பாதுகாப்பு அமைச்சகம்

தற்சார்பு & ராணுவ தளவாட ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக 108 பொருட்களின் இரண்டாவது பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 31 MAY 2021 5:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘தற்சார்பு பாரத’ முயற்சியை தொடர்ந்து ராணுவ துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறையின் 108 பொருட்களின் இரண்டாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் செயல்மிகு பங்களிப்புடன் தற்சார்பு மற்றும் ராணுவ தளவாட ஏற்றுமதிகளை ஊக்குவித்தல் ஆகிய இரட்டை இலக்குகளை அடைய இது உதவும். உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டையும் இது ஆதரித்து, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி பிரிவுகளில் புதிய முதலீட்டை ஈர்க்கும்.

பட்டியலில் உள்ள அனைத்து 108 பொருட்களும் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, 2020-இன் படி இனி உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்.

ஹெலிகாப்டர்கள், சென்சார்கள், ஆயுதங்கள், அடுத்த தலைமுறை தளவாடங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், பீரங்கி எஞ்சின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன. டிசம்பர் 2021 முதல் டிசம்பர் 2025 வரை இது செயல்படுத்தப்படும். 2020 ஆகஸ்டில் முதல் பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-----


(Release ID: 1723238) Visitor Counter : 334