பிரதமர் அலுவலகம்
பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் மூன்றாவது ஆண்டு மாநாட்டில் பிரதமரின் உரை
Posted On:
17 MAR 2021 4:59PM by PIB Chennai
ஃபிஜி பிரதமர்,
இத்தாலி பிரதமர்,
இங்கிலாந்து பிரதமர்,
மேதகு பெருமக்கள்,
அரசுகளில் பணியாற்றுவோர், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார்துறையினர்.
சிடிஆர்ஐ என்று அழைக்கப்படும் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் மூன்றாவது ஆண்டு மாநாடு முன்னெப்போதும் இல்லாத சூழலில் நடைபெறுகிறது.
நூறாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் பேரிடர் என்று கருதப்படும் நிகழ்வை நாம் சந்தித்து வருகிறோம். ஒருவரை ஒருவர் சார்ந்து, இணைந்து செயல்படும் உலகில் வளமிக்க அல்லது ஏழ்மை நிலையிலுள்ள, கிழக்கு அல்லது மேற்கு, வடக்கு அல்லது தெற்கில் அமைந்துள்ள எந்த நாடும் சர்வதேச பேரிடர்களின் தாக்கத்திலிருந்து தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கருத முடியாது என்பதை கொவிட்-19 பெருந்தொற்று கற்றுத்தந்துள்ளது.
இரண்டாம் நூற்றாண்டில் இந்திய அறிஞரான முனிவர் நாகார்ஜுனா, சார்ந்திருக்கும் போக்கு குறித்து எழுதியிருந்தார். மனிதர்கள் உட்பட அனைத்து பொருட்கள் இடையேயான இணைப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். இயற்கை மற்றும் சமூக உலகில் மனித வாழ்வு எவ்வாறு விரிவடைகிறது என்பதை இந்தப் படைப்பு வெளிப்படுத்துகிறது.
இந்த பழங்கால ஞானத்தின் உள் கருத்தை நாம் புரிந்துகொண்டால் தற்போதைய சர்வதேச அமைப்பின் பாதிப்புகளை நம்மால் குறைக்க முடியும். ஒருபுறம் அதன் தாக்கம் எவ்வாறு உலகெங்கும் விரைவாகப் பரவக் கூடும் என்பதை பெருந்தொற்று எடுத்துரைத்துள்ளது. மற்றொரு புறம், பொதுவான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உலக நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதை பெருந்தொற்று எடுத்துக்காட்டியுள்ளது.
மிகக் கடினமான பிரச்சினைகளுக்கும் மனிதனின் புத்திக்கூர்மை எவ்வாறு தீர்வு காணும் என்பதை நாம் கண்டோம். மிகக் குறுகிய காலத்தில் நாம் தடுப்பூசிகளை உருவாக்கினோம். சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய கண்டுபிடிப்புகள் எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாகலாம் என்பதை பெருந்தொற்று எடுத்துக்காட்டியுள்ளது.
இதற்காக, உலகின் அனைத்துப் பகுதிகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச சூழலை உருவாக்குவதோடு தேவை ஏற்படும் பகுதிகளுடன் அவற்றை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
2021-ஆம் ஆண்டு, பெருந்தொற்றிலிருந்து விரைவில் மீள்வதற்கான உறுதியை வழங்கும்.
எனினும் பெருந்தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக்கூடாது. பொது சுகாதார பேரிடர்களுக்கு மட்டுமல்லாமல் இதர பேரிடர்களுக்கும் அவை பொருந்தும்.
பருவநிலை நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் தலைவர் அண்மையில் தெரிவித்தவாறு, “பருவநிலை நெருக்கடிக்கு எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை”. பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நிலையான மற்றும் ஒற்றுமையான நடவடிக்கைகள் தேவைப்படும். ஏற்கனவே உலகமெங்கும் உள்ள சமூகங்களை பாதிக்கும் மாற்றங்களுக்கு தகுந்தவாறு நாம் மாற வேண்டும். அந்த வகையில் இந்த கூட்டணியின் முக்கியத்துவம் இன்றியமையாததாகிறது.
உள்கட்டமைப்பில் முதலீடுகளை நெகிழ் திறன் வாய்ந்ததாக மாற்றுவதற்கு நம்மால் முடிந்தால், நமது நடவடிக்கைகளின் மையப்புள்ளியாக அது மாறும். இந்தியாவைப் போன்று உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகள், இது நெகிழ்திறனுக்கான முதலீடு என்பதையும் இடர்பாடுகளுக்கானது அல்ல என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், இது வளர்ந்து வரும் நாட்டின் பிரச்சனை மட்டுமே அல்ல என்பதை அண்மை வாரங்களின் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த மாதம்தான் உரி என்ற குளிர் புயல், அமெரிக்காவின் டெக்சாஸின் மின்சார உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பகுதியை பெரிதும் பாதித்தது. சுமார் 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இது போன்ற நிகழ்வுகள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். இதன் முக்கிய காரணம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இது போன்ற நிகழ்வுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கப்பல் இணைப்புகள், விமான இணைப்புகள் போன்ற ஏராளமான உள்கட்டமைப்பு அமைப்புகள் மூலம் உலகம் முழுவதையும் இணைப்பதால் உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் பேரிடரின் பாதிப்பு உலகம் முழுவதும் விரைவாக பரவக்கூடும். சர்வதேச அமைப்பின் நெகிழ்திறனை நிலைநாட்டுவதில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
நீண்ட காலத்திற்காக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இதனை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையும் பேரிடர்களில் இருந்து நாம் தடுக்கலாம். ஒரு பாலம் இடிந்து விழுந்தால், தொலைத்தொடர்பு கோபுரம் விழுந்தால், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது பள்ளிக்கட்டிடம் இடிந்தால் இதனால் ஏற்படும் பாதிப்பு நேரடியானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த பாதிப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இடர்பாடுகள் முதல் சிறிய வர்த்தகங்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி தடைபடுதல் போன்ற மறைமுகமான பாதிப்புகள் ஏராளம். சூழலின் ஒட்டுமொத்த மதிப்பீட்டிற்காக சரியான கணக்கிடும் முறை நமக்குத் தேவை. நமது உள்கட்டமைப்பை நெகிழ் திறன் வாய்ந்ததாக மாற்ற முடிந்தால், நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகள் குறைக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படும்.
சிடிஆர்ஐ-இன் உருவாக்க காலங்களில் இந்தியாவுடன் இங்கிலாந்து தலைமை வகித்ததற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
2021-ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். நிலையான வளர்ச்சி இலக்குகள், பாரிஸ் ஒப்பந்தம், சென்டாய் கட்டமைப்பு ஆகியவற்றின் மையப் புள்ளியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டின் பின் பகுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகள் நடத்தவுள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு பற்றிய எதிர்பார்ப்பு மிகவும் உயர்வாக உள்ளது. நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மீதான இந்தக் கூட்டணி, இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
இந்த வகையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய மிக முக்கிய துறைகள் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, “ஒருவரையும் பின்தங்கவிடக்கூடாது” என்ற நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கிய உறுதிமொழியை பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி எடுத்துரைக்க வேண்டும். அதாவது அதிக பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இந்த வகையில் மிக மோசமான பேரிடர்களின் தாக்கங்களை ஏற்கனவே அனுபவித்து வரும் சிறிய தீவுகள் வளர்ந்து வரும் நாடுகள், அனைத்துத் தொழில்நுட்பங்கள், அறிவுசார் மற்றும் உதவிகளை எளிதாக பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.
உள்ளூர் பகுதிகளுக்கு ஏற்றவாறு சர்வதேச தீர்வுகளை மாற்றிமைப்பதற்கான செயல்திறனையும் ஆதரவையும் நாம் பெற வேண்டும்.
இரண்டாவதாக, முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் செயலாற்றல் குறித்து நாம் அலசி ஆராய வேண்டும். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் முக்கிய பங்கு வகித்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைகள். இந்தத் துறைகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? இவற்றை எதிர்காலத்திற்கு தகுந்தவாறு எவ்வாறு நெகிழ்திறன் வாய்ந்ததாக மாற்றுவது? தேசிய மற்றும் துணை தேசிய அனைத்து உள்கட்டமைப்பு துறைகளிலும் ஒருங்கிணைந்த திட்டத்திற்கான செயல்திறன், அமைப்புசார் வடிவமைப்பு, நவீன பொருட்களின் பயன்பாடு, அதிக எண்ணிக்கையிலான திறன்வாய்ந்த ஊழியர்கள் முதலியவற்றில் நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தேவைகள் உள்ளது.
மூன்றாவதாக, நெகிழ்திறன் குறித்த நமது தேடுதலில் எந்த ஒரு தொழில்நுட்ப முறையும் மிகவும் சாமானியமானது அல்லது மிகவும் மேம்பட்டது என்று கருதப்படக் கூடாது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு பற்றிய செயல் விளக்கங்களை பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி அதிகரிக்க வேண்டும். நில அதிர்வுகளை குறைக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை இந்திய மருத்துவமனைகளில் முதன்முறையாக குஜராத்தில் நாம் உருவாக்கினோம். தற்போது நிலநடுக்க பாதுகாப்பிற்கான இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில் நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நெகிழ் திறனை உருவாக்குவதற்காக புவி விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட செயல் திறன்கள், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருள் அறிவியல் போன்றவற்றின் செயல் திறனை முழுமையாக பயன்படுத்தி உள்நாட்டு அறிவுடன் அவற்றை இணைக்க வேண்டும்.
இறுதியாக, “நெகிழ்திறன் உள்கட்டமைப்பு” என்ற கருத்து, வல்லுநர்கள், முறைசார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, சமூகங்களையும் குறிப்பாக இளைஞர்களின் ஆற்றலையும் உள்ளடக்கிய மாபெரும் இயக்கமாக மாற வேண்டும். நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சமூக தேவை, தரங்களின் இணக்கத்தை மேம்படுத்தும்.
பொதுமக்களிடையேயான விழிப்புணர்வு, கல்வி போன்றவற்றில் முதலீடு செய்வது இந்த முயற்சியின் முக்கிய அம்சமாகும். உள்நாட்டில் ஏற்படக்கூடிய அபாயங்கள், உள்கட்டமைப்பு மீதான அதன் பாதிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை நமது கல்விமுறை ஏற்படுத்த வேண்டும்.
நிறைவாக, சிடிஆர்ஐ தனக்குத் தானே சவால் மிக்க மற்றும் அவசர நிகழ்வை உருவாக்கியிருப்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதன் முடிவுகளை வெகுவிரைவில் செயல் விளக்கம் வாயிலாக தெரிவிக்குமாறு எதிர்பார்க்கப்படும். அடுத்த புயலின் போது, அடுத்த வெள்ளத்தின் போது, அடுத்த நிலநடுக்கத்தின் போது, நமது உள்கட்டமைப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருந்ததால் இழப்புகளை நம்மால் குறைக்க முடிந்தது என்று கூறும் நிலையில் நாம் இருக்க வேண்டும்.
பாதிப்புகள் ஏற்பட்டால் சேவைகளை துரிதமாக முடுக்கிவிட்டு, மீண்டும் வலுவாக எழவேண்டும். நெகிழ்திறன் தொடர்பான நமது தேடலில் நாம் அனைவரும் ஒரே படகில் பயணிக்கிறோம்! பெருந்தொற்று நினைவூட்டியவாறு, ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கும் வரையில் ஒருவரும் பாதுகாப்பாக இல்லை.
எந்த ஒரு சமூகமும், ஒரு பகுதியும் ஒரு சூழலியலும், ஒரு பொருளாதாரமும் பின்தங்கவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம், 7 பில்லியன் உலக மக்களின் ஆற்றலை ஒன்றிணைத்தவாறு, நெகிழ்திறனுக்கான நமது தேடல், இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் முன்முயற்சி மற்றும் கற்பனையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
------
(Release ID: 1705617)
Visitor Counter : 274
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam