பிரதமர் அலுவலகம்
இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
Posted On:
27 MAR 2021 9:45PM by PIB Chennai
வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில், வங்கதேச விடுதலையின் பொன்விழா கொண்டாட்டம், வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்ததினம், இந்தியா-வங்கதேசம் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்க இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 மார்ச் 26 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணம் இந்தியா-வங்கதேசம் இடையேயான அரை நூற்றாண்டு இருதரப்பு நல்லுறவின் அடையாளமாக உள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இந்திய பிரதமர், வங்கதேச அதிபர் மேதகு முகமது அப்துல் ஹமீதை 2021 மார்ச் 27ம் தேதி சந்தித்தார்.
2021 மார்ச் 26ம் தேதி நடந்த வங்கதேசத்தின் தேசிய தின நிகழ்ச்சி, பொன்விழா கொண்டாட்டம், முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் கலந்து கொண்டார்.
வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஏ.கே.அப்துல் மோமன், இந்தியப் பிரதமரை 2021 மார்ச் 26ம் தேதி சந்தித்தார்.
வங்கதேச சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, சாவரில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர்வளையம் வைத்தார் .
கோபல்கன்ஜ், துங்கிபாராவில் உள்ள வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
இந்தியா-வங்கதேசம் இடையோன கூட்டுறவு :
இரு நாட்டு பிரதமர்களும் 2021 மார்ச் 27ம் தேதி நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் மிகுந்த நட்புறவுடன் நடைப்பெற்றன. இருதரப்பு உறவு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
கொவிட் தொற்றுக்கு இடையிலும், வங்கதேசத்துக்கு நேரில் பயணம் மேற்கொண்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்தார். வங்கதேச விடுதலைப் போரில், இந்தியாவும், இந்திய மக்கள் அளித்த ஆதரவை பிரதமர் ஷேக் ஹசீனா பாராட்டி நன்றி தெரிவித்தார்.
வங்கதேத்தின் 50வது ஆண்டு சுதந்திர தினம் 50 வது ஆண்டு இந்திய-வங்கதேச தூதரக உறவுகள் ஆகியவற்றுக்காக அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பலதுறைகளில் இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு, பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, 2019 அக்டோபர் மாதம் மேற்கொண்ட இந்தியப் பயணம், கடந்த 2020 டிசம்பர் 17ம் தேதி நடந்த இருதரப்பு காணொலி கூட்டம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
இருநாட்டு அதிகாரிகளின் பயணம், சிறப்பான புரிதலை ஏற்படுத்தியதற்கும், பலதுறைகளில் ஒத்துழைப்பையும் அதிகரித்துள்ளதற்கும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
வரலாற்று தொடர்புகளின் கூட்டு கொண்டாட்டம்
வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமான் அவரது தைரியத்துக்காக எப்போது நினைவு கூறப்படுவார் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தலைநகர் தாக்காவில் ஷேக் முஜிபூர் ரகுமானின் டிஜிட்டல் கண்காட்சியை இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்தியா - வங்கதேசத்தின் 50-ம் ஆண்டு நட்புறவை முன்னிட்டு இரு நாடுகள் சார்பிலும் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.
1971ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வங்கதேசத்தை இந்தியா அங்கீகரித்தது. எனவே டிசம்பர் 6ம் தேதியை நட்பு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
ஷேக் முஜிபூர் ரகுமானின் வாழ்க்கை வரலாற்றை, இந்திய திரைப்பட இயக்குனர் ஷ்யாம் பெனகல் திரைப்படமாக உருவாக்குவது குறித்து இருதரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.
இந்தியக் குடியரசு தினவிழா அணிவகுப்பில் 2020-ல் வங்கேசத்தின் முப்படையை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றதை இருதரப்பினரும் பாராட்டினர்.
இருநாட்டு தூதரக உறவின் பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, 2022ம் ஆண்டு இந்தியா வரும்படி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
இந்திய கடற்படை கப்பல்கள் சுமேதா மற்றும் குளிஸ் ஆகியவை வங்கதேத்தின் மோங்லா துறைமுகத்துக்கு முதல் முறையாக சென்றதை இருதரப்பினரும் வரவேற்றனர். வங்கதேச கடற்படை கப்பலும் விசாகப்பட்டினம் வரவுள்ளது.
இந்தியாவில் கல்வி பயில வங்கதேச மாணவர்கள் 1000 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மத்திய அரசின் சுபர்னோ ஜெயந்தி திட்டத்தை வங்கதேசம் வரவேற்றது.
நீர் வளங்களில் ஒத்துழைப்பு
18. தீஸ்டா நதி நீர் பகிர்ந்து கொள்ளும் இடைக்கால ஒப்பந்தத்தை நிறைவு செய்ய வேண்டும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தினார். இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் இந்தியா உண்மையான உறுதியுடன் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இடைக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 6 நதிகளின் நீரை பகிர்ந்து கொள்ளும் திட்டத்தை விரைவில் முடிக்கும்படி இருநாட்டு நீர்வளத்துறை அமைச்சர்களுக்கும், இரு தலைவர்களும் உத்தரவிட்டனர்.
வளர்ச்சிக்கான வர்த்தகம்
இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க, வரித் தடைகளை நீக்க வேண்டும் என இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தினர்.
வங்கதேச நிறுவனங்களின் டெண்டர்களில், இந்திய நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. எல்லைப் பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, இரு நாட்டின் எல்லை பகுதிகளில் சந்தைகள் திறப்பதை இருநாட்டு தலைவர்களும் வரவேற்றனர்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு அதிகரிப்புக்கு இருதரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.
இந்தியா-வங்கதேச நட்புறவின் அடையாளமாக தொடங்கப்படும் சூப்பர் அனல் மின் நிலைய திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இருதரப்பினரும் ஆய்வு செய்தனர். இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பு
இரு நாடுகளிலும் கொவிட் தொற்று நிலவரம் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 3.2 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், 5 மில்லியன் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் அனுப்பியதற்காகவும், இந்திய அரசுக்கு வங்கதேசம் நன்றி தெரிவித்தது.
இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்:
1. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2 இரு நாட்டு என்சிசி மாணவர் படையினருக்கு இடையேயான ஒப்பந்தம்.
3. இந்தியா -வங்கதேசம் இடையிலான வர்த்தக தீர்வு நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. வங்கதேசம் - பாரத் டிஜிட்டல் சேவை மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. ராஜ்சாகி கல்லூரி பகுதி மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம்.
இருநாட்டு பிரதமர்களும் கீழ்கண்டவற்றை அறிவித்தனர்/ தொடங்கிவைத்தனர்.
1. இந்தியா - வங்கதேச தூதரக உறவுகளின் 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் இரு நாடுகளும் நட்பு தபால்தலைகளை வெளியிட்டன.
2. 1971ம் ஆண்டு விடுதலைப்போரில் உயிர்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரம்மன்பாரியா பகுதியில் அசுகன்ஜ் என்ற இடைத்தில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
3. ரூபர் மின் சக்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
4. இந்தியா-வங்கதேச எல்லையில் 3 சந்தைகள் தொடங்கிவைக்கப்பட்டன.
5. குதிபாரி பகுதியில் ரவீந்திர பவன் தொடங்கிவைக்கப்பட்டது.
6. தாகா - நியூ ஜல்பைகுரி - தாகா வழித்தடத்தில் ‘மிதாலி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
7. முஜிப்நகர் மற்றும் நாடியா இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க சாலை இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் சிறந்த வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708132
*****************
(Release ID: 1708212)
Visitor Counter : 344
Read this release in:
Hindi
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam