சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனாவுக்கான பொது சுகாதார நடவடிக்கை, தடுப்பூசி பணியில் முன்னேற்றம் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு
Posted On:
21 MAY 2021 6:40PM by PIB Chennai
கொரோனாவுக்கான பொது சுகாதார நடவடிக்கை, தடுப்பூசி பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு நடத்தினார்.
சத்தீஸ்கர், கோவா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி ஆகியவற்றின் சுகாதார அமைச்சர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு, லடாக் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றின் துணைநிலை ஆளுநர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே முன்னிலையில் அவர் கலந்துரையாடினார்.
கொரோனா நிலவரம் குறித்து விளக்கிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் தற்போது 30,27,925 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 3,57,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசி நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் மக்களுக்கு
19,18,89,503 தடுப்பூசிகள் போடப்பட்டதாக தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை, இந்தியா, 216 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் எனவும், இந்தாண்டு ஜூலை மாதத்துக்குள் 51 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தாண்டு இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து வயது வந்தோருக்கும், தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நாடு இருக்கும் எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை தொற்று குறித்து குறிப்பிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்தன், இதை தொற்று நோயாக அறிவிக்கும்படியும், இந்த தொற்று பாதிப்புகளை முறையாக தெரிவிக்கும்படியும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு, ஸ்டீராய்டு மருந்துகளை குறைந்தளவில் பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசியில் கவனம் செலுத்தும்படியும், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மருந்துகள், மற்றும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு உதவியையும் அளித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வின் குமார் சவுபே தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720679
*****************
(Release ID: 1720749)
Visitor Counter : 250