சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19-க்கான அமைச்சர்கள் குழுவின் 27-வது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார்

Posted On: 24 MAY 2021 6:32PM by PIB Chennai

கொவிட்-19-க்கான அமைச்சர்கள் குழுவின் 27-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் இன்று  தலைமை வகித்தார். 

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் புரி, கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே பால் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்காக இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விளக்கிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், "இன்றோடு தொடர்ந்து 11-வது நாளாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்றைக்கு தொடர்ந்து எட்டாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான தினசரி பாதிப்புகளை நாம் கண்டு வருகிறோம். இது நேர்மறை அறிகுறியாகும்.

தற்போதைய நிலையில் நமது நாட்டில் 27 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் உள்ளனர். இரு வாரங்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 37 லட்சமாக இருந்தது," என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு உயிரிழப்பும் சோகம் மிகுந்தது என்று வருத்தம் தெரிவித்த அமைச்சர், அதிகம் பேர் உயிரிழப்பது கவலையளிப்பதாக கூறினார். தடுப்பு மருந்து மற்றும் மருத்துவ இடையீடுகள் குறித்து பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், "நமது நாட்டு மக்களுக்கு 19.6 கோடி டோஸ்களை நாம் ஏற்கனவே வழங்கியுள்ளோம். இன்னும் 60 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் மாநிலங்களிடம் உள்ளன. மேலும் 21 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட உள்ளன," என்று தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோஸிஸ் பாதிப்புகளை கண்டறிவதில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை பாராட்டிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், 18 மாநிலங்களில் இருந்து 5424 பாதிப்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் அதிகளவிலான பாதிப்புகள் உள்ளதாகவும் கூறினார்.

 கூட்டத்தில் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநலம் இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே, டிஆர்டிஓ உருவாக்கியுள்ள 2-டிஜி மருந்தை அதிக அளவில் கிடைக்க செய்யவேண்டும் என்றும், வீட்டு பரிசோதனை கருவிகளின் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்  செல்லக்கூடிய மற்றும் வீட்டு பரிசோதனை கருவிகளை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கான வழிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

**********************


(Release ID: 1721378) Visitor Counter : 261