சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கம் இல்லை

Posted On: 06 MAY 2021 12:16PM by PIB Chennai

இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கத்தில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகளின் அனுமதிக்காக, சுங்கத்துறை கிடங்குகளில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேங்கி கிடக்கின்றன என ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. அடிப்படை ஆதாரம் அற்றவை.

சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கத்தில் இல்லை என மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா தொடர்பான அனைத்து இறக்குமதி சரக்குகளையும் இந்திய சுங்கத்துறை உடனடியாக அனுமதியளித்து வெளியே அனுப்புகிறது எனவே எந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் தேக்கமடையவில்லை.

உலகளாவிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் பல வெளிநாடுகளில் இருந்து மொத்தம், 3000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் மொரீசியஸில் இருந்து 200,  ரஷ்யாவிலிருந்து 20, இங்கிலாந்திலிருந்து 4 பார்சல்களில் (95+120+280+174), ருமேனியாவிலிருந்து 80, அயர்லாந்திலிருந்து 700, தாய்லாந்திலிருந்து 30, சீனாவிலிருந்து 1000, மற்றும் உஸ்பெகிஸ்தானிலிருந்து 151 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், தைவான் 150 செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், செல்லவேண்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரண பொருட்கள் சாலை வழியாகவும், வான் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன. சுங்கத்துறையின் கிடங்குகளில், எந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் தேங்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான சாதனங்கள் உட்பட கொவிட் தொடர்பான இறக்குமதி பொருட்கள் தேவைப்படுவோருக்கு உடனடியாக கிடைப்பதில், இந்திய சுங்கத்துறை உணர்வுபூர்வமாக உள்ளது.

இந்த இறக்குமதி சரக்குகள் வந்ததும், சில மணி நேரங்களிலேயே அனுமதி வழங்குவதற்காக 24 மணி நேரமும் சுங்கத்துறை செயல்படுகிறது.

இறக்குமதி பொருட்களை வெளியே அனுப்புவதில் கொவிட் நிவாரண பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கண்காணிப்பு மற்றும் அனுமதிக்கான தகவல்களை சிறப்பு அதிகாரிகள் இ-மெயில் மூலம் பெறுகின்றனர். கொவிட் தொடர்பான இறக்குமதி பொருட்களுக்கு உடனுக்குடன் அனுமதி அளிக்கப்படுகிறதா என்பதை  அதிகாரிகளும்  கண்காணிக்கின்றனர்.

 சமீபத்தில், 3,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அடங்கிய பார்சல் ஒன்று சுங்கத்துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது என்ற விவகாரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது எந்த பார்சலும், சுங்கத்துறை அதிகாரிகளிடம் நிலுவையில் இல்லை.

3,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சுங்கத்துறையிடம் நிலுவையில் உள்ளதாக வந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியதற்கு, மத்திய நிதியமைச்சகமும், அறிக்கை மூலம் விளக்கம் அளித்தது. ‘‘நாங்கள் எங்கள் கள அமைப்பின் மூலம் மீண்டும் விசாரித்தோம். சுங்கத்துறையிடம் எந்த சரக்கும் நிலுவையில் இல்லை. ஆனாலும், ஒரு புகைப்படம்  டிவிட்டரில் போடப்பட்டுள்ளதால், கொவிட் நிவாரண பொருட்கள் தேங்கி கிடப்பதாக யாருக்காவது தகவல் கிடைத்தால், அதை எங்களுக்கு தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்’’ என நிதியமைச்சகம் தனது அறிக்கையில்  தெரிவித்தது. 

*******************



(Release ID: 1716471) Visitor Counter : 189