளித்த அமைச்சர், விரைவாக வளர்ந்து வரும் மற்றும் பெருந்தொற்றால் அதிக சவால்களுக்கு உள்ளாகியுள்ள ஒட்டு மொத்த இளம் தலைமுறையினரின் முழு மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பில் முன்முயற்சி உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729764

*****************(Release ID: 1729835) Visitor Counter : 252