அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஜென்னோவா பயோ பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனத்தின் புதுமையான கொவிட்-19 தடுப்பு மருந்தின் பரிசோதனைக்கு உயிரி தொழில்நுட்பத் துறை ஒப்புதல்

Posted On: 13 APR 2021 10:56AM by PIB Chennai

இந்தியாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கத் திட்டமான மிஷன் கொவிட் சுரக்ஷா இயக்கத்தின் கீழ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு செயல்பாடுகளுக்கு இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை ஆதரவளித்து வருகிறது.

பூனாவைச் சேர்ந்த ஜென்னோவா பயோ பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனத்தின் புதுமையான, இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கப்படும் எம் ஆர் என் ஏ (mRNA) அடிப்படையிலான தடுப்பு மருந்தான எச்ஜிசிஓ19-ன் (HGCO19) மருத்துவ ஆய்வுகளுக்கு கூடுதல் நிதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

மிஷன் கொவிட் சுரக்ஷா இயக்கத்தின் கீழ் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்குமாறு வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பல்வேறு சுற்றுகளில் விரிவாக ஆராய்ந்த பின்னர் இந்த நிதி அளிக்கப்படுகிறது.

ஜென்னோவா பயோ பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனத்தின் எம் ஆர் என் ஏ அடிப்படையிலான அடுத்த தலைமுறை தடுப்பு மருந்து உற்பத்தி தளத்தை நிறுவுவதற்கு, தொடக்கத்தில் இருந்தே உயிரி தொழில்நுட்பத் துறை ஆதரவளித்து வருகிறது. எம் ஆர் என் ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது.

உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறுகையில், "கொவிட் தொற்றின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு தடுப்பு மருந்து உருவாக்கத் திட்டங்களுக்கு உயிரி தொழில்நுட்பத் துறை ஆதரவளித்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, புதிய தொழில்நுட்பமான எம் ஆர் என் ஏ-வின் செயல்திறனில் நம்பிக்கை கொண்டு ஜென்னோவாவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. எம் ஆர் என் ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்து, பரிசோதனை கட்டத்திற்கு செல்வது மிகவும் பெருமை அளிக்கிறது," என்று கூறினார்.

ஜென்னோவா பயோ பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சஞ்சய் சிங் கூறுகையில், "செயல்திறன்மிக்க தீர்வுகளை உருவாக்குவதில் எம் ஆர் என் ஏ அடிப்படையிலான உயர் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711304

*****************



(Release ID: 1711446) Visitor Counter : 259