பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக அவசரகால நிதி அதிகாரங்களை பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்

Posted On: 30 APR 2021 6:01PM by PIB Chennai

நாட்டில் தற்போது நிலவி வரும் கொவிட்-19 சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு படைகளின் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சிறப்பு விதிமுறைகளின் வாயிலாக அவசரகால நிதி அதிகாரங்களை பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 ஏப்ரல் 30 அன்று வழங்கினார்.

இதன் மூலம், தனிமைப்படுத்தல் மையங்கள்/மருத்துவமனைகள் போன்றவற்றை தளபதிகளால் நிறுவ முடியும், உபகரணங்கள், பொருட்கள், சேமிப்பு மையங்கள் ஆகியவற்றின் கொள்முதல் மற்றும் பழுதுபார்த்தலை செய்ய முடியும்,

பெருந்தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் தேவையான ஆதரவை வழங்குவதற்கான பல்வேறு சேவைகள் மற்றும் பணிகளை செய்ய முடியும்.

இந்த அதிகாரங்களின் கீழ், பாதுகாப்பு படைகளின் துணைத்தலைவர்கள், பாதுகாப்பு பணியாளர்களின் ஒருங்கிணைந்த தலைவர், பணியாளர் குழுக்களின் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகள் என முப்படை அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும், படைகளின் தளபதிகள், மண்டல தளபதிகள் ஆகியோருக்கு ஒரு பணிக்கு ரூபாய் 50 லட்சம் வரையிலான அதிகாரமும், பகுதி தளபதிகள், துணைத் தளபதிகள் மற்றும் அதற்கு சமமான பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு பணிக்கு ரூபாய் 20 லட்சம் வரையிலான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2021 மே 1 முதல் ஜூலை 31 வரை மூன்று மாத காலத்திற்கு இந்த அதிகாரங்கள்  அமலில் இருக்கும். பாதுகாப்பு படைகளின் மருத்துவ அதிகாரிகளுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்களுக்கு கூடுதலாக இவை இருக்கும்.

கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போதும் இதுபோன்று அவசரகால அதிகாரங்கள் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் நிலைமையை வேகமாகவும், செயல்திறன் மிக்க வகையிலும் கையாள பாதுகாப்பு படைகளால் முடிந்தது.

----


(Release ID: 1715187) Visitor Counter : 150