கலாசாரத்துறை அமைச்சகம்

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வேசக் சர்வதேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்று உரையாற்றினார்

Posted On: 26 MAY 2021 5:01PM by PIB Chennai

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வேசக் சர்வதேச கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக முக்கிய உரை நிகழ்த்தினார். மதிப்பிற்குரிய மகா சபை உறுப்பினர்கள், நேபாளம், இலங்கை நாடுகளின் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் திரு பிரகலாத் சிங் மற்றும் திரு கிரண் ரிஜிஜு, சர்வதேச புத்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், மதிப்பிற்குரிய மருத்துவர் தம்மபியா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பகவான் புத்தரின் வாழ்க்கையைக் கொண்டாடும் தினமாகவும், நமது பூமியின் நன்மைக்கான அவரது உயரிய கொள்கைகள் மற்றும் தியாகங்களை பிரதிபலிக்கும் தினமாகவும் புத்த பூர்ணிமா அமைகிறது என்று கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்த பூர்ணிமா தின நிகழ்ச்சியை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்கள பணியாளர்களுக்குத் தாம் அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு வருட காலத்திற்குப் பிறகும், கொவிட்- 19 பெருந்தொற்று நம்மை விட்டு நீங்காததுடன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதன் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகின்றன. வாழ்வில் ஒருமுறை நிகழும் இந்த பெருந்தொற்று, ஏராளமான மக்களுக்கு இன்னல்களை அளிப்பதுடன் ஒவ்வொரு நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்றினால் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கொவிட்- 19 தொற்றுக்குப் பிறகு நமது பூமி எப்போதும் போல் இருக்காது என்றும் அவர் கூறினார்.

எனினும் கடந்த ஆண்டைவிட தற்போது குறிப்பிடத்தக்க மேம்பாட்டு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெருந்தொற்று பற்றிய சிறந்த புரிதலால் போராட்டத்தில் நமது உத்திகள் வலுப்பெறுகின்றன, பெருந்தொற்றை வெல்லவும் உயிர்களைப் பாதுகாக்கவும் மிக முக்கியமாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வருட காலத்திற்குள்ளாகவே கொவிட்-19 தடுப்பூசிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், மனிதாபிமான உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சியின் ஆற்றலை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.

கௌதம புத்தரின் வாழ்வு அமைதி, இணக்கம், ஒற்றுமை ஆகியவற்றால் நிறைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். எனினும் வன்மம், தீவிரவாதம் மற்றும் பொறுப்பற்ற வன்முறையைப் பரப்புவதை அடிப்படையாகக்கொண்டு சில சக்திகள் இன்றும் இயங்குகின்றன. இது போன்ற சக்திகள், தாராளமயமான ஜனநாயகக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவை என்று கூறிய பிரதமர், எனவே பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை வீழ்த்துவதற்காக மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.

பகவான் புத்தரின் போதனைகளும் சமூக நீதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் சர்வதேச ஒருங்கிணைப்பு சக்தியாக உருவாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் முழு உரையை இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721900

நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல், உலகம் முழுவதும் கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொண்டு வரும் சூழலில், பகவான் புத்தரின் போதனைகள் நமக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது என்று கூறினார். பகவான் புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவ கதைகளை  எடுத்துரைத்த அமைச்சர், நெருக்கடியான தருணத்திலும் அமைதியாக அதனை எதிர்கொள்ள இது போன்ற கதைகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.

புத்த பூர்ணிமா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிறுபான்மை விவகாரங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இந்தியா, நேபாளம் மற்றும் உலகின் இதர பகுதிகளில் கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், பெருந்தொற்றிலிருந்து விரைவில் மீளவும் பிரார்திப்பதற்காக இந்த வேசக்- புத்த பூர்ணிமா நிகழ்ச்சியை அர்ப்பணிப்பதாகக் கூறினார். இந்தப் புனித தினத்தில், பகவான் புத்தர் அருளிய 8 நெறிகளைப் பின்பற்றி அதன்படி செயல்பட  உறுதி ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

புத்த தத்துவ அறிஞர்களுக்கு 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான வைசாக் சம்மான் பிரசஸ்தி பத்ரா விருதுகளை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் வழங்கினார்.

உலக அமைதி மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து நிவாரணத்திற்காக இந்த வருட புத்த பூர்ணிமா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721904

----


(Release ID: 1721940) Visitor Counter : 269