சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இன்று ஒரே நாளில் 80 லட்சம் டோஸ் கொவிட் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை
Posted On:
21 JUN 2021 9:05PM by PIB Chennai
அனைத்து தரப்பினருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளிலேயே சுமார் 81 லட்சம் (80,95,314) டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
தற்போதைய தடுப்பூசி திட்டம், பிரதமரால் கடந்த ஜூன் 7ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், தகுதியான மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இன்றைய சாதனை, கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதிலும், விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தடுப்பூசி கிடைக்கும் அளவை முன்கூட்டியே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தடுப்பூசி விநியோகத்தை மாநிலங்களால் சிறப்பாக திட்டமிட முடிகிறது. கடந்த மே மாதத்தில் 7.9 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைத்தன. இது ஜூன் மாதத்தில் 11.78 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் இலவச தடுப்பூசிகளும், மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளும், தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளும் அடங்கும்.
ஜூன் மாதத்தில் எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்கூட்டியே தெரிவித்துள்ளது. இந்த முன்கூட்டியே தெரிவிக்கப்படும் தகவலால், மாநில வாரியாக கொவிட் தடுப்பூசி மையங்களுக்கு விநியோக முறையை மாநிலங்களால் திறம்பட திட்டமிட முடிகிறது. இந்த வசதி நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,28,321 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. புதுச்சேரியில் இன்று 17,207 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. மற்ற மாநிலங்களில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
------
(Release ID: 1729252)
Visitor Counter : 327