தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பெருந்தொற்றினால் ஏற்படும் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இந்தியா உறுதி: மத்திய அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார்

Posted On: 05 JUN 2021 12:33PM by PIB Chennai

பெருந்தொற்றினால் ஏற்படும் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு வலுவாக எழுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் இந்தியா உறுதிப்பூண்டிருப்பதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 109-வது அமர்வின் கீழ் அணிசேரா இயக்கத்தின்  தொழிலாளர் நல அமைச்சர்களின் கூட்டத்தில் காணொலி வாயிலாக நேற்று உரையாற்றிய அமைச்சர், உலகளவில் அனைத்து பிரிவைச் சேர்ந்த மக்களும், குறிப்பாக நலிவடைந்த பிரிவினர், தங்களது உயிரையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மருத்துவ அமைப்பு முறைகள், சமூக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கலில் மேம்பட்ட ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு அனைவரின் நல்வாழ்வு, வர்த்தகத்தின் தொடர்ச்சி, வருமான பாதுகாப்பு ஆகியவற்றை சமன்படுத்தும் வகையிலான, கொள்கை அளவிலான முயற்சிகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மாபெரும் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 223 மில்லியன் தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் கூறினார். புதிய மாற்றங்களால் மக்களின் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் தலைசிறந்த மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்குத் தகுந்த வகையில் புதிய அணுகுமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் தளங்கள், சவாலாக இருந்தபோதும் அவை ஏராளமான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.

வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, திட்டங்களின் வாயிலாக சுகாதார மற்றும் நிதித் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக அமைச்சர் திரு கங்வார் கூறினார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ரூபாய் 27 ஆயிரம் பில்லியன் மதிப்பில் தற்சார்பு இந்தியா தொகுப்பு உருவாக்கப்பட்டது. இதன் கீழ் தகுதி வாய்ந்த புதிய ஊழியர்களுக்கு ஊதியத்தில் 24 சதவீதம் வரை தொழிலாளர் வைப்பு நிதியாக அரசு செலுத்துகிறது. சுமார் 70 சதவீத பெண்களை உள்ளடக்கிய முத்ரா திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில்  துணை ஈடு இல்லாமல் ரூபாய் 9 ஆயிரம் பில்லியன் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் அதிகரிக்கப்பட்டு, கடந்த நிதியாண்டில் மட்டும் 3.9 மில்லியன் பணி நாட்கள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724632

**************



(Release ID: 1724664) Visitor Counter : 193