பிரதமர் அலுவலகம்
மனதின் குரல், 76-ஆவது பகுதி
Posted On:
25 APR 2021 11:34AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மனைவரின் பொறுமையையும், துன்பத்தைத் தாங்கும் திறனையும் கொரோனாவானது சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நமக்கு உற்றவர்கள் பலர் அசந்தர்ப்பமான வேளையில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், தேசத்தின் மனோநம்பிக்கை பொங்கிக் கொண்டிருந்தது, தன்னம்பிக்கை நிரம்பி இருந்தது, ஆனால் இந்தச் சூறாவளியானது தேசத்தை உலுக்கி விட்டிருக்கிறது.
நண்பர்களே, கடந்த நாட்களில் இந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி, பல்துறை வல்லுநர்களோடு நான் நீண்ட விவாதங்களை மேற்கொண்டேன். நமது மருந்தியல் துறையைச் சார்ந்தவர்களாகட்டும், தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் ஆகட்டும், ஆக்சிஜென் தயாரிப்பில் ஈடுபட்டிருப்போராகட்டும், மருத்துவத் துறை வல்லுநர்கள் என அனைவரும் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு அளித்தார்கள். இந்த வேளையில், நாம் இந்தப் போராட்டத்தில் வெல்வதற்கு, வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். மாநில அரசுகளின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல, இந்திய அரசு முழுச் சக்தியோடு முனைந்திருக்கிறது. மாநில அரசுகளும் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழுவீச்சில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நண்பர்களே, கொரோனாவுக்கு எதிராக இந்த வேளையிலே மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு, தேசத்தின் மருத்துவர்களும், சுகாதாரப்பணியாளர்களும் இப்பொழுது போராடி வருகின்றார்கள். கடந்த ஓராண்டுக்காலத்தில், இந்த நோய்த்தொற்று தொடர்பான அனைத்து விதமான அனுபவமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மிகவும் பிரபலமான, மும்பையைச் சேர்ந்த மருத்துவரான சஷாங்க் ஜோஷி அவர்கள் இப்பொழுது நம்மோடு தொடர்பில் இருக்கிறார். டாக்டர் சஷாங்க் அவர்களிடத்திலே கொரோனாவுக்கான சிகிச்சை, மேலும் இதனுடன் தொடர்புடைய ஆய்வு பற்றிய அடிப்படை அனுபவங்கள் இருக்கின்றன, இவர் Indian College of Physicians, இந்திய மருத்துவர்கள் கல்லூரியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். வாருங்கள், நாம் டாக்டர் சஷாங்க் அவர்களோடு பேசுவோம் –
மோதிஜி – வணக்கம் டாக்டர் சஷாங்க் அவர்களே
டாக்டர் சஷாங்க் – வணக்கம் சார்.
மோதிஜி – சில நாட்கள் முன்னால உங்களோட உரையாடக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சுது. உங்களோட கருத்துக்களின் தெளிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. உங்களோட கருத்துக்கள் பத்தி நாட்டுமக்களுக்கும் தெரியணும்னு நான் விரும்பறேன். காதுகள்ல வந்து விழும் செய்திகளை எல்லாம் திரட்டி ஒரு கேள்வியா உங்க முன்னால நான் வைக்க விரும்பறேன். டாக்டர் சஷாங்க், நீங்க எல்லாரும் இரவுபகல் பாராம மக்களோட உயிர்களைக் காக்கற பணியில ஈடுபட்டு வர்றீங்க. முதன்மையா நீங்க இந்த இரண்டாவது அலை குறித்து மக்களுக்குத் தெரிவிக்கணும்னு விரும்புகிறேன். மருத்துவரீதியாக இது எவ்வாறு மாறுபட்டது, என்னவெல்லாம் எச்சரிக்கைகளை நாம் மேற்கொள்ளணும்.
டாக்டர் சஷாங்க் - நன்றிகள் சார், புதியதா வந்திருக்கக்கூடிய இந்த இரண்டாவது அலை, இது மிக விரைவாகப் பரப்புது. முதலாவதா வந்த அலை பரப்பியதை விட இந்த அலை நுண்கிருமிகளை அதிக விரைவாக பரப்புது. ஆனா ஒரு நல்ல விஷயம் என்னென்னா, இதிலிருந்து மீட்சி வீதம் அதிகம், இறப்பு வீதம் குறைவு. இந்த அலைகளுக்கு இடையே, 2-3 வித்தியாசங்கள் இருக்கு, முதலாவதா இது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிலும் கொஞ்சம் காணப்படுது. இதற்கான அறிகுறிகள், முன்ன மாதிரியே மூச்சிரைப்பு, வறட்டு இருமல், காய்ச்சல்னு எல்லாம் பழைய அலையில் வந்தது மாதிரியே இருந்தாலும், கூடவே முகர்வுத் திறனின்மை, சுவைத்திறனின்மையும் ஏற்படுது. மேலும், மக்கள் பீதியடையறாங்க. இதனால பீதியடைய வேண்டிய அவசியமே கிடையாது. 80-90 சதவீதம் பேர்களுக்கு இவற்றில எந்த அறிகுறியுமே தென்படுறதில்லை, mutationன்னு சொல்லப்படும் மாறுபாட்டால பயப்படத் தேவையில்லை. இந்த மாறுபாடு நிகழ்ந்துக்கிட்டே தான் இருக்கும். எப்படி நாம நம்ம உடைகளை மாத்தறோமோ, இதை மாதிரியே இந்த நுண்கிருமியும் தன்னோட நிறத்தை மாத்திக்குது, ஆகையால கண்டிப்பாக இதனால பீதியடையவே தேவையில்லை, இந்த அலையையும் நாம் கடந்துருவோம். அலைகள் வரும் போகும் அப்படீங்கற மாதிரியே இந்த நுண்கிருமியும் வரும் போகும். ஆக, இவை தான் வேறுபட்ட அறிகுறிகள் அப்படீன்னாலும், நாம மருத்துவரீதியா எச்சரிக்கையோடு இருக்கணும். 14 முதல் 21 நாட்கள் வரையிலான இந்த கோவிடுடைய அட்டவணை இருக்கு, இது தொடர்பா மருத்துவர்களோட ஆலோசனைப்படி நடக்கணும்.
மோதிஜி – டாக்டர் சஷாங்க், எனக்கும் கூட உங்களுடைய இந்த ஆய்வு ரொம்ப சுவாரசியமா இருக்கு, எங்கிட்ட பல கடிதங்கள் வந்திருக்கு, சிகிச்சை குறித்தும் பலர் பல ஐயப்பாடுகளை இவற்றில எழுப்பியிருக்காங்க, சில மருந்துகளின் தேவை அதிகம் இருக்குங்கறதால, கோவிடுக்கான சிகிச்சை பற்றியும் நீங்க மக்கள் கிட்ட பகிர்ந்துக்கணும்னு நான் விரும்புறேன்.
டாக்டர் சஷாங்க் – சரி சார். மருத்துவ சிகிச்சையை சிலர் மிகவும் காலதாமதாகவே மேற்கொள்றாங்க, தானாகவே அது குணமாகி விடும்ங்கற நம்பிக்கையில வாழ்றாங்க. மேலும் மொபைலில வரக்கூடிய செய்திகளை நம்புறாங்க. அரசு அளிக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தா, எந்தவிதமான கடினங்களையும் எதிர்கொள்ளத் தேவை இருக்காது. கோவிடைப் பொறுத்த மட்டில மருத்துவரீதியான சிகிச்சை நெறிமுறை இருக்கு, இதில தீவிரத்தின் அடிப்படையிலான மூன்று வகையான நிலைகள் இருக்கு. ஒன்று mild, லேசான கோவிட், moderate, இடைநிலையிலான கோவிட், மூன்றாவதா severe, தீவிரமான கோவிட்னு இருக்கு. இந்த முதல்வகையான லேசான கோவிடைப் பொறுத்தவரை, நாங்க ஆக்சிஜெனைக் கண்காணிக்கிறோம், நாடித்துடிப்பைக் கண்காணிக்கிறோம், காய்ச்சல் விவரங்களைக் கண்காணிக்கிறோம், காய்ச்சல் அதிகரிச்சுதுன்னா, தேவைப்பட்டா பேராசிடமால் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துறோம். இடைநிலையிலான கோவிட் அல்லது தீவிரமான கோவிட் இருக்குமேயானா, மருந்துகள் விஷயத்தில கண்டிப்பா மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். சரியான, விலைமலிவான மருந்துகள் கிடைக்குது. இவற்றில இருக்கும் steroids, இயக்க ஊக்கிகள் உயிரைக் காக்கக் கூடும். Inhalers, மூச்சிழுப்பு மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றைக் கொடுக்கலாம், கூடவே பிராணவாயுவையும் கொடுக்கறது அவசியமாகுது. இதற்கான சின்னச்சின்ன சிகிச்சைகள் இருக்குன்னாலும், பெரும்பாலும் என்ன நடக்குது அப்படீன்னா, ஒரு புதிய பரீட்சார்த்த மருந்தான Remdesivir இருக்கு இல்லையா? இந்த மருந்தால என்ன ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்குதுன்னு சொன்னா, மருத்துவமனையில சிகிச்சை பெறும் கால அளவு 2-3 நாட்கள் குறையுது, மருத்துவரீதியான மீட்புக்கு இது கொஞ்சம் உதவிகரமா இருக்குது. இந்த மருந்துமே கூட எப்போ வேலை செய்யுதுன்னா, முதல்ல இது 9-10 நாட்களில் கொடுக்கப்பட்டிச்சு, இப்போ ஐந்து நாட்களிலேயே கொடுக்க வேண்டி இருக்குன்னும் போது, இந்த ரெம்டெசிவிரைத் தேடி மக்கள் அலையறாங்க, இந்த ஓட்டம் அவசியமே இல்லாத ஒண்ணு. இந்த மருந்து புரியும் வேலை கொஞ்சம் தான். யாருக்கு ஆக்சிஜென் அளிக்கப்படுதோ, யார் மருத்துவமனைகள்ல சேர்க்கப்பட்டிருக்காங்களோ, அவங்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இதை எடுத்துக்கணும். இதை எல்லாரும் புரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். நாம மூச்சுப்பயிற்சி செய்யலாம், நம்ம உடலின் நுரையீரலை இது சற்று விரிவடையச் செய்யும், நம்ம ரத்தத்தை நீர்க்கச் செய்யும் ஊசியான ஹெபாரின் மாதிரியான சின்னச்சின்ன மருந்துகளை செலுத்தினா, 98 சதவீதம் பேர்கள் குணமாகிடுறாங்க, ஆகையால மனத்தெம்போடு இருப்பது ரொம்ப அவசியம். சிகிச்சை நெறிமுறையை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்றது ரொம்பவும் அவசியம். மேலும், விலை அதிகமுள்ள மருந்துகள் பின்னால ஓடுவது அவசியமே இல்லை சார். நம்மிடத்திலே நல்ல சிகிச்சைகள் இருக்கு, பிராணவாயு இருக்கு, வெண்டிலேட்டர்கள் வசதி அப்படீன்னு எல்லாமே இருக்கு சார். ஒருவேளை இந்த மருந்துகள் கிடைச்சாலும் கூட, அந்த மருந்துகளுக்கான தேவை இருக்கறவங்களுக்கு மட்டுமே அவை அளிக்கப்படணும். இவை தொடர்பா ஒரு பிரமை பரவியிருக்கிறது அப்படீங்கறது ஒரு விஷயம்; தவிர, இந்த இடத்திலே நான் ஏன் தெளிவாக்கம் அளிக்க விரும்பறேன்னா, நம்மகிட்ட உலகிலேயே மிகச் சிறப்பான சிகிச்சை இருக்கு. பாரதத்தில தான் மிகச் சிறப்பான மீட்சி வீதம் இருக்கு அப்படீங்கறதை நீங்களே கவனிச்சிருக்கலாம். நீங்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மாதிரியான நாடுகளோடு, நம்ம நாட்டில இருக்கும் சிகிச்சை நெறிமுறைகளை ஒப்பிட்டுப் பார்த்தீங்கன்னா, நம்ம நாட்டின் சிகிச்சை நெறிமுறையால நோயாளிகள் அதிக அளவில மீட்சி அடையறாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம் சார்.
மோதிஜி – டாக்டர் சஷாங்க், உங்களுக்கு பலப்பல நன்றிகள். டாக்டர் சஷாங்க் அவர்கள் நல்ல பல முக்கியமான தகவல்களை நமக்களித்தார், இவை நமக்கு உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே, நான் உங்கள் அனைவரிடத்திலும் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், உங்களுக்குத் தகவல்கள் ஏதேனும் தேவை என்றால், ஐயப்பாடு ஏதேனும் இருக்குமானால், சரியான இடத்திலிருந்து தகவல்களைப் பெறவும். உங்களுடைய குடும்ப மருத்துவராகட்டும், அருகில் இருக்கும் மருத்துவர்களாகட்டும், அவர்களை தொலைபேசியில் அழைத்து, ஆலோசனை பெறுங்கள். நமது பெரும்பாலான மருத்துவர்களே கூட இந்தப் பொறுப்பைத் தாங்களே ஏற்கிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன். பல மருத்துவர்கள் சமூக ஊடகம் வாயிலாக மக்களுக்குத் தகவல்களை அளிக்கிறார்கள். தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸப் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். பல மருத்துவமனைகளின் இணையதளங்களில் தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன, அங்கே நீங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். இது மிகவும் பாராட்டத்தக்கது.
ஸ்ரீநகரைச் சேர்ந்த டாக்டர் நாவீத் நாஸர் ஷா அவர்கள் இப்பொழுது தொடர்பில் இருக்கிறார். டாக்டர் நாவீத் அவர்கள் ஸ்ரீநகரின் ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார். நாவீத் அவர்கள் தனது பராமரிப்பில் இருந்த பல கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தி இருக்கிறார், ரமலான் புனிதமான மாதத்திலும் கூட, டாக்டர் நாவீத் அவர்கள் தனது பணியை சீரிய முறையில் நிறைவேற்றி வருகிறார். இப்பொழுது நம்மோடு உரையாட அவர் நேரம் ஒதுக்கி இருக்கிறார். அவரோடு உரையாடுவோம் வாருங்கள்.
மோதிஜி – நாவீத் அவர்களே வணக்கம். இந்த கடினமான காலத்தில பேரச்ச மேலாண்மை குறித்த பல வினாக்களை மனதின் குரலின் நம்ம நேயர்கள் எழுப்பியிருக்காங்க. இதை எப்படி சமாளிப்பதுங்கறது குறித்து உங்க அனுபவம் என்ன?
டாக்டர் நாவீத் – வணக்கம் சார். கொரோனா தொடங்கிய போது தான் கஷ்மீரில இதற்கான முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. கோவிட் மருத்துவமனைங்கற வகையில எங்க நகர மருத்துவமனை இது. இது மருத்துவக் கல்லூரிக்குட்பட்டது; அப்ப எல்லா இடங்கள்லயும் பீதி பரவியிருந்திச்சு. ஒருத்தருக்கு கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டுப் போச்சுன்னா, அது மரண தண்டனையாவே கருதப்பட்டிச்சு. இந்த நிலையில தான் எங்களோட மருத்துவமனையில மருத்துவர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றி வந்தாங்க. இவங்க கிட்டயும் ஒரு பேரச்சம் இருந்திச்சு, அதாவது இந்த நோயாளிகளை நாம எப்படி எதிர்கொள்வது, தங்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுமோங்கற பயம் இருந்திச்சு. ஆனா காலம் செல்லச்செல்ல, நாம முழுமையான வகையில பாதுகாப்புக் கவசங்களை அணிஞ்சு, எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்னு சொன்னா, நாமும் பாதுகாப்பாக இருக்கலாம், மற்ற பணியாளர்களையும் பாதுகாப்பாக வச்சிருக்கலாங்கறதை உணர்ந்தாங்க. நோயாளிகள் நோய்வாய்ப்பட்டிருக்கறதுக்கான அறிகுறி இல்லாதவர்களாவும் இருந்தாங்க அப்படீங்கறதை நாங்க சில காலத்திலே உணர்ந்துக்கிட்டோம். கிட்டத்தட்ட 90 முதல் 95 சதவீதத்திற்கும் அதிகமான நபர்களை மருந்து உட்கொள்ளக் கொடுக்காமலேயே குணமாக்க முடியும் அப்படீங்கறதைக் கண்டுக்கிட்டோம். அதே போல, நாட்கள் கடந்து போன போது, மக்களிடத்திலே கொரோனா பத்தின பீதியும் குறையத் தொடங்கிச்சு. இன்றைய நிலையில வந்திருக்கற இந்த இரண்டாவது அலையின் போது கூட, நாம தேவையில்லாம பீதியடைய வேண்டிய அவசியமில்லை. இப்பவும் கூட, பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையா கடைப்பிடிச்சோம்னா, எடுத்துக்காட்டா முகக்கவசம் அணியறது, சோப்புக்களைப் பயன்படுத்தறது, மேலும் ஒருவருக்கொருவர் இடையிலான இடைவெளியைப் பராமரிக்கறது, அல்லது கூட்டங்களைத் தவிர்ப்பது மாதிரியானதைப் பின்பற்றினோம்னா, நம்ம அன்றாடப் பணிகளை நம்மால சிறப்பாச் செய்ய முடியும், இந்தப் பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பையும் பெற முடியும்.
மோதிஜி – டாக்டர் நாவீத் அவர்களே, தடுப்பூசி தொடர்பா மக்களிடத்தில பலவிதமான வினாக்கள் இருக்கு. அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது மூலமா எந்த அளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எப்படி கவலையில்லாம இருக்க முடியும்? நேயர்களுக்குப் பலனளிக்கும் வகையில நீங்க தகவல்களை அளிச்சீங்கன்னா நல்லா இருக்கும்.
டாக்டர் நாவீத் – கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து இன்னைக்கு வரைக்கும், நம்ம கிட்ட கோவிட் 19க்கான எந்த ஒரு திறன் வாய்ந்த சிகிச்சையும் இல்லைங்கற போது, இந்த நோயோடு போராட இரண்டே இரண்டு விஷயங்களை நம்மால் செய்ய முடியும். ஒன்று protective measure, தற்காப்பு நடவடிக்கைகள். நாங்க முன்னாலிருந்தே என்ன சொல்லிட்டு வர்றோம்னா, நம்ம கிட்ட திறன் வாய்ந்த தடுப்பூசி இருந்தா, அதால நம்மை இந்தப் பெருந்தொற்றிலிருந்து விடுவிக்க முடியும் அப்படீன்னு. இப்ப நம்ம தேசத்திலேயே தயார் செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் இருக்கு – கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட். நிறுவனங்கள் செஞ்சிருக்கற பரிசோதனைகள் வாயிலா, இவற்றோட திறன் 60 சதவீதத்திற்கும் அதிகம் அப்படீங்கறதை பார்த்திருக்கோம். ஜம்மு கஷ்மீரை எடுத்துக்கிட்டா, இங்கே இதுவரை 15 முதல் 16 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட்டாச்சு. சமூக ஊடகத்தில இவை பற்றி நிலவும் தவறான புரிதல்கள்-புனைவுகள், இவற்றால இப்படிப்பட்ட பக்கவிளைவுகள் இருக்குன்னு எல்லாம் பரப்பட்டாலும், இதுவரை இங்கே தடுப்பூசி போட்டுக்கிட்டவங்க யார் கிட்டயும் எந்த விதமான ஒரு பக்கவிளைவுகளும் இதுவரை காணப்படலை. பொதுவா எந்த ஒரு தடுப்பூசி எடுத்துக்கும் போதும் ஏற்படக்கூடிய காய்ச்சல், உடல்வலி அல்லது ஊசி போடப்பட்ட இடத்திலே வலி மாதிரியான பக்கவிளைவுகளையே நோயாளிகள் கிட்ட நம்மால காண முடியுதே தவிர, பெரிய தீவிரமான எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படலை. இரண்டாவதா, மக்களிடத்தில மேலும் ஒரு ஐயப்பாடு என்னன்னா, தடுப்பூசி போட்டுக்கிட்ட பிறகு, நோய்த்தொற்று ஏற்பட்டா என்ன செய்யறது அப்படீங்கறது தான். இதற்கும் நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை அளிச்சிருக்காங்க; அதாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, நோய்த்தொற்று ஏற்படலாம், அவங்க பாசிடிவாகவும் ஆகலாம், ஆனா அப்படி ஒருவேளை நோய் உண்டானா, உயிரைக் குடிப்பதா அது இருக்காது அப்படீங்கறதால, தடுப்பூசி பத்தின இந்தத் தவறான புரிதலையும் நீங்க உங்க மனசிலிருந்து விலக்கிடுங்க. ஏன்னா, மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிடும்ங்கற போது, நாங்க மக்களிடம் விடுக்கும் விண்ணப்பம், நீங்களே முன்வந்து தடுப்பூசி போட்டுக்குங்க, கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து உங்களையும் பாதுகாத்துக்குங்க, நம்ம சமுதாயத்துக்கும் பாதுகாப்பளிக்க உதவுங்க அப்படீங்கறது தான்.
மோதிஜி – டாக்டர் நாவீத் அவர்களே உங்களுக்குப் பலப்பல நன்றிகள், ரமலானின் இந்த புனித மாதத்தில உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
டாக்டர் நாவீத் – மிக்க நன்றிகள்.
நண்பர்களே, கொரோனாவின் இந்த சங்கடமான காலத்தில் தடுப்பூசி பற்றிய முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் புரிந்து வருகிறது என்பதால், தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாரத அரசு தரப்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக அனுப்பப் பட்டிருக்கின்றன என்பதும், இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதைப் போட்டுக் கொள்ளலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இனி, வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க இருக்கின்றது. இப்பொழுது தேசத்தின் கார்ப்பரேட் துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களை, தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இயக்கத்தில் பங்கெடுக்கச் செய்யும் பங்களிப்பை ஆற்றுவார்கள். பாரத அரசின் தரப்பிலிருந்து தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இலவசத் தடுப்பூசி வழங்கும் திட்டம், இனிவரும் காலத்திலும் தொடரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பாரத அரசின் இந்த இலவசத் தடுப்பூசித் திட்டத்தின் ஆதாயங்களை அதிகப்படியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று, நான் மாநில அரசுகளிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் பொழுது, நாம் நம்மையும் சரி, நமது குடும்பத்தாரையும் சரி, பராமரிக்க வேண்டும், மனரீதியாக இது எத்தனை சிரமமான ஒன்று என்பதை நாம் நன்கறிவோம். ஆனால் நமது மருத்துவமனைகளின் செவிலியர்களோ இந்தப் பணியை எத்தனை நோயாளிகளுக்குச் செய்ய வேண்டியிருக்கிறது!! இந்தச் சேவையுணர்வு தான் நமது சமூகத்தின் மிகப்பெரிய பலம். செவிலியர்கள் வாயிலாகப் புரியப்படும் சேவையும், கடும் உழைப்பும் பற்றி, ஒரு செவிலியால் மட்டுமே சிறப்பாகக் கூற முடியும். ஆகையால், ராய்பூரின் டாக்டர் பி.ஆர். அம்பேட்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேவையாற்றி வரும் சகோதரி பாவனா த்ருவ் அவர்களை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கெடுக்க அழைத்திருக்கிறோம். அவர் பல கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொண்டு வருகிறார். அவரோடு பேசலாம் வாருங்கள் –
மோதிஜி – வணக்கம் பாவ்னா அவர்களே!
பாவ்னா – மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம்.
மோதிஜி – உங்க குடும்பத்தில பல கடமைகள் எல்லாம் இருக்கும் போது, ஒரே நேரத்தில பல வேலைகளை செஞ்சுக்கிட்டே எப்படி உங்களால கொரோனாவால பீடிக்கப்பட்ட நோயாளிகளையும் பராமரிக்க முடியுதுங்கறதை நீங்க மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிக்கறேன். ஏன்னா சிஸ்டர்கள், அதாவது செவிலியர்கள், இவங்க தான் நோயாளியோடு நெருக்கமாக இருக்கறவங்க, நீண்ட நேரம் அவங்களோட கழிக்கறவங்க அப்படீங்கற போது, ஒவ்வொரு விஷயத்தையும் அதிக நுணுக்கமாப் புரிஞ்சுக்கறவங்க இல்லையா? நீங்க சொல்லுங்க.
பாவ்னா – ஆமாம் சார், கோவிட் தொடர்பா 2 மாசங்களுக்கு ஒரு தடவை எங்களுக்கு முறை வரும் சார். நாங்க 14 நாட்கள் வரை பணியாற்றுகிறோம், இதன் பிறகு எங்களுக்கு ஓய்வு அளிக்கப்படுது. பிறகு 2 மாதங்கள் கழிச்சு எங்களுக்கு இந்த கோவிட் பொறுப்புகள் மறுபடி அளிக்கப்படுது சார். முதன்முதலா எனக்கு கோவிட் பணி விதிக்கப்பட்ட போது, முதன்மையா நான் என்னோட குடும்ப உறுப்பினர்களிடத்தில இதைப் பத்தி பகிர்ந்துக்கிட்டேன். இது மே மாதத்தில நடந்திச்சு. நான் இதைப் பகிர்ந்துக்கிட்ட உடனேயே எல்லாரும் பயந்து போயிட்டாங்க, பதனமாக நடந்துக்க, கவனமா இரு அப்படீன்னாங்க, அது உணர்ச்சிபூர்வமான ஒரு கணம் சார். இடையில என் மகள், அம்மா நீ கோவிட் பணிக்குப் போறியான்னு கேட்ட போது, நான் உணர்வு ரீதியாகக் கலங்கிப் போயிட்டேன் சார். கோவிட் நோயாளிகள் கிட்ட நான் போனப்ப, ஒரு பொறுப்பை வீட்டிலேயே விட்டுட்டு வந்தேன்; ஆனா இந்த கோவிட் நோயாளிகளை நான் சந்திச்சப்ப, வீட்டில இருந்தவர்களை விட அதிகமா பயந்து போயிருந்தாங்க. கோவிட்ங்கற பெயரைக் கேட்டாலே நோயாளிகள் எந்த அளவுக்கு நடுங்கிப் போயிருந்தாங்கன்னா, தங்களுக்கு என்ன ஆயிட்டு இருக்கு, என்ன ஆகப் போகுதுங்கற நிலையே தெரியாம இருந்தாங்க. நாங்க அவங்களோட அச்சத்தை நிவர்த்தி செய்யும் வகையில, மிகச் சிறப்பான ஆரோக்கியமான சூழலை அமைச்சுக் கொடுத்தோம். எங்களுக்கு முதல்ல கோவிட் பணி அளிக்கப்பட்ட போது, முதன்மையா முழு உடல் பாதுகாப்புக் கவச உடைய அணிஞ்சுக்கச் சொன்னாங்க, இதை அணிஞ்சுக்கிட்டு பணியாற்றுவது ரொம்பவும் சிரமமான காரியம் சார். நான் 2 மாதம் பணியாற்றின ஒவ்வொரு இடத்திலயும், 14-14 நாட்கள் வார்டிலயும், தீவிர சிகிச்சைப் பிரிவிலயும், தனிமைப்படுத்தல்லயும் கழிச்சேன்.
மோதிஜி – அதாவது ஒட்டுமொத்தமா நீங்க ஓராண்டுக் காலமா இதே பணியில தான் ஈடுபட்டு வந்திருக்கீங்க.
பாவ்னா – ஆமாம் சார், அங்க போகறதுக்கு முன்பா என்னோடு பணியாற்ற இருக்கறவங்க யார் அப்படீங்கறதே எனக்குத் தெரியாது. நாங்க ஒரு குழு உறுப்பினர்ங்கற முறையில பணியாற்றினோம் சார், நோயாளிகள் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துக்கிட்டாங்க, எங்களால நோயாளிகள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அவங்க மனசுல நோய் தொடர்பான அச்சத்தை அகற்ற முடிஞ்சுது. இவங்கள்ல சிலர் கோவிட் அப்படீங்கற பெயரைக் கேட்டாலே குலை நடுக்கம் அடைஞ்சாங்க. அவங்க கிட்ட எல்லா அறிகுறிகளும் தென்பட்டும் கூட, அவங்க அச்சம் காரணமா பரிசோதனைகளை மேற்கொள்ளலை. அவங்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்திச்சு. பரிசோதனைகளை மேற்கொள்ளாதது காரணமா தீவிரத்தன்மை அதிகரிச்சு, அந்த நிலையில எங்களை அணுகுவாங்க. ஏற்கெனவே பீடிக்கப்பட்டிருக்கும் நுரையீரல்கள் காரணமா, அவங்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போக வேண்டி இருந்திச்சு; அப்ப, கூடவே அவங்களோட குடும்பத்தார் எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பாங்க. இப்படிப்பட்ட ஒன்றிரண்டு சம்பவங்களை நான் பார்த்திருக்கேன், எல்லா வயசுக்காரங்களோடயும் நான் பணியாற்றியிருக்கேன். சின்னஞ்சிறு குழந்தைகள், பெண்கள், ஆண்கள், மூத்தவர்கள்ன்னு பலதரப்பட்டவங்க இருந்தாங்க. அவங்க எல்லாரோடயும் பேசினப்ப, தாங்கள் அச்சம் காரணமாவே முன்பேயே வராம இருந்ததா எல்லாருமே சொன்னாங்க. அச்சப்பட்டு எதுவும் ஆகப் போறதில்லை, நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா, எல்லா நெறிமுறைகளையும் கடைப்பிடிச்சா, இதை நம்மால கடந்து போயிர முடியும்ன்னு அப்ப நாங்க அவங்களுக்குப் புரிய வைப்போம்.
மோதிஜி – பாவ்னா அவர்களே, உங்களோட பேசினது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு, பல நல்ல தகவல்களை நீங்க பகிர்ந்துக்கிட்டீங்க. உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கிட்டிருக்கீங்க, கண்டிப்பா நாட்டுமக்களுக்கு இதிலிருந்து ஒரு நேர்மறை செய்தி வெளிப்படும். உங்களுக்குப் பலப்பல நன்றிகள் பாவ்னா அவர்களே.
பாவ்னா – தேங்க்யூ வெரி மச் சார்…. ரொம்ப நன்றி. ஜெய் ஹிந்த் சார்.
மோதிஜி – ஜெய் ஹிந்த்.
பாவ்னா அவர்களே, செவிலியர்களான உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் மிகச் சிறப்பான வகையிலே தங்கள் கடமைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இது நம்மனைவருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. நீங்கள் உங்கள் உடல்நலத்தையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாரின் நலன் மீதும் அக்கறை செலுத்துங்கள்.
நண்பர்களே, நம்மோடு தொடர்பிலே இப்போது பெங்களூரூவைச் சேர்ந்த சிஸ்டர் சுரேகா அவர்கள் இணைந்திருக்கிறார். சுரேகா அவர்கள் கே. சி. பொது மருத்துவமனையில் மூத்த செவிலியர் அதிகாரியாக இருக்கிறார். அவரது அனுபவத்தைக் கேட்போம் வாருங்கள் –
மோதிஜி – வணக்கம் சுரேகா அவர்களே.
சுரேகா – நம்ம நாட்டின் பிரதமரோடு பேசுவது எனக்கு பெருமிதமாவும் கௌரவமாவும் இருக்கு.
மோதிஜி – சுரேகா அவர்களே, நீங்களும் உங்களுடைய சக செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் மிகச் சிறப்பான சேவையை ஆற்றிக்கிட்டு இருக்கீங்க. இந்தியா உங்க எல்லாருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கு. கோவிட் 19க்கு எதிரான இந்தப் போராட்டத்தில, குடிமக்களுக்கு நீங்க அளிக்கக் கூடிய செய்தி என்ன?
சுரேகா – ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகள் அப்படீங்கற வகையில, தயவு செஞ்சு உங்க அண்டை வீட்டார் கிட்ட பணிவோட இருங்க, முன்னமேயே பரிசோதனை மற்றும் முறையான கண்காணிப்பு மூலமா, இறப்பு வீதத்தைக் குறைக்க எங்களுக்கு உதவுங்க. மேலும் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தயவு செஞ்சு உங்களைத் தனிமைப்படுத்திக்குங்க, அருகில இருக்கற மருத்துவர்களை அணுகி, எத்தனை விரைவா முடியுமோ அத்தனை விரைவா சிகிச்சை மேற்கொள்ளுங்க. சமுதாயம் இந்த நோய் பத்தி தெரிஞ்சுக்கணும், நேர்மறை எண்ணங்களோட இருக்கணும், பீதியடையக் கூடாது, மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கக் கூடாது. இது நோயாளியோட நிலையை மேலும் மோசமாக்கும். நம்மகிட்ட தடுப்பூசி ஏற்படுத்தப்பட்டிருப்பது பெருமையா இருக்கு, அரசுக்கு எங்களோட நன்றிகள். நான் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கிட்டேன், இந்தியக் குடிமக்களுக்கு நான் அனுபவரீதியா சொல்லணும்னா, எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பை உடனடியா அளிக்காது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த சில காலம் பிடிக்கும். தயவு செஞ்சு தடுப்பூசி போட்டுக்க எந்த பயமும் பட வேண்டாம். தயவு செஞ்சு போட்டுக்குங்க, பக்கவிளைவுகள் மிகக் குறைவாத் தான் இருக்கும். வீட்டிலேயே இருங்க, ஆரோக்கியமா இருங்க, நோய்வாய்ப்பட்டவர்களோட தொடர்புல வராதீங்க, உங்க மூக்கு, கண்கள், வாய் இவற்றைத் தேவையில்லாம தொடுவதை தவிர்த்திடுங்க. சமூக இடைவெளியைக் கடைபிடியுங்க, முறையான வகையில முகக்கவசத்தை அணியுங்க, உங்க கைகளை சீரா கழுவிகிட்டு வாங்க, வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய வீட்டு மருத்துவத்தை கடைபிடியுங்க. தயவு செய்து ஆயுர்வேத கஷாயத்தைக் குடியுங்க, நீராவி பிடியுங்க, தினமும் தொண்டையில நீரைத் தேக்கிக் கொப்பளியுங்க, சுவாஸப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்க. நிறைவா ஒரு முக்கியமான விஷயம், முன்னணிப் பணியாளர்கள், வல்லுநர்கள் கிட்ட பரிவோட நடந்துக்குங்க. எங்களுக்கு உங்களோட ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. நாம இணைஞ்சு போராடுவோம். இந்தப் பெருந்தொற்றை வெற்றி கொள்வோம். இது தான் மக்களுக்கு நான் அளிக்க விரும்பும் செய்தி சார்.
மோதிஜி – தேங்க்யூ சுரேகா அவர்களே.
சுரேகா – தேங்க்யூ சார்.
சுரேகா அவர்களே, உண்மையிலேயே அதிக கடினமான காலகட்டத்தில நீங்க பணியாற்றிக்கிட்டு வர்றீங்க. நீங்க உங்களை கவனிச்சுக்குங்க. உங்க குடும்பத்தாருக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
பாவ்னா அவர்களும் சுரேகா அவர்களும் கூறியதைப் போல, கொரோனாவோடு போராட நேர்மறை உணர்வு மிகவும் அவசியமானது, நாட்டுமக்கள் இதை மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடத்தில் நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, மருத்துவர்கள், செவிலியர்களோடு, இந்த நேரத்தில் பரிசோதனைக்கூட தொழில்நுட்பாளர்களும், மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்களும் போன்ற முன்னணிப் பணியாளர்களும், இறைவனைப் போன்றே பணிபுரிந்து வருகின்றார்கள். ஒரு மருத்துவ அவசர ஊர்தி, ஒரு நோயாளியைச் சென்றடையும் போது, அப்போது ஊர்தியின் ஓட்டுனர் ஒரு தேவதூதனாகவே அவர்களுக்குக் காட்சியளிப்பார். இவர்கள் அனைவரின் சேவைகள் பற்றியும், இவர்களின் அனுபவங்கள் பற்றியும் தேசம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்பொழுது தொடர்பிலே இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் இருக்கிறார், இவர் மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநரான ப்ரேம் வர்மா அவர்கள். பெயரிலேயே இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ப்ரேம் வர்மா அவர்கள் தனது பணியை, தனது கடமையை, மிக்க நேசத்தோடும், ஈடுபாட்டோடும் செய்து வருகிறார். அவரோடு உரையாடுவோம் வாருங்கள்!
மோதிஜி – வணக்கம் ப்ரேம் அவர்களே.
ப்ரேம் – வணக்கம் சார்
மோதிஜி – சகோதரனே! ப்ரேம்.
ப்ரேம் – சொல்லுங்க சார்.
மோதிஜி – நீங்க உங்க பணி பற்றி, சற்று விரிவாகச் சொல்லுங்க. உங்களுடைய அனுபவம் என்னன்னு சொல்லுங்க.
ப்ரேம் – நான் CATS AMBULANCEல ஓட்டுநரா வேலை பார்க்கறேன், கட்டுப்பாட்டு அறையிலிருந்து எங்க டேபுக்கு ஒரு அழைப்பு வரும். 102லிருந்து அழைப்பு வந்தவுடனேயே நாங்க நோயாளி இருக்கற இடம் நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சிருவோம். இரண்டு ஆண்டுகளா இந்த வேலையை நாங்க தொடர்ந்து செஞ்சிட்டு வர்றோம். நாங்க எங்களோட கிட்டை அணிஞ்சிக்குவோம், கையுறைகள், முகக்கவசம் எல்லாம் போட்டுக்கிட்டு, நோயாளி எந்த மருத்துவமனைக்குப் போக விரும்பறாங்களோ, அங்க எத்தனை விரைவா கொண்டு சேர்க்கணுமோ, கொண்டு சேர்த்துடுவோம்.
மோதிஜி – நீங்க 2 தவணை தடுப்பூசி போட்டுக்கிட்டீங்க இல்லையா?
ப்ரேம் – கண்டிப்பா சார்.
மோதிஜி – அப்ப மத்தவங்களும் தடுப்பூசி போட்டுக்கறது தொடர்பா நீங்க அளிக்க நினைக்கற செய்தி என்ன?
ப்ரேம் – கண்டிப்பா சார். எல்லாரும் தடுப்பூசித் தவணைகளை எடுத்துக்கணும், இது குடும்பத்துக்கே நன்மை செய்யக்கூடியது. இப்ப எங்கம்மா, இந்த வேலையை விட்டுடுன்னு சொல்றாங்க. அதுக்கு நான் சொன்னேன், அம்மா, நீ சொல்றா மாதிரியே நானும் வேலையை விட்டுட்டு வீட்டில உட்கார்ந்தேன்னா, யாரு நோயாளிகளை கொண்டு சேர்ப்பாங்க? ஏன்னா எல்லாரும் இந்தக் கொரோனா காலத்தில ஓடிக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் வேலையை விட்டுட்டுப் போயிட்டு இருக்காங்க. ஆனாலும் வேலையை விடச் சொல்லி அம்மா சொல்றாங்க. வேலையை விட மாட்டேன்னு, நான் தீர்மானமா சொல்லிட்டேன்.
மோதிஜி – ப்ரேம் அவர்களே, அம்மாவை வருத்தப்பட வைக்காதீங்க. அம்மாவுக்குப் புரிய வையுங்க.
ப்ரேம் – சரிங்க.
மோதிஜி – ஆனா இப்ப நீங்க அம்மா தொடர்பா சொன்னீங்களே, இது மனசை ரொம்பத் தொடும் விஷயம்.
ப்ரேம் – ஆமாங்க.
மோதிஜி – உங்க தாயாருக்கும் என்னோட வணக்கத்தைச் சொல்லுங்க.
ப்ரேம் – சரிங்க.
மோதிஜி – கண்டிப்பா!
ப்ரேம் – கண்டிப்பாங்க.
மோதிஜி – சரி ப்ரேம் அவர்களே, மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்கள் எத்தனை பெரிய ஆபத்தான நிலையில வேலை பார்க்கறீங்க, ஒவ்வொருத்தரோட தாயாரும் என்ன நினைக்கறாங்க? இந்த விஷயங்கள் நேயர்களுக்குப் போய் சேரும் போது,
ப்ரேம் – ஆமாங்க.
மோதிஜி – இது அவங்களோட இதயத்தையும் தொடும்னு நான் உறுதியா நம்பறேன்.
ப்ரேம் – ஆமாங்க.
மோதிஜி – ப்ரேம் அவர்களே, உங்களுக்குப் பலப்பல நன்றிகள். நீங்க ஒருவகையில அன்பெனும் ஊற்றாக எல்லாருக்கும் விளங்கறீங்க.
ப்ரேம் – ரொம்ப நன்றி சார்.
மோதிஜி – நன்றி சகோதரா.
ப்ரேம் – நன்றிங்க.
நண்பர்களே, ப்ரேம் வர்மா அவர்களும், இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர்களும், தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து, மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனவோ, அதில் மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்களின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. ப்ரேம் அவர்களே, உங்களுக்கும், நாடெங்கிலும் உள்ள உங்களுடைய அனைத்து சகாக்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நீங்கள் காலத்தில் சென்று சேருங்கள், உயிர்களைக் காத்து வாருங்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கொரோனாவால் பலர் பீடிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது உண்மை தான் என்றாலும், கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதே அளவு அதிகமானது. குருக்ராமைச் சேர்ந்த ப்ரீதி சதுர்வேதி அவர்களும் தற்போது தான் கொரோனாவிலிருந்து வென்று வந்திருக்கிறார். ப்ரீதி அவர்கள் இப்போது மனதின் குரலில் நம்மோடு இணையவிருக்கிறார். அவருடைய அனுபவங்கள் நமக்கெல்லாம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மோதிஜி – ப்ரீதி அவர்களே வணக்கம்.
ப்ரீதி – வணக்கம் சார். நீங்க எப்படி இருக்கீங்க?
மோதிஜி – நான் நல்லா இருக்கேங்க. முதல்ல கோவிட் 19ஓட வெற்றிகரமா போராடி வெற்றி பெற்றதுக்கு உங்களுக்கு நான் என் பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
ப்ரீதி– Thank you so much sir
மோதிஜி – உங்களோட உடல்நலம் மேலும் விரைவா சிறப்பாகணும்னு நான் விரும்பறேன்.
ப்ரீதி – ரொம்ப நன்றி சார்.
மோதிஜி – ப்ரீதி அவர்களே
ப்ரீதி - சொல்லுங்க சார்.
மோதிஜி – இந்த அலையில நீங்க மட்டும் தான் சிக்கினீங்களா இல்லை உங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டாங்களா?
ப்ரீதி – இல்லை சார், எனக்கு மட்டும் தான் பாதிப்பு இருந்திச்சு.
மோதிஜி – கடவுள் அருளால அவங்க தப்பினாங்களே. சரி, இப்ப நீங்க உங்க துன்பமான நிலை பத்தின அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டீங்கன்னா, ஒருவேளை இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டா, அதை எப்படி எதிர்கொள்ளணும்னு மத்தவங்களுக்கு ஒரு வழிகாட்டுதலா அமையும்.
ப்ரீதி – கண்டிப்பா சார். தொடக்க நிலையில எனக்கு அதிக சோர்வு ஏற்படத் தொடங்கிச்சு, பிறகு என் தொண்டையில கரகரப்பு ஏற்பட ஆரம்பிச்சுது. இதுக்கு அப்புறமா எனக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்கின உடனேயே, நான் பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக்கிட்டேன். ரெண்டாவது நாளே நான் பாசிடிவ்னு சொல்லி ரிபோர்ட் வந்திருச்சு. என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன். ஒரு அறையில தனிமைப்படுத்திக்கிட்டு, மருத்துவர்களோட ஆலோசனைகளைக் கேட்டுக்கிட்டேன். அவங்க மருந்துகளை அளிக்கத் தொடங்கினாங்க.
மோதிஜி – அந்த வகையில உங்க விரைவான நடவடிக்கை காரணமா உங்க குடும்பத்தார் தப்பினாங்க.
ப்ரீதி – ஆமாம் சார். பிறகு எல்லாருக்குமே பரிசோதனை செய்தோம். அவங்க எல்லாருக்கும் இல்லைன்னு வந்திருச்சு. எனக்கு மட்டும் தான் பாசிடிவா இருந்திச்சு. இதுக்கு முன்னாலயே, என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன். எனக்குத் தேவையான எல்லா பொருட்களையும் நான் அறைக்குள்ள வச்சுக்கிட்டு என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். உடனடியா மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக்கறதையும் ஆரம்பிச்சிட்டேன். மருந்துகளோட கூடவே, நான் யோகக்கலை, ஆயுர்வேதம், இதையெல்லாம் ஆரம்பிச்சேன். இது தவிர கஷாயமும் குடிக்க ஆரம்பிச்சேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யணுமோ, அதாவது பகல் உணவு எடுத்துக்கும் போது ஆரோக்கியமான உணவு, புரதச்சத்து நிறைஞ்ச உணவை எடுத்துக்கிட்டேன். நிறைய திரவங்களை எடுத்துக்கிட்டேன், நீராவி பிடிச்சேன், இளஞ்சூட்டு நீரை தொண்டையில இருத்திக் கொப்பளிச்சேன். நாள் முழுக்க தினமும் இந்த விஷயங்களை செய்திட்டு வந்தேன். இந்த நாட்கள்ல ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லணும்னா சார், நான் கொஞ்சமும் பயப்படவே இல்லை அப்படீங்கறது தான். இந்த நேரத்தில மனரீதியா ரொம்ப பலமா இருக்கணும், இப்படி இருக்க எனக்கு யோகக்கலையும், சுவாஸப் பயிற்சியும் ரொம்ப உதவிகரமா இருந்திச்சு, இதைச் செய்யும் போது எனக்கு நல்லா இருந்திச்சு.
மோதிஜி – சரி ப்ரீதி அவர்களே, இப்ப உங்களோட மருத்துவச் செயல்பாடு முழுமையாயிருச்சு, நீங்க சங்கடத்திலிருந்து வெளிவந்தாச்சு.
ப்ரீதி – ஆமாங்க.
மோதிஜி – இப்ப உங்க பரிசோதனையும் நெகடிவாயிருச்சு.
ப்ரீதி – ஆமாம் சார்.
மோதிஜி – சரி உங்க ஆரோக்கியத்துக்கும், உங்களோட பராமரிப்புக்கும் இப்ப என்ன செய்து வர்றீங்க?
ப்ரீதி – சார் முதல் விஷயம், நான் யோகக்கலையை தொடர்ந்து செய்திட்டு வர்றேன்.
மோதிஜி – சரி.
ப்ரீதி – அதே போல கஷாயத்தை இன்னமும் குடிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த நான் நல்ல ஆரோக்கியமான உணவை இப்பவும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.
மோதிஜி - சரி.
ப்ரீதி – என்னை நான் அதிகம் கவனிச்சுக்கிட்டது கிடையாது; ஆனா இப்ப அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன்.
மோதிஜி – நன்றி ப்ரீதி அவர்களே.
ப்ரீதி– Thank you so much sir.
நீங்க அளிச்ச தகவல்கள், பலருக்கு உதவிகரமா இருக்கும்னு நான் நம்பறேன். நீங்க ஆரோக்கியமா இருங்க, உங்க குடும்பத்தார் ஆரோக்கியமா இருக்கட்டும். உங்களுக்கு என் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று நமது மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், முன்னணிப் பணியாளர்கள் இரவுபகல் என்றும் பாராது எப்படி சேவையாற்றி வருகிறார்கள் பார்த்தீர்களா? இவர்களைப் போன்றே சமூகத்தின் பிறரும் இந்த வேளையில் சளைத்தவர்கள் இல்லை. நாடு மீண்டும் ஒருமுறை ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இப்போதெல்லாம் தனிமைப்படுத்தலில் இருக்கும் குடும்பத்தாருக்கு சிலர் மருந்துகளைக் கொண்டு சேர்க்கிறார்கள், சிலர் காய்கறிகள், பால், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை எல்லாம் என்னால் காண முடிகிறது. வேறு சிலர் மருத்துவ அவசர ஊர்தி சேவைகளை இலவசமாக அளிக்கிறார்கள். தேசத்தின் பல்வேறு இடங்களில் இந்த சவால்கள் நிறைந்த சூழலிலும், தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்து மற்றவர்களுக்கு உதவும் வகையில், தங்களால் என்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய முயல்கிறார்கள். இந்த முறை கிராமங்களிலும் கூட புதிய ஒரு விழிப்புணர்வைக் காண முடிகிறது. கோவிட் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, தங்கள் கிராமங்களை கொரோனாவிடமிருந்து பாதுகாத்து வருகிறார்கள். யாரெல்லாம் வெளியிலிருந்து வருகிறார்களோ, அவர்களுக்கென சரியான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். நகரங்களிலும் கூட பல இளைஞர்கள் முன்வந்து தங்கள் பகுதிகளில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, வட்டாரப் பகுதி மக்களோடு இணைந்து முயன்று வருகிறார்கள், அதாவது ஒரு புறம் தேசத்தில், 24 மணிநேர மருத்துவமனைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள் ஆகியவை தொடர்பான பணிகளில் மும்முரம் காட்டப்பட்டு வருகிறது என்றால், மறுபுறத்திலோ, நாட்டுமக்களும் முழு ஈடுபாட்டோடு கொரோனா என்ற சவாலோடு சமர் புரிந்து வருகின்றார்கள். இந்த உணர்வு எத்தகையதொரு சக்தியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது!! இந்த முயல்வுகள் அனைத்தும், சமூகத்திற்குப் புரியப்படும் மிகப் பெரிய சேவையாகும். இவை சமூகத்தின் சக்தியை அதிகரிக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரல் முழுவதிலும் நாம் கொரோனா பெருந்தொற்று பற்றியே உரையாடினோம் ஏனென்றால், இன்று நமது தலையாய முதன்மை, இந்த நோயை வெற்றி கொள்வது மட்டுமே. இன்று பகவான் மஹாவீரரின் பிறந்த தினமாகும். இந்த வேளையிலே, நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். பகவான் மஹாவீரருடைய செய்தி, தவம் மற்றும் சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான உத்வேகத்தை நமக்கு அளிக்கக்கூடியது. மேலும் ரமலான் புனித மாதம் இது. அடுத்து புத்த பூர்ணிமை வரவிருக்கிறது. குரு தேக்பஹாதுர் அவர்களின் 400ஆவது பிறந்த ஆண்டும் ஆகும் இது. ஒரு மகத்துவம் வாய்ந்த போசிஷே பொய்ஷாக் – தாகூரின் பிறந்த நாள் ஆகும். நமது கடமைகளை ஆற்ற இவை அனைத்தும் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. ஒரு குடிமகன் என்ற முறையிலே, நாம் நமது வாழ்க்கையை எத்தனை சந்தோஷமாக ஆற்றுகிறோமோ, சங்கடங்களிலிருந்து விட்டு விடுபட்டு, எதிர்காலப் பாதையில் அத்தனை விரைவாக நாம் முன்னேறிச் செல்வோம். இந்த விருப்பத்தோடு உங்கள் அனைவரிடத்திலும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன் – நாம் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும், முழுமையான எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். மருந்தும் தேவை, எச்சரிக்கையும் தேவை. இந்த மந்திரத்தை என்றும் நாம் மறக்கலாகாது. நாம் ஒன்றாக இணைந்து, இந்த சங்கடத்திலிருந்து விரைவாக வெளிப்படுவோம். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன். வணக்கம்.
-------
(Release ID: 1713952)
Visitor Counter : 709
Read this release in:
Odia
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Kannada
,
Malayalam