பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

கொவிட் தடுப்பு பணிக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி மானியம் : பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பரிந்துரைப்படி நிதியமைச்சகம் வழங்கியது

Posted On: 18 MAY 2021 5:28PM by PIB Chennai

கொவிட் தடுப்பு பணிக்காக  25 மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பரிந்துரைப்படி ரூ.8,923.8 கோடி மானியத் தொகையை மத்திய நிதித்துறை அமைச்சகம் வழங்கியது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் கொவிட் பரவல் சமீபத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தீர்க்கப்பட வேண்டும். இது குறித்த விழிப்பணர்வு கிராம மக்களிடையே குறைவாக உள்ளது. இதோடு, கிராமங்களில் ஆதரவு முறைகளும் போதிய அளவில் இல்லை. இது தொற்றை திறம்பட எதிர்கொள்வதில், நெருக்கடியான சூழலை உருவாக்கலாம். ஆகையால், பஞ்சாயத்துக்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது குறித்து முறையாக  உணர்த்தி, இந்த சவால்களை எதிர்கொள்ளும் வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை  கடந்தாண்டு வழங்கியது போல் வழங்க வேண்டும்.

இவற்றை கருத்தில் கொண்டு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்றுமத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, 25 மாநிலங்களின் ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி மானியத் தொகையை வழங்கியுள்ளது. இந்தத் தொகை அடிப்படை மானியத்தின், முதல் தவணைத் தொகை. இதை கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கொவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவது தொடர்பாக, பங்சாயத்துகளுக்கு கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பங்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1. கொவிட்-19 பாதிப்பின் தன்மை, தடுப்பு நடவடிக்கைகள்  குறித்து கிராம மக்களிடையே தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

2. இந்த பிரசாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள் போன்றோரை ஈடுபடுத்த வேண்டும்.

3. அவர்களுக்கு ஆக்ஸிமீட்டர், என்-95 முககவசங்கள், உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள், கிருமிநாசினிகள் வழங்க வேண்டும்.

4. மருத்துவ கட்டமைப்புகளை கிராம மக்கள் திறம்பட பயன்படுத்தும் வகையில்கொவிட் பரிசோதனை/ தடுப்பூசி மையங்கள், மருத்துவர்கள், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பற்றி நிகழ்நேர தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

5. இது போன்ற தகவல்களை கண்காணிக்கவும், தெரிவிக்கவும் பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகள், பொதுச் சேவை மையங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும்

6.       ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு தனிமை மையங்களை அமைக்கலாம்.

7.       மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பஞ்சாயத்துகள் நேரடியாக ஈடுபட வேண்டும்

8. மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, மேம்பட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் கிடைக்க அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் முறையான தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719631

-----



(Release ID: 1719763) Visitor Counter : 226