பிரதமர் அலுவலகம்

‘’ தேர்வுக்கு தயாராவோம் 2021’’ நிகழ்ச்சியில் காணொலி மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 07 APR 2021 9:45PM by PIB Chennai

தேர்வுக்கு தயாராவோம் நான்காவது நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். தொண்ணூறு நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பிரதமரின் ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதலுக்கும் பெரும் முக்கியத்துவம் அளித்ததைக் காண முடிந்தது. இந்த ஆண்டும், நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்றதுடன், வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு கலந்துரையாடல் முதன்முதலாக மெய்நிகர் வடிவில் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், மாணவர்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், கொரோனா தடுத்து ஏமாற்றம் அளித்துள்ள போதிலும், தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியை அதனால்  தடுத்து விடமுடியவில்லை என்றார். தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சி வெறும் தேர்வுக்கான விவாதமாக மட்டுமல்லாமல், ஆசுவாசமான சூழலில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பேசுவதற்கான வாய்ப்பாகவும், அதன் மூலம் புதிய நம்பிக்கையைப் பெறுவதற்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.

ஆந்திராவைச் சேர்ந்த மாணவி பல்லவியும், கோலாலம்பூரைச் சேர்ந்த அர்பன் பாண்டேயும், தேர்வு அச்சத்தை எவ்வாறு குறைப்பது என பிரதமரிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த திரு மோடி, தேர்வு தான் எல்லாம், அத்துடன் வாழ்க்கையே முடிந்து விடும் என்பதாக நிலவும் சூழலே இந்த அச்சத்திற்கு காரணம் என்றார். இதுதான் மாணவர்களிடையே அழுத்தத்திற்கு காரணமாகும். வாழ்க்கை என்பது நீண்ட பயணம் என்றும், அதில் இதெல்லாம் ஒரு கட்டம் என்றும் பிரதமர் கூறினார். மாணவர்கள் மீது எந்தவித அழுத்தத்தையும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சகாக்கள் திணிக்கக்கூடாது என பிரதமர் அறிவுரை வழங்கினார். தேர்வு என்பது நம்மைச் சோதிக்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்பதாக கருத வேண்டும் என்றும், அதை வாழ்க்கைப் போராட்டமாக கருதக்கூடாது என்றும் அவர் கூறினார். தங்கள் குழந்தைகளின் பலம் மற்றும் பலவீனத்தை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்.

கடினமான பாடங்கள், பிரிவுகள் குறித்து பேசிய பிரதமர், ஒவ்வொரு பாடத்தையும் ஒரே விதமான ஆற்றல் மற்றும் சமமான அணுகுமுறையுடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார். கடினமான பாடங்களைப் புறக்கணிக்காமல், அதை தெளிந்த மனதுடன் சமாளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். முதலமைச்சராகவும், பிரதமராகவும் தமது பணிகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், சிக்கலான விஷயங்களுக்குத் தீர்வு காண தெளிந்த மனதுடன் உள்ள காலை நேரத்தைத் தாம் தேர்ந்தெடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதற்காக மற்ற விஷயங்கள் முக்கியமானவை அல்ல என்று கூறிய அவர், அனைத்து பாடங்களிலும் வல்லுனர் ஆவது முக்கியமல்ல என்றும், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தவர்கள் உண்டு என்றும் அவர் கூறினார். லதா மங்கேஷ்கரை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவர், ஒரே நோக்கத்துடன் இசைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்றார். கடினமான பாடங்களைக் கண்டு அஞ்சி ஓடக்கூடாது என பிரதமர் வலியுறுத்தினார்.   

ஓய்வு நேரத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக குறிப்பிட்ட பிரதமர், ஓய்வு நேரம் இல்லாவிட்டால், வாழ்க்கை வெறும் எந்திரமயமாகி விடும் என்றார். ஓய்வு நேரம் விலைமதிப்பற்றது எனக்கூறிய அவர், ஓய்வு நேரங்களில் எவற்றை விலக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேரத்தை வீண்டிக்கும் விஷயங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், அவை உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்குப் பதிலாக களைப்பை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்தார்புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ள ஓய்வு நேரம் என்பது சிறந்த வாய்ப்பாகும். நம்மைத் தனித்துவமாக காட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சிறார்கள் மிகவும் புத்திசாலிகள் என்று குறிப்பிட்ட பிரதமர், மூத்தோர்களின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர்கள் அவற்றைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார். எனவே, உலகத்தைப் பற்றிய நமது எண்ணம், நமது நடத்தை ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக நாம் திகழவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளுக்கு அச்சமூட்டும் எதிர்மறை சிந்தனைகள் பற்றி கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்திய பிரதமர், மூத்தவர்களின் நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். நேர்மறையான ஊக்குவிப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நல்லது என்று குறிப்பிட்ட அவர், அதில் முதல் அம்சம் பயிற்சி என்று கூறினார்.

மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய பிரதமர், கவர்ச்சி கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு ஏமாறக்கூடாது என வலியுறுத்தினார். மாறி வரும் உலகில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும், அவற்றைப் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பு மாணவர்கள், வேலை வாய்ப்புகள், மாற்றங்கள் என தங்களைச் சுற்றி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வாழ்க்கை தீர்மானத்தை முடிவு செய்து விட்டோமானால், பாதை தெளிவாகும் என திரு மோடி கூறினார்.

ஆரோக்கியமான உணவு, பாரம்பரிய உணவுகளின் சுவை பற்றிய பயன்களை தெரிந்து கொள்வது அவசியம் என்று பிரதமர் விளக்கினார்.

விஷயங்களை நினைவில் வைத்திருப்பதில் உள்ள சிரமம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், விஷயங்களை ஈடுபாட்டுடன் அணுகி, அதனுடன் இணைந்து பயணிக்க கற்றுக்கொண்டால், நினைவாற்றல் பெருகும் என்றார். மனதின் ஆழத்தில் படியும் அம்சங்கள் ஒருபோதும் மறந்துவிடுவதில்லை என்று அவர் கூறினார்.

ஆசுவாசமான நிம்மதியான மனதுடன் தேர்வுகளை எழுத வேண்டும் என்று மாணவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். தேர்வு மையத்துக்குள் செல்லும் போது, உங்கள் பதற்றங்களை வெளியில் விட்டுச் செல்லுங்கள் என்று அறிவுறுத்திய திரு மோடி, தேர்வுக்கு தயாராகவில்லை என்ற கவலைகளை விட்டுவிட்டு, பதற்றம் ஏதுமின்றி  வினாக்களுக்கு சிறந்த முறையில் விடைகளை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

தொற்று குறித்து குறிப்பிட்ட பிரதமர், கொரோனா தொற்று சமூக இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது குடும்பத்தில் பிணைப்பு உணர்வை வலுப்படுத்தியுள்ளது என்றார். கொரோனாவால் பலவற்றை நாம் இழந்துள்ள போதிலும், பாராட்டு வடிவில் பலவற்றை நாம் பெறுவதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், கொரோனா காலம், குடும்பத்தின் மதிப்பு, குழந்தைகளை உருவாக்குவதில் அதற்குரிய பங்கு ஆகியவற்றை உணர்த்தியிருப்பதாகவும் கூறினார்.

குழந்தைகளின் மீதும், வருங்கால தலைமுறையினர் மீதும் மூத்தவர்கள் காட்டும் ஆர்வம், தலைமுறை இடைவெளியை அகற்றிவிடும் என்று கூறிய பிரதமர், மூத்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே புரிந்துணர்வுக்கும், பேச்சு வார்த்தைக்கும், வெளிப்படையான, திறந்த மனது அவசியம் என்றார். குழந்தைகள் நம்மை திறந்த மனதுடன் அணுகவேண்டும், நாம் அவர்களிடம் மாற்றத்தை உருவாக்க விரும்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் உங்கள்  படிப்பு மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது என்று கூறிய பிரதமர், வாழ்க்கையில் நீங்கள் செய்பவைதான் உங்களது வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிக்கும் என்றார். எனவே, மாணவர்கள், தங்கள் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் அழுத்தத்திலிருந்து வெளி வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் பின்வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கு விடையளித்தார். எம்.பல்லவி, அரசு உயர்நிலைப்பள்ளி, பொதிலி, பிரகாசம் மாவட்டம், ஆந்திரா; அர்பன் பாண்டே- குளோபல் இந்தியா இண்டர்நேசனல் பள்ளி, மலேசியா; புண்யோசுன்யா-விவேகானந்தா கேந்திர வித்யாலயா, பாபும்பரே, அருணாச்சலப் பிரதேசம்வினிதா கார்க் ( ஆசிரியர்) –எஸ்ஆர்டிஏவி பப்ளிக் பள்ளி, தயானந்த் விகார், தில்லி; நீல் ஆனந்த்ஆப்ரகாம் லிங்கன், விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக், கன்னியாகுமரி, தமிழ்நாடு; ஆஷே கேகட்பூரே (பெற்றோர்) –பெங்களூரு, கர்நாடகா; பிரவீண் குமார், பாட்னா, பீகார்; பிரதீபா குப்தா (பெற்றோர்), லூதியானா, பஞ்சாப்டானே, வெளிநாட்டு மாணவர், சாமியா இந்தியன் மாடல் பள்ளி, குவைத்; அஷ்ரப் கான்-முசோரி, உத்தரகாண்ட்அம்ரிதா ஜெயின், மொராதாபாத், .பி; சுனிதா பால் (பெற்றோர்), ராய்ப்பூர், சத்திஷ்கர்; திவ்யங்கா, புஷ்கர், ராஜஸ்தான்; சுகான் சேகல், ஆல்கன் இண்டர்நேசனல் , மயூர் விகார், தில்லி; தார்வி போபத்- குளோபல் மிஷன் இண்டர்நேசனல் பள்ளி, அகமதாபாத்; கிரிஷ்டே சைக்கியா- கேந்திரிய வித்யாலயா, ஐஐடி குவகாத்தி; ஷ்ரேயான் ராய், மத்திய மாடல் பள்ளி, பரக்பூர், கொல்கத்தா.

                                                             ****



(Release ID: 1710359) Visitor Counter : 226