தேர்தல் ஆணையம்

கரீம்கஞ்சில் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்புடைய சம்பவம் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தும் அறிக்கை

Posted On: 02 APR 2021 12:44PM by PIB Chennai

1.   ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் 2021 ஏப்ரல் 1 அன்று துரதிருஷ்டவசமான விபத்து ஒன்றில் சிக்கினர். தலைமை அதிகாரி மற்றும் மூன்று தேர்தல் அலுவலர்கள் இதில் அடங்குவர். காவலர் ஒருவர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவரும் உடன் இருந்தனர்.

2. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகள் ஏபிஎஸ்ஐ லுஹித் கோஹைன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்போடு பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த மழையின் காரணத்தால் சாலைகளில் மண் தேங்கியிருந்தது.

3. மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளை கரிம்கஞ்சோடு இணைக்கும் ஒரே முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை 8, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் திரும்பிக் கொண்டிருந்ததால் சுமார் 1300 வாகனங்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.

4. மேற்கண்ட தேர்தல் குழுவினர் நீலம் பஜாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, துணை ஆணையர் அலுவலகத்தின் தேர்தல் பிரிவால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் 2021 ஏப்ரல் 1 அன்று இரவு சுமார் 9 மணியளவில் பழுதடைந்தது. வண்டியிலிருந்து இறங்கிய அதிகாரிகள் பகுதி அதிகாரியான திரு அஜோய் சூத்திரதாருக்கு தகவல் அளித்தனர். பகுதி அதிகாரி வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், தாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்திருந்த காரணத்தால், அதை ஒப்படைக்க வேண்டிய மையத்தை விரைவில் அடைய விரும்பி தாங்களே மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

5. சுமார் 9.20 மணி அளவில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வாகனமொன்றில் அது யாருடையது என்பதை தெரிந்து கொள்ளாமல் வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களோடு தேர்தல் அதிகாரிகள் ஏறினர். AS-10B-0022 என்ற எண்ணுடைய அந்த வாகனத்தில் அவர்கள் கரீம்கஞ்சில் உள்ள கனாய்ஷில்லை அடைந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, சுமார் 50 பேர் கொண்ட ஒரு  கும்பல் அவர்களை சுற்றி வளைத்து கற்களால் அடித்து, வசைபாடி வாகனத்தை முன்னேற விடாமல் தடுத்தனர். அந்த கும்பலின் தலைவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அருகிலுள்ள பதர்கண்டி தொகுதியில் போட்டியிடும் திரு கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமான வாகனம் அதுவென்றும் வாக்கு பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதற்காக அதை அதிகாரிகள் எடுத்துச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அப்போது தான் உணர்ந்து கொண்ட தேர்தல் அலுவலர்கள் பகுதி அதிகாரிக்கு உடனடியாக தகவல் அளித்தனர். ஆனால் பெரிய கும்பல் அதற்குள் கூடி அவர்களை தாக்க ஆரம்பித்தனர். வாகனம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தோடு அதிகாரிகளையும் அவர்கள் சுமார் 9. 45 மணி அளவில் பிடித்து வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு கருவியில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினர்

6. தகவல் கிடைத்தவுடன் கரிம்கஞ்ச் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சுமார் 11.20 மணிக்கு அங்கு சென்றனர். அதற்குள்ளாக அந்த வாகனத்தின் பதிவு விவரங்கள் கண்டறியப்பட்டன.

பதர்கண்டி தொகுதியில் போட்டியிடும் திரு கிருஷ்ணேந்து பாலின் மனைவி திருமதி மதுமிதா பாலின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டிருந்தது.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்த போது  தேர்தல் அலுவலர்களை வாகனத்திலிருந்து இழுத்து அவர்களை அக்கும்பல் தாக்க முயன்று கொண்டிருந்தது. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கல்லால் அடித்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் சிறிய அளவில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக வானத்தை நோக்கி சுடப்பட்டது. சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் முதல் தேர்தல் அதிகாரி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் மீதமுள்ள அலுவலர்கள் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டனர்.

சோதித்து  பார்த்தபோது வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் மற்றும் இதர உபகரணங்கள் பத்திரமாக இருந்ததும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததும் கண்டறியப்பட்டு பாதுகாப்புடன் கூடிய அறையில் அவை வைக்கப்பட்டன.

7. இரவு முழுவதும் நடைபெற்ற தேடுதலுக்கு பின்னரும், 2021 ஏப்ரல் 2 அன்று காலை வரை தலைமறைவான முதல் தேர்தல் அதிகாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்க சில மணி நேரங்கள் தாமதமானது.

8. இந்த சம்பவம் தொடர்பாக, விதிமுறைகளை மீறியதற்கான காரணங்களை விளக்க கோரி தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியும் மூன்று இதர அதிகாரிகளும் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சீல்கள் பத்திரமாக இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியில் மறு வாக்குப் பதிவு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பார்வையாளரிடமிருந்து அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

-------


(Release ID: 1709208) Visitor Counter : 218