இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 143 கேலோ இந்தியா மையங்களைத் திறப்பதற்கு விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்

Posted On: 25 MAY 2021 5:05PM by PIB Chennai

மத்திய விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் 7 மாநிலங்களில் ரூ. 14.30 கோடி மதிப்பில் 143 கேலோ இந்தியா மையங்களைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையங்கள் தலா ஒரு விளையாட்டுப் பிரிவை மையப்படுத்தி செயல்படும். மகாராஷ்டிரா, மிசோரம், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த கேலோ இந்தியா மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தில் 52 மையங்கள் (ரூ. 4.12 கோடி), மகாராஷ்டிராவில் 36 மையங்கள் (ரூ. 3.60 கோடி), கர்நாடகாவில் 31 மையங்கள் (ரூ. 3.10 கோடி), மணிப்பூரில் 16 மையங்கள் (ரூ. 1.60 கோடி), மத்திய பிரதேசத்தில்  4 மையங்கள் (ரூ. 40 லட்சம்), கோவா மற்றும் மிசோரமில்  ரூ. 20 லட்சம் மதிப்பில் தலா 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அடிமட்ட அளவில் விளையாட்டுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் கேலோ இந்தியா மையங்களைத் தொடங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, 2028 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் 10 நாடுகளுள் இந்தியா இடம்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த இலக்கை அடைவதற்காக இளம் பருவத்தில் இருந்தே திறமைவாய்ந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்மாவட்ட அளவிலான கேலோ இந்தியா மையங்களில் இடம்பெற்றுள்ள திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் உபகரணங்களின் உதவியுடன் சரியான தருணத்தில், சரியான விளையாட்டிற்கு, சரியான குழந்தையை நம்மால் கண்டறிய முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன், என்று கூறினார்.

4 ஆண்டுகளுக்குள் 1000 கேலோ இந்தியா மையங்களைத் தொடங்குவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டது. இதற்கு முன்பாக பல்வேறு மாநிலங்களில் 217 மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் லடாக்கில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னாள் ஓட்டப்பந்தய சாம்பியன்களை இந்த மையங்களில் பயிற்சி அளிக்க மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அடிமட்ட அளவில் விளையாட்டு சூழலியலை மேம்படுத்தும் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, குறைந்த செலவில், தரமான விளையாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளைஞர்களுக்கும், தன்னிலையாக விளையாட்டு பயிற்சி அளிப்பவர்களுக்கும் முன்னாள் ஓட்டப்பந்தய வீரர்கள் முறையான பயிற்சியை வழங்குவார்கள்.

இதற்கென அளிக்கப்படும் நிதியுதவி, முன்னாள் வீரர்கள், உதவியாளர்களுக்கு  ஊதியம் வழங்கவும், உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் முதலியவற்றை வாங்குவதற்கும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கும் பயன்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721632

----(Release ID: 1721712) Visitor Counter : 225