சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கவச உடைகளை அணியும் கொரோனா போராளிகளுக்கு ஓர் ‘குளுமையான’ நிவாரணி: மும்பை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

Posted On: 23 MAY 2021 11:00AM by PIB Chennai

கொவிட்- 19 தொற்றுக்கு எதிராக முழுவீச்சுடன் போராடிவரும் மருத்துவப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் முழு உடல் கவசத்தில் பயன்படுத்தப்படும் புதிய செயற்கை சுவாசக் கருவியை மும்பையைச் சேர்ந்த மாணவர் திரு நிஹால் சிங் ஆதர்ஷ் கண்டுபிடித்துள்ளார். கோவ்-டெக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கையடக்க, எளிய கண்டுபிடிப்பு, வெறும் நூறு நொடிகளில் தூய்மையான காற்றை வெளியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த புதிய கண்டுபிடிப்பைப் பற்றி மும்பை பத்திரிக்கை தகவல் அலுவலகத்திடம் பேசிய இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவரான  திரு நிஹால், “முழு உடல் கவசம் அணியும் போதும், மின் விசிறியின் கீழ் அமரும் உணர்ச்சியை கோவ்-டெக் செயற்கை சுவாசக் கருவி வழங்கும். சுற்றுப்புறக் காற்றை உள்ளிழுத்து, அதை வடிகட்டி, தூய்மையான காற்றை முழு உடல் கவசத்தின் உள்ளே இந்தக் கருவி செலுத்தும். பொதுவாக, போதிய காற்று வசதி இல்லாததால் முழு உடல் கவசத்தை அணியும்போது, வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். எங்களது புதிய கண்டுபிடிப்பு, உடல் கவசத்தின் உள்ளே சீரான காற்றை செலுத்துவதால் இதுபோன்ற அசௌகரியங்கள் களையப்படும்”, என்று கூறினார்.

தமது தாய் டாக்டர் பூனம் கவுர் ஆதர்ஷ், முழு உடல் கவசத்தை அணிந்து கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து, அவர் போன்ற இதர மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கத்தோடு, 19 வயதான திரு நிஹால் இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டார். 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவு மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவுடன் செயல்படும் சோமய்யா  வித்யாவிகார் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு ஆதரவு வடிவமைப்பு ஆய்வகத்தின் உதவியோடு  இடுப்பில் அணியும் வகையிலான மாதிரியை திரு நிஹால் உருவாக்கினார். இதன்மூலம் மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய காற்று வசதி கிடைப்பதுடன் பல்வேறு தொற்றுகளில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.

ரூ.5499 விலையில் விற்பனை செய்யப்படும் இந்தக் கருவி, புனேவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30-40 கருவிகள் சோதனை முயற்சியில் மருத்துவமனைகளுக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721012

                                                                                              ----



(Release ID: 1721043) Visitor Counter : 235