மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மெய்நிகர் மோசடியாளர்களைக் கண்டறியும் 'ஃபேக்பஸ்டர்’
Posted On:
19 MAY 2021 10:14AM by PIB Chennai
பஞ்சாப் மாநிலத்தின் ரோபோரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து மெய்நிகர் கருத்தரங்கங்களில் எவருக்கும் தெரியாமல் நுழையும் போலி நபர்களைக் கண்டறிவதற்காக ‘ஃபேக்பஸ்டர்’ என்று அழைக்கப்படும் தனித்துவம் வாய்ந்த கண்டறிவியை உருவாக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் ஒருவரைக் களங்கப்படுத்தும் அல்லது கேலி செய்யும் வகையில் ஒருவரது முகத்திற்குப் பதிலாக வேறு ஒருவரது முகத்தை மாற்றுவது போன்ற செயல்களையும் இந்தக் கருவியால் கண்டறிய முடியும்.
தற்போதைய பெருந்தொற்று காலகட்டத்தில், பெரும்பாலான அலுவலகக் கருத்தரங்குகளும், பணிகளும் இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் வேளையில், இந்தத் தீர்வின் வாயிலாக மெய்நிகர் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள யாரேனும் ஒருவரது காணொலி, போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். அதாவது இணையக் கருத்தரங்கம் அல்லது மெய்நிகர் வாயிலாக நடைபெறும் கூட்டங்களில், உங்களது சக பணியாளர்களின் ஒருவரது சார்பாக வேறு ஒருவர் அவரது முகத்தை மாற்றிக் கலந்து கொள்கிறாரா என்பதை இந்தத் தொழில்நுட்பம் கண்டறியும்.
இந்த ‘ஃபேக்பஸ்டர்’ கருவியை உருவாக்கிய நான்கு நபர் குழுவில் முக்கிய உறுப்பினரான டாக்டர் அபினவ் தால் இதுபற்றிக் கூறுகையில், “அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வாயிலாக ஊடகங்களில் போலியான தகவல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து மிகவும் யதார்த்தமாகக் காட்சி தருகின்றன. இதனை கண்டறிவது மிகவும் சவாலாக உள்ளது”, என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719821
-------
(Release ID: 1719879)
Visitor Counter : 260