கலாசாரத்துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக  நடைபெற்ற 25-நாள் 'தண்டி யாத்திரை' வண்ணமயமான முறையில் நிறைவுற்றது

Posted On: 06 APR 2021 6:30PM by PIB Chennai

குஜராத் மாநிலத்தின் தண்டியில் உள்ள தேசிய உப்பு சத்தியாகிரக நினைவிடத்தின் அருகே இன்று நடைபெற்ற 25-நாள் 'தண்டி யாத்திரையின் வண்ணமயமான நிறைவு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இந்த யாத்திரை நடைபெற்றது.

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் குஜராத் மாநில அரசு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்விரத், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல், குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி மற்றும் சிக்கிம் முதல்வர் திரு பிரேம் சிங் தமாங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், வரலாற்றை மாற்றியமைத்த திருப்புமுனை என்று தண்டி யாத்திரையை வர்ணித்ததோடு, வலிமையான மற்றும் தற்சார்பு மிக்க இந்தியாவை விடுதலையின் அம்ருத் மகோத்சவம் கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறினார்.

பொது இடங்களில் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகளில் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றும் ஆரோக்கியமான மற்றும் வலிமையான ஜனநாயகத்திற்கு இது மிகவும் அவசியம் என்றும் குடியரசு துணைத் தலைவர்  கூறினார்.

எப்போதும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் பேசிய மகாத்மா காந்தியை பின்பற்றுமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.

"காந்தியடிகளின் அகிம்சை கொள்கை என்பது உடலால் மற்றவர்களை துன்புறுத்துவதை எதிர்ப்பது மட்டுமே அல்ல, வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் கூட அகிம்சையை கடைபிடிக்க வேண்டும் என்பதே அதன் ஒட்டுமொத்த லட்சியம் ஆகும்," என்று கூறிய திரு நாயுடு, ஒரு அரசியல் கட்சி இன்னொரு கட்சியை போட்டியாளராக நினைக்கலாமே தவிர விரோதியாக கருதக்கூடாது என்றும் கூறினார்.

நாம் கனவு கண்ட இந்தியாவை கட்டமைப்பதற்கு, ஒன்றாக இணைந்து பணிபுரிவதற்கான ஊக்கத்தை காந்தியடிகளும், சர்தார் வல்லபாய் பட்டேலும் நமக்கு வழங்குகிறார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

வரலாற்றை மாற்றியமைத்த திருப்புமுனை என்று தண்டி யாத்திரையை வர்ணித்த திரு நாயுடு, வலிமையான மற்றும் தற்சார்பு மிக்க இந்தியாவை விடுதலையின் அம்ருத் மகோத்சவம் கட்டி எழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

இந்த சோதனையான கொவிட்-19 காலத்திலும் 53-க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பு மருந்தை வழங்கியதன் மூலம் காந்தியடிகளின் தத்துவத்தை இந்தியா தொடர்ந்து பின்பற்றுவதாக அவர் கூறினார்.

விவசாயிகளும் கொவிட் முன்கள வீரர்கள் தான் என்று குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.

வரவிருக்கும் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், 75 வாரங்கள் நடைபெற இருக்கும் 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்' கொண்டாட்டங்களை, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மார்ச் 12 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

கடந்த 75 வருடங்களாக இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை இந்த கொண்டாட்டங்கள் குறிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709901

-------



(Release ID: 1709944) Visitor Counter : 221