அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

எக்ஸ்ரே சேது: வாட்ஸ்ஆப் மூலம் கொவிட் பாதிப்பை விரைவாக தெரியப்படுத்தும் புதிய தளம்

Posted On: 02 JUN 2021 9:30AM by PIB Chennai

கொவிட்-19 தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவும் வகையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) இயந்திர வசதிகள் கொண்ட மருத்துவர்கள், வாட்ஸ்அப் செயலி வாயிலாக மார்பு ஊடுகதிர் அறிக்கையைப்  பெறுவதற்கு, ஒரு புதிய, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தளம் வழிவகை செய்கிறது. எக்ஸ்ரே சேது என்று அழைக்கப்படும் இந்தத் தளத்தில், தெளிவு அதிகம் இல்லாத ஊடுக்கதிர் படங்கள், செல்பேசி வாயிலாக  அனுப்படுகின்றன. விரைவாகவும், எளிதாகவும் பயன்படுத்தப்படுவதுடன், ஊரகப் பகுதிகளில் தொற்றைக் கண்டறியவும் ஏதுவாக இருக்கும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால்  லாப நோக்கமல்லாத அமைப்பாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பப் பூங்கா (ஆர்ட்பார்க்), பெங்களூருவில் இயங்கும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான நிரமை, இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் அதிகம் தெளிவில்லாத மார்பு ஊடுக்கதிர் படங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளைக் கண்டறிவதற்காக எக்ஸ்ரே சேதுவை உருவாக்கியது.

இதனைப் பயன்படுத்துவதற்கு, www.xraysetu.com என்ற இணையதளத்தில் ‘Try the Free XraySetu Beta’ என்ற பொத்தானை மருத்துவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து அடுத்தக் கட்டமாக வாட்ஸ்அப் செயலியை அடிப்படையாகக் கொண்ட இணையம் வாயிலான தானியங்கி தகவல் பரிமாற்றம் அல்லது செல்பேசி செயலியை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அல்லது  +91 8046163838 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் எளிதாக எக்ஸ்ரே சேது சேவையைத் தொடங்கலாம். பிறகு நோயாளியின் ஊடுகதிர் புகைப்படத்தைத் தேர்வு செய்து ஒரு சில நொடிகளில் விளக்கப் படங்களுடன் கூடிய இரண்டு பக்க தானியங்கி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். கொவிட்-19 தொற்று சரிந்து வருவதன் நம்பகத்தன்மையை எடுத்துரைப்பதுடன், மருத்துவரின் பயன்பாட்டிற்காக உள்ளூர்மயமாக்கப்பட்ட விரிவான தகவல்களையும் இந்த அறிக்கை வெளியிடுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723592

******************


(Release ID: 1723694) Visitor Counter : 279