பாதுகாப்பு அமைச்சகம்
உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட தொழில்களில் முதலீடு செய்ய ஸ்வீடன் நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அழைப்பு
Posted On:
08 JUN 2021 4:08PM by PIB Chennai
உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட தொழில்களில் முதலீடு செய்ய ஸ்வீடன் நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பு தளவாட தொழில் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பு குறித்த இணைய கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது. இதன் கருப் பொருள் ‘‘வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான முதலீட்டு வாய்ப்புகள்’.
இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்வீடன் பாதுகாப்பு தளவாட தொழில்துறை மூலமாக பாதுகாப்பு அமைச்சகத்தின் தளவாட பொருட்கள் உற்பத்தி துறை இந்த இணையகருத்தரங்கை நடத்தியது. இதில் தலைமை விருந்தினராக பாதுகாப்பத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும், கவுரவ விருந்தினராக ஸ்வீடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு பீட்டர் ஹல்ட்குவிஸ்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறைகள் குறித்து துவக்கவுரையாற்றிய திரு. ராஜ்நாத் சிங் கூறியதாவது:
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறைகள், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா மாற, வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் தாராளமயம், எளிதாக தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்துதல் போன்ற கொள்கை முடிவுகள், இந்தியாவில் கூட்டு முயற்சியில் தொழில் தொடக்க உலக நிறுவனங்களை ஈர்க்கிறது.
வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் தனியாகவோ, அல்லது இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ, ‘மேக் இன் இந்தியா’ வாய்ப்புகளில் முதலீடு செய்யலாம்.
உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் ராணுவ தளவாட தொழில்களில் முதலீடு செய்ய ஸ்வீடன் நிறுவனங்கள் முன்வர வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் தனித்துவமான சலுகைகளும் கிடைக்கும். அதிக திறன்வாய்ந்த தொழிலாளர்களும் கிடைப்பர். பாதுகாப்பு தளவாட தொழில்களின் பல துறைகளில் இந்தியா-ஸ்வீடன் நிறுவனங்கள் பரஸ்பர நலனுடன் இணைந்து செயல்பட பல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஏற்கனவே ஸ்வீடன் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்திய-ஸ்வீடன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஸ்வீடன் தொழிற்சாலைகளுக்கு, இந்திய நிறுவனங்களும் முக்கியமான தயாரிப்புகளை விநியோகிக்கலாம். தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட அன்னிய முதலீட்டு கொள்கை இந்திய மற்றும் ஸ்வீடன் நிறுவனங்களை பாதுகாப்பு தொழில்நுட்ப துறைகளில் இணைந்து செயல்பட வைக்கும்.
இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில் வலுவாக உள்ளது. இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் கப்பல்கள் உலக தரத்திலானவை. இதிலும், இந்தியா-ஸ்வீடன் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி பரஸ்பர பலன்களை பெறலாம்.
இவ்வாறு திரு ராஜ்நாத் சிங் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் , இருதரப்பு பாதுகாப்பு தளவாட தொழில் உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்வீடன் பாதுகாப்பு தளவாட தொழில்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்களின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதில் பாதுகாப்பு மற்றும் வான் துறையில் உள்ள 437 நிறுவனங்களின் திறன்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் 108 தளவாட பொருட்களின் விவரமும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725332
*****************
(Release ID: 1725371)
Visitor Counter : 287