தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
5ஜி தொழில்நுட்பம் மற்றும் அலைக்கற்றை பரிசோதனைகளை மேற்கொள்ள தொலை தொடர்புத்துறை ஒப்புதல்
Posted On:
04 MAY 2021 4:38PM by PIB Chennai
தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை இன்று அனுமதி வழங்கியது.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன், ஐடியா லிமிடெட் மற்றும் எம்டிஎன்எல் போன்ற தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் 5 ஜி தொழில்நுட்பத்துக்கு விண்ணப்பித்திருந்தன.
இந்த தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பங்களை வழங்கும் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த 5ஜி பரிசோதனைகளை நடத்தவுள்ளது.
முன்னுரிமைகள் மற்றும் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ள தொழில்நுட்ப பங்குதாரர்களின் அடிப்படையில் இந்த அனுமதியை தொலை தொடர்புத்துறை வழங்கியுள்ளது.
இதற்காக பரிசோதனை அலைக்கற்றை, நடுத்தர அலைவரிசை , மில்லி மீட்டர் அலை வரிசை, சப்-ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசை என பல அலைவரிசைகளில் வழங்கப்படுகின்றன. தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பத்தை பரிசோதிக்க, தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள அலைக்கற்றையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படும்.
தற்போது இந்த பரிசோதனைக் காலம் 6 மாதங்கள். கொள்முதல் மற்றும் கருவிகளை நிறுவுவதற்கான 2 மாதங்களும் இதில் அடங்கும்.
இந்த பரிசோதனைகளை கிராமங்கள், வளரும் நகரங்கள் மற்றும் நகரங்களில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நடத்த வேண்டும் என அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன் நாடும் முழுவதும் பரவும்.
இந்தியா பரிந்துரைத்த 5ஜி தொழில்நுட்பத்துக்கு, சர்வதேச தொலை தொடர்பு சங்கமும் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 5ஜி தொலை தொடர்பு கோபுரங்கள், ரேடியோ நெட்வொர்க் அதிகளவில் ஏற்படும். இந்த 5ஜி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி, வயர்லெஸ் தொழில்நுட்ப சீர்மீகு மையம் மற்றும் ஐதராபாத் ஐஐடி ஆகியவை உருவாக்கியுள்ளன.
5ஜி அலைக்கற்றை உட்பட 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதன் நோக்கம், உள்நாட்டு தொழில்நுட்பத்தை பரிசோதிப்பது, தொலைதூர மருத்துவ சேவை, தொலைதூர கல்வி, காணொலி காட்சி தொடர்பை மேம்படுத்துவது, ட்ரோன்கள் அடிப்படையிலான வேளாண் கண்காணிப்பு, 5ஜி போன்கள் மற்றும் கருவிகளை பரிசோதிப்பது ஆகியவை ஆகும்.
5ஜி தொழில்நுட்பம் டேட்டா பதிவிறக்கத்தின் வேகத்தை, 4ஜி தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு அதிகரிக்கும். அலைக்கற்றையின் திறன் 3 மடங்கு அதிகரிக்கும். பல துறைகளில் இன்டர்நெட் சேவைகள் மேம்படும்.
*****************
(Release ID: 1715949)
Visitor Counter : 604