பிரதமர் அலுவலகம்

‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமர் உரை


ஷில்லாங்கின் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மக்கள் மருந்தகத் திட்டம் ஏழைகளை அதிக மருத்துவ செலவுகளில் இருந்து விடுவித்துள்ளது: பிரதமர்

மக்கள் மருந்தகங்களிலிருந்து குறைந்தக் கட்டணத்தில் மருந்துகளை வாங்குமாறு மக்களுக்கு கோரிக்கை

நீங்கள் எனது குடும்பத்தினர், உங்களுக்கு உடல் நலிவு ஏற்படுவது எனது குடும்பத்தாருக்கு ஏற்படுவதைப் போல, அதனால் தான் எனது நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்: பிரதமர்

Posted On: 07 MAR 2021 12:18PM by PIB Chennai

மக்கள் மருந்தக தினகொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகத் திட்ட பயனாளிகளுடன் அவர் உரையாற்றினார்.

பங்குதாரர்களின் சிறப்பான பணியை அங்கீகரித்து அவர்களுக்கு விருதுகளையும் பிரதமர் வழங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு டி வி சதானந்த கவுடா, திரு மன்சுக் மாண்டவியா, திரு அனுராக் தாகூர், ஹிமாச்சல பிரதேசம், மேகாலயாவின் முதலமைச்சர்கள், மேகாலயா, குஜராத் மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிம்லா, இமாச்சலப் பிரதேசம்; போபால், மத்தியப் பிரதேசம்; அகமதாபாத், குஜராத், மாருதி நகர், டையு, மங்களூர், கர்நாடகா ஆகிய 5 பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுமாறு பயனாளிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதால் போதுமான மருந்துகளை நோயாளிகள் பெற்று, சிறந்த ஆரோக்கியத்திற்கான பலன்களைப் பெறுவதாக அவர் கூறினார்.

மக்கள் மருந்தக இயக்கத்தை ஊக்குவிக்கும் இளைஞர்களைப் பாராட்டிய அவர், தடுப்பூசி வழங்கும் திட்டத்திலும் அவர்கள் உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மக்கள் மருந்தகங்களின் பயன்களை பற்றி உலகறிய எடுத்துச் சொல்லுமாறும் பயனாளிகளை பிரதமர் வலியுறுத்தினர்.

நீங்கள் எனது குடும்பத்தினர், உங்களுக்கு உடல் நலிவு ஏற்படுவது எனது குடும்பத்தாருக்கு ஏற்படுவதைப் போல, அதனால் தான் எனது நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்”, என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மக்கள் மருந்தகத் திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாக கூறினார். சேவை மற்றும் வேலைவாய்ப்பின் ஊடகமாக வளர்ந்து வருகிறது.

ஷில்லாங்கில் 7500-வது மக்கள் மருந்தக மையம் அர்ப்பணிக்கப் பட்டிருப்பது, வடகிழக்குப் பகுதியில் மக்கள் மருந்தக மையங்களின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் மலைவாழ் பகுதிகள், வடகிழக்கு மற்றும் பழங்குடியின  பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருந்துகள் வழங்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தியாவில் நூற்றுக்கும் குறைவான மையங்கள் மட்டுமே செயல்பட்டதால் 7500-வது மையம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.‌

இவை 10,000 மையங்களாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர், அதிக விலையிலான மருந்துகளில் ஆண்டுக்கு ரூ. 3,600 கோடியை சேமிக்கின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் பெண்களால் இயக்கப்படுவதால் இந்தத் திட்டம் பெண்களிடையே தற்சார்பை ஊக்குவிப்பதாக அவர் கூறினார். இந்த திட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை, ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும்தலித், ஆதிவாசி பெண்கள் மற்றும் வடகிழக்கு பகுதி மக்களுக்குக் கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான தேவைகள் அதிகரித்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியும் அதிகரித்து வருகின்றது. அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது 75 ஆயுஷ் மருந்துகளும் மக்கள் மருந்தகங்களில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஆயுஷ் மருந்துகளைக் குறைந்த விலையில் பெற்று மக்கள் பயனடைவதுடன், ஆயுர்வேதம் மற்றும் ஆயுஷ் மருந்துகள் துறையும் பயனடையும்.

நீண்ட காலங்களாக மருத்துவ சிகிச்சையை வெறும் நோய்கள் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடையதாகவே அரசு கருதி வருகிறது. எனினும் சுகாதாரம் என்பது வெறும் நோய் மற்றும் சிகிச்சையுடன் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பையும் அது பாதிக்கிறது.

சுகாதாரத்தில் முழுமையான அணுகுமுறையை வழங்குவதற்காக நோய் ஏற்படுவதற்கான காரணியிலும் அரசு கவனம் செலுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

தூய்மை இந்தியா திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், இந்திரதனுஷ் திட்டம், ஊட்டச்சத்து திட்டம், யோகாவிற்கான அங்கீகாரம் போன்றவை ஆரோக்கியத்தை நோக்கிய அரசின் முழுமையான அணுகுமுறையை எடுத்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.

 2023ஆம் வருடத்தை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அங்கீகரித்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தினை வகைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஊட்டச்சத்துமிக்க உணவு தானியங்கள் கிடைப்பதுடன் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானமும் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது மிகப் பெரும் சுமை என்று குறிப்பிட்ட பிரதமர், அண்மைக் காலங்களில் சிகிச்சையில் ஏற்படும் அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நாட்டின் ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். இதற்காக அத்தியாவசிய மருந்துகளின் விலைகள், இருதய ஸ்டென்ட்கள், மூட்டு அறுவை சிகிச்சை தொடர்பான உபகரணங்கள் ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

 இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 1.5 கோடி மக்கள் பயனடைந்து ஏறத்தாழ ரூ. 30,000 கோடியை சேமித்துள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிய விஞ்ஞானிகளைப் பாராட்டியதுடன், உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு உதவுவதற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் பயன்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் அரசு குறிப்பாக கவனத்தில் கொண்டிருந்ததாக அவர் கூறினார். இந்தத் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணமாக ரூ.250-இம் வழங்கப்படுகிறது.

ஆற்றல் வாய்ந்த சிகிச்சை மற்றும் தரமான மருத்துவ பணியாளர்களின் சேவைகளை பெறுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை பிரதமர் வலியுறுத்தினார்.

கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மூன்றாம் தர மருத்துவமனைகள் எய்ம்ஸ் போன்ற மருத்துவ கல்லூரிகள் வரை சுகாதார உள்கட்டமைப்பை நீடித்து முழுமையான அணுகுமுறையை வழங்கும் பணியை அரசு தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் மருத்துவ அமைப்பை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு 55,000-ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் கூடுதலாக 30,000-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.‌

அதேபோல் 30,000-ஆக இருந்த முதுநிலை படிப்புகளுக்கான இடங்களுடன் புதிதாக 24,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆறு ஆண்டுகளில் புதிதாக 180 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் 50,000 மையங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன.

இந்த மையங்களில் கடுமையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதுடன், உள்ளூர் மக்களுக்கு  அதிநவீன பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

 மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு மிகப் பெரும் தொகை ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய திரு மோடி, மருத்துவ பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை ஏற்படுவதற்காக பிரதமர் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் குறித்து பேசினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில், அனைவரும் எளிதில் பெறும் வகையில் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தற்போது மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.

 இந்த எண்ணத்துடன் கொள்கைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டங்களின் இணைப்பு விரைந்து நீட்டிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடையும் என்றும் அவர் கூறினார்.

-------(Release ID: 1703009) Visitor Counter : 214