நிதி அமைச்சகம்

கெய்ர்ன் நிறுவன சட்ட விவகாரம்: தவறான ஊடக செய்திகளை இந்திய அரசு வன்மையாகக் கண்டிப்பு

Posted On: 23 MAY 2021 2:23PM by PIB Chennai

கெய்ர்ன் நிறுவன சட்ட பூசல்களின் விளைவாக வெளிநாட்டு நாணயக் கணக்குகள் முடக்கப்படலாம் என்பதால் இதுபோன்ற கணக்குகளில் இருந்து நிதியைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு சொந்தமான வங்கிகளை இந்திய அரசு, கேட்டுக் கொண்டுள்ளதாக ஒருசில ஊடகங்களில் பொய்யாக வெளியாகியுள்ள செய்திகளை இந்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்தது. உண்மைகள் மற்றும் வழக்கின் சட்ட நிலைகளுக்கு எதிராக பெயர் குறிப்பிடப்படாத தரப்பிலிருந்து திசை திருப்பும் வகையில் ஒரு சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அரசு சட்டபூர்வமாக இந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய மிகுந்த குறைபாடுகளுடனான தீர்ப்பிற்கு எதிராக 2021 மார்ச் 22 அன்று இந்திய அரசு விண்ணப்பித்தது உண்மை.

இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு பல்வேறு காரணங்களை எடுத்துரைத்துள்ளது:

1.       தேசிய வரி பூசலில் சமரச தீர்ப்பிற்கு இந்திய குடியரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் தீர்ப்பாயம் முறையற்ற சட்ட அதிகாரத்தை பயன்படுத்தியது

2.       இந்திய வரிச் சட்டங்களுக்கு எதிராக வரி ஏய்ப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பின் கோரிக்கை அமைந்திருப்பதால், இந்திய- இங்கிலாந்து இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் கெய்ர்ன் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட முதலீடுகளின் பாதுகாப்பு நீக்கப்படுகிறது.

3.       உலகளவில் அரசுகளுக்கு கவலை அளிக்கும் வகையில் உலகில் எங்கும் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை வரிவிதிப்பில்லா பொது கொள்கையை கெய்ர்ன் நிறுவனம் பயன்படுத்துவதை உறுதி செய்யும் முறையற்ற தீர்ப்பாக இது அமைந்துள்ளது.

இந்த சட்டபூர்வமான நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினையை  எதிர்கொள்வதற்காக சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு உறுதி பூண்டுள்ளது.

கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இதர உறுப்பினர்களும் இந்த பிரச்சனையை தீர்ப்பது குறித்து விவாதிக்க இந்திய அரசை அணுகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்றிருப்பதுடன், நாட்டின் சட்ட வரம்பிற்கு உட்பட்ட சுமூகமான தீர்விற்கு அரசு தயாராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721039

-----



(Release ID: 1721086) Visitor Counter : 190