ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு மத்திய ரசாயணத்துறை அமைச்சர் பாராட்டு
Posted On:
05 MAY 2021 2:52PM by PIB Chennai
கொவிட் சிகிச்சை மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு குறித்து மத்திய ரசாயணத்துறை அமைச்சர் திரு டி.வி சதானாந்த கவுடா ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் மருந்துகள் துறை செயலாளர் திருமிகு எஸ்.அபர்னா உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யும் 7 நிறுவனங்களும், உற்பத்தியை மாதத்துக்கு 38 லட்சம் குப்பிகளில் இருந்து 1.03 கோடி குப்பிகளாக அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகளை அமைச்சர் திரு சதானந்த கவுடா பாராட்டினார். இவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது, தேவைக்கேற்ப மாறும் முறை என தெரிவித்த அவர், வரும் வாரங்களில் இதன் விநியோகத்தை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதர அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சந்தை மற்றும் மருந்து துறைகளில் போதிய அளவு மருந்துகள் கிடைப்பதாக இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் டாக்டர் சோமானி தெரிவித்தார். கள்ளச்சந்தையில் மருந்துகள் பதுக்கி வைக்கப்படுகிறதா என்பது குறித்து மாநில அளவில் சோதனைகள் நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய மருந்துகள் குறுகிய காலத்தில் கிடைப்பதற்கு மருந்து நிறுவனங்கள், மருந்து துறை அதிகாரிகள், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், மத்திய சுகாதார துறை அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதை அமைச்சர் திரு. சதானந்த கவுடா பாராட்டினார்.
*******************
(Release ID: 1716306)