சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மே 1 முதல் புதிய தடுப்பு மருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுகிறது

Posted On: 24 APR 2021 3:30PM by PIB Chennai

மே 1 முதல் மூன்றாம் கட்ட மற்றும் புதிய தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதற்கும், அவற்றின் மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான  செயல்திட்டத்தை ஆய்வு செய்வதற்குமான உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டிற்கான தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் மேலாண்மைக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர் எஸ் ஷர்மா ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோவின் தளம் தற்போது சிறப்பாகவும், தொய்வின்றியும் செயல்படுவதாக டாக்டர் ஆர்எஸ் சர்மா தெரிவித்தார். மே 1 முதல் தொடங்க உள்ள புதிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் சவால்களை கையாளும் வகையில் தளத்திற்கு வலுவூட்டப் பட்டுள்ளது. சரியான தரவுகளை சரியான நேரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதிவேற்ற வேண்டிய தேவை குறித்து பேசிய அவர், தவறான தகவல்கள் ஒட்டுமொத்த அமைப்பின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி விடும் என்றார்.

2021 மே 1 முதல் தொடங்க உள்ள மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன:

தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகளின் மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து புதிய தடுப்பு மருந்து மையங்கள் குறித்த தகவல்களை துரிதமாக பதிவேற்ற வேண்டும்.

இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியோடு தொடர்புக்கொண்டு விண்ணப்பங்கள், கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, ஒப்புதல்கள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, அவற்றின் இருப்பு மற்றும் விலைகள் குறித்து கோவின் தளத்தில் தெரிவித்துள்ள மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும்.

தங்களுடைய நபர்களுக்கு தடுப்புமருந்து வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

18 முதல் 45 வயது வரை உடையவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே தடுப்புமருந்துக்காக பதிவு செய்துக் கொள்ள முடியும் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், மருத்துவமனை உள்கட்டமைப்பை வலுப்படுத்துமாறும், ஆக்சிஜன்  வசதியுடன் கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகம் ஆகியவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1713762

-------


(Release ID: 1713796) Visitor Counter : 214