தேர்தல் ஆணையம்

பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை கொவிட் பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது

Posted On: 05 MAY 2021 8:05PM by PIB Chennai

தாத்ரா & நாகர் ஹவேலி, 28-கந்த்வா (மத்தியப் பிரதேசம்) மற்றும் 2-மண்டி (இமாச்சலப் பிரதேசம்) ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், 01-கல்கா மற்றும் 46-எல்லென்பாத் (ஹரியானா), 155-வல்லப்நகர் (ராஜஸ்தான்), 33-சிண்ட்கி (கர்நாடகா), 47-ராஜபால மற்றும் 13-மாவ்ரிங்க்னெங்க் (எஸ் டி) (மேகாலாயா), 08-ஃபதேப்பூர் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் 124-பட்வேல் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

இன்னும் சில இடங்களும் காலியாக உள்ள நிலையில், அவை தொடர்பான அறிக்கைகள், அறிவிப்புகளுக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 151ஏ-ன் படி, ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள், அந்த பதவிக்கான ஆயுள் ஒரு வருடமோ அதற்கு மேற்பட்டோ இருந்தால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மேற்கண்டவற்றை இன்று ஆய்வு செய்த ஆணையம், நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட்-19 இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல்கள் நடத்துவது சரியாக இருக்காது என்றும், நிலைமை குறிப்பிடத்தகுந்த அளவு சீரடைந்த பின்னர் இந்த இடைத்தேர்தல்களை நடத்திக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தது.

தொடர்புடைய மாநிலங்களிடம் இருந்து கருத்துகளை பெற்ற பின்னரும், பெருந்தொற்று சூழ்நிலையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை மூலம் ஆய்வு செய்த பிறகும் இடைத்தேர்தல்கள் குறித்த முடிவை சரியான நேரத்தில் ஆணையம் எடுக்கும்.

*****************  


(Release ID: 1716368) Visitor Counter : 201