பிரதமர் அலுவலகம்

இந்திய விமானப்படையின் கொவிட் தொடர்பான செயல்பாடுகள் : பிரதமர் ஆய்வு

Posted On: 28 APR 2021 2:51PM by PIB Chennai

விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

கொவிட்-19 தொடர்பான சூழ்நிலையில் உதவுவதற்காக இந்திய விமானப் படை எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார்.

நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் கொவிட் தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்த கனரகப் பிரிவு படையையும், நடுத்தர ரக படைகளில் குறிப்பிட்ட அளவையும் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளதாக பிரதமரிடம் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா தெரிவித்தார். செயல்பாடுகள் 24 மணி நேரமும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து படைகளுக்கும் தேவையான விமானப் பணியாளர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வேகம், அளவு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியதன் தேவை குறித்து பிரதமர் வலியுறுத்தினார். கொவிட் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப்படை பணியாளர்கள் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். கொவிட் தொடர்பான அனைத்து செயல்பாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து பகுதிகளையும் சென்றடைவதற்காக பெரிய மற்றும் கனரக விமானங்களை இந்திய விமானப்படை ஈடுபடுத்தி உள்ளதாக ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா தெரிவித்தார். கொவிட் தொடர்பான செயல்பாடுகளில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுடன் வேகமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக பிரத்தியேக கொவிட் சிறப்பு விமான ஆதரவு பிரிவை இந்திய விமானப்படை உருவாக்கியுள்ளதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இந்திய விமானப்படையில் கிட்டதட்ட அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா தெரிவித்தார்.

இந்திய விமானப்படையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் கொவிட் தொடர்பான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

*****


(Release ID: 1714627) Visitor Counter : 261