சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஸ்புட்நிக்-வி தடுப்பூசியை அவசரகால சூழ்நிலையில் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த தேசிய ஒழுங்குமுறை அமைப்பாளர் அனுமதி
Posted On:
13 APR 2021 11:56AM by PIB Chennai
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக, முழுமையான அணுகுமுறையுடன் கட்டுப்பாடு, கண்காணிப்பு, பரிசோதனை, கொவிட் தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கை 2021 ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. அவசரகால பயன்பாட்டுக்காக இரண்டு தடுப்பூசிகளுக்கு தேசிய ஒழுங்குமுறையாளரான இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியால் (DCGI) அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவைகள் இந்திய சீரம் மையம் தயாரிக்கும் ‘‘கோவிஷீல்டு’’ மற்றும் பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனம் தயாரிக்கும் ‘‘கோவாக்சின்’’. நாட்டில் பல தடுப்பூசிகள் பரிசோதனை அளவில் உள்ளன.
டாக்டர். ரெட்டி லெபாரட்டரீஸ் நிறுவனம் (டிஆர்எல்) ரஷ்யாவின் கமாலேயா மையம் தயாரித்த ‘ஸ்புட்நிக்-வி’ என அழைக்கப்படும் கேம்-கோவிட்-வேக் ஒருங்கிணைந்த வெக்டர் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்து விற்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. தி கேம்-கோவிட்-வேக் ஒருங்கிணைந்த வெக்டர் தடுப்பூசியை (கூறு 1 மற்றும் கூறு 2) மாஸ்கோவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த ஊசியை உலகம் முழுவதும் 30 நாடுகள் அனுமதித்துள்ளன.
ஸ்புட்நிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க , டிஆர்எல் நிறுவனம் ரஷ்ய தேசிய ஆராய்ச்சி மையத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் லான்செட் என்ற இதழில் வெளியாகியுள்ளன.
இந்த மருந்தின் 2வது மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள டிஆர்எல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் இடைக்கால அறிக்கையை டிஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இந்த மருத்துவ பரிசோதனையின் தரவுகளை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), நிபுணர் குழுவுடன் இணைந்து தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது. இந்த நிபுணர் குழுவில் நுரையீரல், நோய் எதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவம், உள் மருத்துவம் உட்பட பல துறை நிபுணர்கள் உள்ளனர்.
இந்த நிபுணர் குழு, ஸ்புட்நிக்-வி தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் குளித்த வெளிநாட்டு ஆய்வுகளை விரிவாக ஆராய்ந்தது. ரஷ்யாவில் இந்த தடுப்பூசியை அனுமதித்ததற்கான நிலவரங்கள்/கட்டுப்பாடுகளையும் நிபுணர் குழு ஆய்வு செய்தது. டிஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையும், ரஷ்யாவின் 3ம் கட்ட பரிசோதனை ஆய்வுகளும் ஒப்பிடும்படியாக இருந்தது என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
விரிவான ஆய்வுக்குப்பின், அவசர சூழ்நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பயன்பாட்டுக்கு ஸ்புட்நிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனி நபர்களுக்கு கொவிட்-19 தொற்றை தடுக்க, இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம். இந்த தடுப்பூசியை 0.5 மி.லி அளவில் 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக போட வேண்டும். முதல் நாளில் 1வது கூறு தடுப்பூசியை போட வேண்டும். 21ம் நாளில் 2வது கூறு தடுப்பூசியை போட வேண்டும். இந்த தடுப்பூசிகளை -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த தடுப்பூசிகளின் முதல் கூறு மற்றும் 2ம் கூறு ஆகியவற்றை மாற்றி போட முடியாது. தீவிர பரிசீலனைக்குப்பின், நிபுணர் குழுவின் பரிந்துரைகள் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்புட்நிக்-வி தடுப்பூசியை டிஆர்எல் நிறுவனம் இறக்குமதி செய்யும்.
*****************
(Release ID: 1711442)
Visitor Counter : 649