எஃகுத்துறை அமைச்சகம்

ரூர்கேலாவில் கொவிட் நோயாளிகளுக்காக செயற்கை சுவாசக் கருவிகள் வசதியை அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 20 MAY 2021 2:45PM by PIB Chennai

மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்திய எஃகு ஆணைய நிறுவனத்திற்குச் (செயில்) சொந்தமான இஸ்பட் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் (ஐபிஜிஐ) மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கொவிட் நோயாளிகளின் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவுகளில் செயற்கை சுவாசக் கருவிகளை இன்று மக்களுக்கு அர்ப்பணித்தார்.

மெய்நிகர் வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலஸ்தே, ஒடிசா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் திரு நபா கிசோர் தாஸ், சுந்தர்கர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜூவல் ஓரம், செயில் நிறுவனத்தின் தலைவர் திருமிகு சோமா மொண்டால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரதான், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை வசதிகளை ரூர்கேலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெற்று பயனடைவதாகக் கூறினார். அந்தப் பகுதியில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பின் கூடுதல் வசதியாக அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான ஒடிசா மாநிலத்தின் போராட்டம் வலுப்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்திலும், தேசிய அளவிலும் எஃகு நிறுவனங்கள் பெருந்தொற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருவதாக அமைச்சர் கூறினார்.

ஒப்பந்த ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறு செயில் நிறுவனத்தை அமைச்சர் திரு பிரதான் கேட்டுக்கொண்டார். தடுப்பூசியை நோக்கிய 1+2 என்ற அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதாவது, பெரு நிறுவனம் தடுப்பூசி வழங்கும் ஒவ்வொரு ஊழியருடன், ஊழியர் அல்லாத இரண்டு நபர்களுக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும்என்று அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் முதல் ரூர்கேலா எஃகு ஆலையில் இருந்து சுமார் 9,653 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிரதமரின் உத்தரவின்பேரில் 500 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை ரூர்கேலா எஃகு ஆலை நிறுவி வருவதாகவும், இதன் மூலம் பிராணவாயு மற்றும் இதர தேவைகள் ஆலையிலிருந்து நேரடியாக விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம்  இங்கு பிராணவாயு வசதியுடன் கூடிய 1000 படுக்கைகளும், 225 செயற்கை சுவாச கருவிகளும்  பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720233

*****************



(Release ID: 1720324) Visitor Counter : 200